இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 7 : கடலாண்ட காவலர்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம்-தொடர்ச்சி)
தமிழர் வீரம் 7
கடலாண்ட காவலர்
சேரன் காலாட்படை
தமிழ் நாட்டு மூவேந்தரும் நிலப்படையோடு கப்பற் படையும் உடையராய் இருந்தனர். சேரநாட்டை யாண்ட செங்குட்டுவன் கப்பற்படையின் வலிமையால் பகைவரை வென்று “கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்”1 என்று புகழ் பெற்றான். அவன் தந்தையாகிய நெடுஞ்சேரலாதன் கலப்படையெடுத்துக் கடம்பர் என்ற கடற்பகைவரை வென்றான்.
கடற் கடம்பர்
இப்பேரரசர் இருவரும் தமிழ் நாட்டு வாணிக வளத்தைப் பாதுகாக்கக் கருதியே கடற்போர் புரிந்தனர் என்று தோற்றுகின்றது. அவர் காலத்தில் கடல் வழியாக நிகழ்ந்த வருத்தகத்தால் சேரநாடு சாலவும் வளமுற்றிருந்தது. அந் நாட்டில் அமைந்த முசிறி என்னும் துறைமுகம் உலகறிந்த நகரமாய் விளங்கிற்று. யவன நாட்டிலிருந்தும், அரேபியாவிலிருந்தும், எகிப்து நாட்டிலிருந்தும் வருத்தகக் கப்பல்கள் வந்த வண்ணமாயிருந்தமையால், அத் துறை, “வளங்கெழு முசிறி“2 யாக விளங்கிற்று. ஆயினும், கடற்கொள்ளை அங்கு அடிக்கடி நிகழ்ந்துவந்தது. மேல் கடலின் இடையே அமைந்த வெள்ளைத் தீவைத் தம் இருப்பிடமாகக் கொண்டனர் இக் கொள்ளைக்காரர்3. அவர் அடித்த வழிப்பறியால் சேரமன்னர் ஆட்சிக்கு இழுக்குண்டாயிற்று. கலமேறிய சரக்கு கரை சேர வேண்டுமே என்ற கவலை வருத்தகர் மனதைக் கலக்கியது. இவ்வாறு கடற் கொள்ளையடித்துச் சேர நாட்டுக்குக் கேடிழைத்தவர் கடம்பர். அக் கள்வரை ஒறுத்து, அவர் கலங்களை அறுத்துச் சேரலாதனும் செங்குட்டுவனும் வருத்தக வளத்தினைப் பாதுகாத்தனர்.
சோழர் கடலாட்சி
சோழநாட்டுக் கப்பற்படையும் சாலப் பழமை வாய்ந்தது. கரிகால்வளவன் காலத்திற்கு முன்னே காவிரி நாட்டை யாண்ட சோழன் ஒருவன் கடலாட்சி புரிந்தான் என்பது ஒரு பழம்பாட்டால் விளங்குகின்றது. கடற்காற்றை ஏவல் கொண்டு கப்பலோட்டிய அக் காவலனை,
“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன்” என்று புகழ்ந்தது தமிழ்க்கவிதை.4
திருமாவளவன்
இமயமலையிற் புலிக்கொடியேற்றிப் புகழ்பெற்ற திருமாவளவன் இலங்கையிலும் அக்கொடியை நாட்ட விரும்பினான்; கலப்படை எடுத்தான்; கடல் கடந்தான்; இலங்கை அரசனோடு போர் புரிந்து வென்றான்; பன்னீராயிரம் சிங்களவரைச் சிறை செய்து தமிழ் நாட்டிற்குத் திரும்பினான் என்று இலங்கைப் பழங்கதை கூறுகின்றது.
சில நூற்றாண்டுகள் சென்றன. தஞ்சையைத் தலைநகராக்க் கொண்ட சோழர் குலம் தலை எடுத்தது. அவர்க்குரிய நிலப்படையும் கலப்படையும் வலுப்பட்டன. பராந்தகசோழன் இலங்கையின்மீது படையெடுத்தான்; சிங்களச் சேனையை வென்றான்; அரசனைக் கொன்றான்; சிங்களாந்தகன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றான்.
