பூங்கொடி 20 – கவிஞர் முடியரசன்: புற்றரைக் காட்சி
(பூங்கொடி 19 – கவிஞர் முடியரசன்: படிப்பகம் புக்க காதை – தொடர்ச்சி)
பூங்கொடி
புற்றரைக் காட்சி
பைம்புற் பரப்புப் பசும்படாம் விரிக்கெனத்
தோன்றும், இடையிடைத் துளிர்விடு செடிகள்
ஈன்ற மலர்வகை எழில்பெற வரைந்த
சித்திர வகையை ஒத்திடல் காணாய் !
பொய்கைக் காட்சி
இந்நாள் விடுமுறை எனுஞ்சொற் செவியுறத் 30
துள்ளிக் குதிக்கும் பள்ளிச் சிறாரென
வெள்ளைக் கயல்கள் விடுபுனற் பொய்கையில்
தாவிக் குதிக்கும், தவஞ்செய் கொக்கு
மேவிப் பற்ற முயன்றும் மீன்பெறாது
ஏங்கிநின் றிரங்குதல் காண்’ என அல்லி 35
பூங்கா எழிலும் பொய்கையும் காட்டப்
பூங்கொடி அவ்வெழிற் பூவனம் காண்புழி,
கோமகன் முகுந்தனை வினவல்
அவ்வூ ராங்கண் அரிதின் முயன்றுறு
பெருநிதிக் கிழவன் பெட்புறு மைந்தன்
கோமகன் என்பான் கோடுயர் மாட 40
மாமறு கோரம் வருவோன் எதிரில்
வாடிய முகத்தன் வருதுயர் மனத்தை
மூடிட முகுந்தன் முன்வரு வோனை
‘வீதியில் என்னெதிர் வருந்தினை வருவோய்!
ஏதம் உற்றது யாதென் றுரை’என, 45
முகுந்தன் துயரம்
‘மாதர் பூங்கொடி மலர்வனம் புகுவோள்
வழிஎதிர்ப் படலும் வடிவேல் உற்ற
வெந்துயர் நெஞ்சில் வேலெனத் தைக்க
நொந்துழல் மனத்தேன் நும்வரல் அறியேன்
சிந்தனை நினைவொடு செல்லுதல் உற்றேன் 50
யானுறும் இடும்பை இஃதே’ என்றனன்;
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment