தமிழ் வளர்த்த நகரங்கள் 9 – அ. க. நவநீத கிருட்டிணன்: நாயக்கர் அணிசெய்த மதுரை
(தமிழ் வளர்த்த நகரங்கள் 8 – அ. க. நவநீத கிருட்டிணன்: இலக்கிய மதுரை 2/2-தொடர்ச்சி)
தமிழ் வளர்த்த நகரங்கள் 9
- நாயக்கர் அணிசெய்த மதுரை
கடைச்சங்கக் காலத்தில் பாண்டிய மன்னர்களால் கவின்பெற்று விளங்கிய மதுரைமாநகரம் பின்னைய நூற்றாண்டுகளில் அயல்மன்னர் பலருடைய படை யெடுப்புக்களால் அல்லற்பட்டது. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் பாண்டியநாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் பாண்டியநாடு கடுங்கோனால் மீட்கப் பெற்றுத் தன்னாட்சி பெற்றது. திரும்பவும் பத்தாம் நூற்றாண்டில் அது சோழர் ஆட்சியின் கீழ் அடிமை யுற்றது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் சடாவர்மன் குலசேகரன் என்னும் பாண்டிய மன்னன் மீண்டும் பாண்டியநாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றினான். அதிலிருந்து நூறாண்டுகள் பாண்டியநாடு பழைய அரசுநிலையில் விளங்கிற்று. பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக்காபூர் முதலான முகலாயர்களின் தொடர்ந்த படையெடுப்புகளால் பாண்டியர் ஆட்சி பாழ்பட்டது. மதுரையில் நாற்பத்துநான்கு ஆண்டுகள் முகலாயர் ஆட்சி நிலவியது.
இக்காலத்தில் விசயநகரப் பேரரசு வளர்ச்சியுற்று வந்தது. அதன் சார்பில் இரண்டாம் கம்பண்ணர் என்பார் தமிழ்நாட்டின்மீது படையெடுத்து வந்தார். அவர் தென்னாட்டில் முசுலீம் ஆதிக்கத்தை யொழித்துத் தமிழ்நாட்டை விசயநகரப் பேரரசுடன் இணைத்தார். பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விசுவநாத நாயக்கர் மதுரையில் தங்கி மதுரைநாட்டை ஆளத் தொடங்கினார். இவருடைய வழித்தோன்றல்கள் பாண்டியநாட்டை ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனர். விசுவநாத நாயக்கர் காலத்தில்தான் இந்நாளைய மதுரை உருவாயிற்று. இரண்டாம் கம்பண்ணர் முசுலீம்களால் இடிக்கப்பட்ட மீனட்சியம்மன் கோவிலையும் கோபுரங்களையும் கட்டுவித்தார் ; நகரையும் வகைப்படுத்தி அழகுபெற அமைத்தார். விசுவநாத நாயக்கருக்குப் பின் திருச்சிராப்பள்ளி, நாயக்கர் ஆட்சிக்குத் தலைநகரமாயிற்று.
பதினேழாம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் மீண்டும் தலைநகரை மதுரைக்கு மாற்றினர். அவர் மீனாட்சியம்மை திருக்கோவிலில் பல திருப்பணிகள் செய்தார். கலைகலம் சிறந்த சிற்பங்களையுடைய புது மண்டபத்தை எழுப்பினர் ; கோடை விடுதியான தமுக்கம், குளிர்பூந்தடாகமாகிய பெரிய தெப்பக்குளம், தமிழகத்தின் தாசுமகால் என்று போற்றத்தக்க திருமலை நாயக்கர் மகால் ஆகியவற்றை அமைத்து மதுரைமாநகரை அழகுபடுத்தினர் : திருவிளையாடற் புராணத்தில் காணும் பெருவிழாக்கள் எல்லாம் திருக்கோவிலில் நடைபெறுமாறு செய்தார் ; சித்திரைத் திருவிழாவைச் செந்தமிழ்நாட்டு மக்களையன்றிப் பன்னாட்டினரும் வந்து பார்த்து மகிழுமாறு சிறப்புற நடைபெறச் செய்தார் : மதுரையை விழாமல்கு நகரமாக விளக்கமுறச்செய்தார் ; கலை மலிந்த தலைநகரமாக்கிக் கண்டு களிபூத்தார். அவர் கண்ட அணி மதுரைத் திருநகரை நாம் இன்றும் கண்டு இன்புறுகின்றோம்.
(தொடரும்)
அ. க. நவநீத கிருட்டிணன்
தமிழ் வளர்த்த நகரங்கள்
Comments
Post a Comment