இராச ராசன்
அச்சோழன் வழி வந்த பெருவேந்தன் இராச ராசன். அவனும் கடலாட்சியில் கருத்தூன்றினான்; கப்பற் படையைச் செப்பம் செய்தான்; தமிழ்க்கடல் முழுதும் தானே ஆளக் கருதினான்; சேர மன்னனுக்குரிய கப்பற்படை நிலையத்தைக் கடல் வழியாகச் சென்று தாக்கினான். காந்தளூர்ச் சாலையின் அருகே இரு திறத்தார்க்கும் கடற்போர் நிகழ்ந்தது. சோழன் வெற்றி பெற்றான்; கடலாதிக்கத்திற்கு அடிகோலினான்.
இலங்கையில் வெற்றி
தமிழகத்தைச் சேர்ந்த குணகடல், குடகடல் ஆகிய இரு கடல் ஆட்சியும் பெற்ற இராச ராசன் இலங்கையின் மீது சென்றான். அத் தீவகத்தின் தலைநகரம் அநுராதபுரம். அங்கிருந்து அரசு புரிந்தான் மகிந்தன் என்னும் மன்னன். அவனைத் தாக்கினான் தமிழ் வேந்தன். தமிழ்ப் படையின் முன்னிற்கமாட்டாது ஈழப்படை உலைந்து ஓடிற்று. இலங்கை வேந்தனும் மனங்கலங்கித் தலைநகரை விட்டு அகன்றான். ஆயிரம் ஆண்டுகளாக இலங்கையின் தலை நகராயிருந்த அநுராதபுரம் அழிவுற்றது. ஈழநாட்டிலே தமிழ்க் கொடியை நாட்டினான் சோழன்; அந்நாட்டுக்கு மும்முடிச் சோழமண்டலம் என்று பெயர் இட்டான். சோழர் ஆட்சிக்கு உட்பட்ட மாகாணங்களில் அம் மண்டலமும் ஒன்றாயிற்று. கேடுற்ற அநுராதபுரத்தைக் கைவிட்டு இராசராசன் பொலனருவை என்னும் ஊரைத் தலைநகராக்கினான்; அங்குத் தன் வெற்றியின் சின்னமாக ஒரு சிவாலயம் கட்டினான். தமிழ் நாட்டுக் கட்டுமான முறையில் அமைந்த அக் கற்கோவில் ‘சிவ தேவாலயம்’ என்ற பெயரோடு இன்றும் அவ்வூரில் விளங்குகின்றது.5
இராசேந்திரன்
இவ்வாறு சோழ மன்னன் இலங்கையைத் தமிழ் நாட்டுடன் இணைத்து ஆள விரும்பினானெனினும் ஈழத்தரசன் ஊக்கம் இழந்தானல்லன்; வாகைமாலை சூடிய தமிழ் வேந்தன் திரும்பிச் சென்றதையறிந்து கரந்திருந்த இடத்தினின்றும் வெளிப்பட்டான்; பெரும் படை திரட்டினான்; சோழனது நிலப் படையைத் தாக்கினான்.
அதையறிந்தான் இராசேந்திர சோழன். இவன் இராச ராசனுடைய வீரமைந்தன். தந்தையைப் போலவே அவனும் இலங்கையின் மேற் படையெடுத்தான்; சிங்களப் படையை வென்றான்; மகிந்தனுக்குரிய மணி முடியையும் பொன் னணியையும் கவர்ந்தான்; அவனையும் சோழ நாட்டிற்குக் கொண்டு சென்றான்.
ஆயினும், இலங்கைப் போர் ஒடுங்கவில்லை. நாட்டுரிமையில் வேட்கையுற்ற இலங்கையர், மகிந்தன் மகனாகிய இளம்பாலனை மறைவிடத்தில் வைத்து வளர்த்தார்கள்; மகிந்தன் தமிழ் நாட்டில் இறந்தான் என்றறிந்தபோது அம் மைந்தனை இலங்கையில் மன்னனாக்கினார்கள். அது முதல் ஈழப்படைக்கும் சோழப்படைக்கும் நெடும்போர் நிகழ்ந்தது. ஈழத்தரசர் பாண்டிய மன்னரோடு உறவுகொண்டார்கள். ஆயினும் தமிழ் நாட்டில் சோழர் ஆதிக்கம் நிலைகுலையும் அளவும் இலங்கையில் புலிக்கொடி பறந்து கொண்டிருந்தது.
கடாரம் கொண்ட சோழன்
இன்னும், கடல் சூழ்ந்த பல நாடுகளையும் வென்று வீரப்புகழ் பெற்று விளங்கினர் சோழ மன்னர். இந்து மகா சமுத்திரம் என இந்நாளில் வழங்கும் பெருங்கடலில் வளமார்ந்த தீவங்கள் பல உண்டு. அவற்றுள் பன்னீராயிரம் பழந் தீவுகளை இராசராசன் கடற்படையால் வென்று கைப்பற்றினான். அவன் மைந்தன் இராசேந்திரன் “அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்திய” பேரரசன். நிக்கபார் என்று இக்காலத்தில் வழங்கும் மாநக்கவாரம் அப்பொழுது தேனடைந்த சோலைத் தீவகமாய் விளங்கிற்று. அதைக் கைக்கொண்டான் இராசேந்திரன். இன்னும் சாவக நாட்டை6 யடுத்துள்ள சுமத்திரா என்னும் தீவிலும் முற்காலத்தில் தமிழர் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஊர்ப் பெயர்கள் ஒரு சான்று. மலையூர் என்பது இங்கே சிறந்திருந்த ஓர் ஊர். அவ்வூரைத் தன்னகத்தேயுடைய நாட்டுப் பகுதியும் மலையூர் என்று பெயர் பெற்றது.
அந்நிலப் பகுதியில் ஓடிய ஆறும் மலையூர் எனப்பட்டது. எனவே, ஆதியில் தமிழர் ஊருக்கமைந்த பெயர், பின்னர் நாட்டுக்கும் நதிக்கும் முறையே அமைந்ததென்று தோன்றுகின்றது. அத்தீவகத்திலுள்ள மற்றோர் ஊரின் பழம் பெயர் பண்ணை என்பது. இப்பொழுது அச்சொல் பன்னி என்றும், பனி என்றும் மருவியுள்ளது. இவ்வூர்களையுடைய தீவகத்தை இராசேந்திரன் கப்பற்படையால் வென்று கைக்கொண்டான்
மலைவளம் சுரக்கும் மலாய் நாட்டிலும் தமிழர் வாழ்ந்த இடங்களை அவற்றின் பெயர்களே காட்டும். காழகம் என்பது அந்நாட்டின் ஒரு பகுதி. பழங்காலத்தில் காழகத்தில் விளைந்த பொருள் கடல்வழியாகக் காவிரிப் பூம்பட்டினத்தில் வந்து இறங்கியது.7 அதுவே கடாரம் என்றும், கேடம் என்றும் நாளடைவில் மருவி வழங்குவதாயிற்று. இப்பொழுது கெடா என்ற பெயரால் குறிக்கப்படும் நாடு அதுவே. இன்னும், தக்கோலம் என்பது மலாய் நாட்டிலுள்ள ஓர் ஊரின் பெயர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அங்குத் தமிழர் வருத்தக வளம் பெற்று வாழ்ந்தார் என்பது சாசனத்தால் விளங்கும். இவ்வூர் தக்கோபா என்று இக்காலத்தில் வழங்கும்.
இராசேந்திரசோழன் கடாரம் முதலிய நாடுகளைக் கப்பற்படையால் வென்றான்; அவ்வெற்றிச் சிறப்பு விலங்கும் வண்ணம் ‘கடாரம் கொண்டான்‘ என்னும் விருதுப் பெயரும் பூண்டான். கலப்படைத் திறத்தால் கடலாண்ட அக் காவலனை,
“தேனக்க வார்பொழில் மாநக்க வாரமும் தொடுகடற் காவல் கடுமுரண் கடாரமும் மாப்பொரு தண்டாற் கொண்டகோப் பரகேசரி”என்று சாசனம் பாடிற்று.
ஆகாய விமானம்
ஆகாய விமானமும் தமிழ் இலக்கியத்திலே குறிக்கப்படுகின்றது. விமானத்தை வானஊர்தி என்றும், அதனைச் செலுத்தும் பாகனை வலவன் என்றும் அழைத்தனர் பழந் தமிழர். காட்சிக்கினிய மயில் வடிவத்தில் அமைந்த ஒரு விமானத்தின் மாட்சியைச் சிந்தாமணி கூறுகின்றது. அதன் விசையை வலப்புறமாகக் கைவிரலால் அசைத்தால் விமானம் கிளர்ந்தெழுந்து பறக்கும்; மேக மண்டலத்துக்கு மேலும் செல்லும்; இடப்புறமாக அசைத்தால் கால் குவித்து இறங்கித் தரையிலே நிற்கும்.8
இத்தகைய விமானத்தை இயக்கக் கற்றிருந்தாள் ஒரு மங்கை; அவள் கணவன் ஓர் அரசன். அவனைத் தாக்கினார் பகைவர். கருவுற்றிருந்த அரசியை மயில் விமானத்தில் ஏற்றி வெளியேற்றினான் மன்னன். கணவன் கருத்தை மறுக்க மாட்டாமல் அப் பொறியை இயக்கினாள் அப் பாவை அவள் கரம் விசையில் இருந்தாலும் மனம் கணவனையே நோக்கிற்று. மயில் முன்னே இழுக்க, மனம் பின்னே இழுக்க, ஒருவாறு பறந்து கொண்டிருந்தாள் அவள். அந்நிலையில் பகைவரது வெற்றி முரசம் அதிர்ந்தது. மங்கை கலங்கினாள்; கை சோர்ந்தாள. இயக்கமிழந்த விமானம் கீழ்நோக்கிச் சென்றது’ ஒரு மயானத்தில் விழுந்தது. அதிர்ச்சியால் மயக்கமுற்றுக் கிடந்த மாதரசி அங்கு ஓர் ஆண் மகவைப் பெற்றாள். அவனே சீவகன்; சிந்தாமணியின் கதாநாயகன்.
தூங்கெயில்
ஆகாயத்தில் பறந்து செல்லும் கோட்டை போன்ற பெரிய விமானமும் அந்நாளில் இருந்ததாகத் தெரிகின்றது. தூங்கெயில் என்பது அதன் பெயர்9. தூங்கெயில் ஊர்ந்து துயர் விளைத்த கொடும் பகைவரை வென்றான் ஒரு சோழ மன்னன்; அவரது ஆகாயக் கோட்டையைத் தகர்த் தெறிந்தான்; “தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்” என்று தமிழகம் அவனை வியந்து புகழ்ந்தது.10 எப்படையால் அவன் ஆகாயக் கோட்டையைத் தகர்த்தான் என்பது இப்பொழுது தெரியவில்லை. எனினும், புலவர் பாடும் புகழுடைய பழந்தமிழ் வேந்தருள் அவன் தலைசிறந்தவன் என்பதில் ஐயமில்லை.
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை), தமிழர் வீரம்
++++++++++++++++++++++++
குறிப்பு
1. பதிற்றுப்பத்து, ஐந்தாம் பத்துப் பதிகம்; புறநானூறு 369.
2. அகநானூறு, 149.
3. சேரன் வஞ்சி, 5.
4. புறநானூறு, 65.
5. சோழர், முதற் பகுதி, 206.
7. ‘ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும் – பட்டினப்பாலை
8. சிந்தாமணி, நாமகள் இலம்பகம், 235.
9. தூங்கெயில் என்பதற்கு நேரான ஆங்கிலச் சொல் Flying fortress என்பதாகும். சென்ற பெரும் போரில் அது கையாளப்பட்டது.
10. ” தூங்கெயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்” – சிறுபாணாற்றுப்படை, 80-81.
Comments
Post a Comment