Skip to main content

ஊரும் பேரும் 52 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அரசரும் ஈச்சுரமும்

 




(ஊரும் பேரும் 51 : இரா.பி.சேது(ப்பிள்ளை): தேவீச்சுரம் – தொடர்ச்சி)

அரசரும் ஈச்சுரமும்

தமிழ் அரசர் பலர் தம் பெயரை ஆலயங்களோடு இணைத்துஅழியாப் பதம் பெற ஆசைப்பட்டார்கள். அன்னார் எடுத்த திருக்கோயில்கள் பெரும்பாலும் ஈச்சுரம் என்று பெயர் பெற்றன; தேவாரகாலத்திற்கு முன்னரே இப்பழக்கம் எழுந்ததாகத் தெரிகின்றது. எனினும், பிற்காலத்தில் எழுந்த ஈச்சுரங்கள் மிகப் பலவாகும்.

பல்லவனீச்சுரம்

பல்லவ குல மன்னர் சிவாலயங்கள் பல கட்டினர். சோழ நாட்டின் துறைமுக நகரமாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் பல்லவனீச்சுரம் என்னும்
திருக்கோயில் விளங்கிற்று. அதனைத் திருஞான சம்பந்தர் விளங்கிற்று.
அதனைத் திருஞான சம்பந்தர் பாடியருளினார். பல்லவ மன்னன் ஒருவனால்
அக் கோயில் எடுக்கப்பட்ட தென்பது வெளிப்படை.

குணதரவீச்சுரம்

குணதரன் என்னும் விருதுப் பெயர் கொண்ட மகேந்திரவர்மன் திருநாவுக்கரசரால் சிவ நெறியிலே சேர்க்கப்பட்ட பல்லவ மன்னன். அக்காலத்தில் சமணர்கள் சிறந்து வாழ்ந்த பாடலிபுத்திரம் என்ற ஊரில் பாழிகளும் பள்ளிகளும் பல இருந்தன. சமண மதத்தை விட்டுச் சைவ மதத்தைச் சார்ந்த அம் மன்னன் அங்கிருந்த பாழிகளையும் பள்ளிகளையும் இடித்து திருவதிகை நகரில் சிவபெருமானுக்கு ஒரு கோயில் எடுத்து,
அதற்குக் குணதர ஈச்சுரம் என்னும் பெயர் கொடுத்தான்.1 இன்னும்,
வடஆர்க்காட்டுச் சீய மங்கலத்தில் மகேந்திர வர்மன் குடைந்தெடுத்த குகைக்கோயில் பல்லவேச்சுரம் என்னும் பெயர் பெற்றது.2

இராசசிம்மேச்சுரம்

இராச சிம்மன் என்ற பல்லவ மன்னன் சிவனடி போற்றிய சீலன்.
காஞ்சிபுரத்தில் கயிலாச நாதர் கோயில் கட்டியவன் இவனே. அக்கோயில்
இராச சிம்மேச்சுரம் என்று சாசனத்திற் குறிக்கப்படுகின்றது.தொண்டை
நாட்டுத் திருததொண்டருள் ஒருவராகிய பூசலார் நாயனார் ஈசனார்க்கு
மனக்கோயில் கட்டிய பொழுது இராசசிம்மன் அவர்க்குக் கற்கோயில்
கட்டினான் என்பர்.

காடவர்கோன் கச்சிக் கற்றளி எடுத்து முற்ற

மாடெலாம் சிவனுக்காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வான்”
என்று திருத் தொண்டர் புராணம் கூறும் கற்றளி இதுவே போலும்!

பல்லவேச்சுரம்

மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரம் தேவாரத்திற் குறிக்கப்படவில்லை
யெனினும் அங்கே சிவாலயங்கள் உண்டு என்பது திருமங்கை யாழ்வார்
திருப் பாசுரத்தால் தெரிகின்றது.

பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம்விசும்பில்

கணங்கள்இயங் கும்மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்”

என்னும் பாட்டால் தலசயனம் என்ற திருமால் கோவிலுக்கு அருகே சிவன்
கோயில் உள்ள தென்பது தெள்ளிதின் விளங்கும். மாமல்லபுரத்தில் பல்லவ மன்னனால் கட்டப்பட்டிருந்த இரண்டு சிவாலயங்கள் சாசனத்திற் குறிக்கப்படுகின்றன. அவற்றுடன் பள்ளி கொண்டார் கோவிலையும் சேர்த்துச் சாசனம் கூறுதலால், மூன்று
கோவில்களும் ஒன்றையொன்று அடுத்திருந்த பான்மை அறியப்படும்.4
அவற்றுள் இராசசிம்ம பல்லவேச்சுரம் என்னும் சிவாலயம் இராசசிம்மனால்
எடுக்கப்பட்டதாகும். எனவே, காஞ்சிபுரத்தில் இராசசிம்மேச்சுரம் என்னும்
கைலாசநாதர் கோயில் கட்டிய பல்லவனே மாமல்ல புரத்தில்
பல்லவேச்சுரமும் கட்டினான் என்று தெரிகின்றது. மல்லையில் உள்ள
மற்றொரு சிவாலயம் சத்திரிய சிம்ம பல்லவேச்சுரம் என்ற பெயரால்
குறிக்கப்படுகின்றது. இராசசிம்மனுக்குச்சத்திரிய சிகாமணி யென்னும்
விருதுப் பெயர் இருந்ததாகத் தெரிகின்றமையால் இக் கோவிலும் அவனே
உண்டாக்கினான் என்பர்.5

பரமேச்சுரப் பல்லவன் காஞ்சிபுரத்திற்கு அண்மையிலுள்ள கூரம் என்னும் ஊரில் தன் பெயரால் ஒரு சிவாலயம் கட்டி அதற்குப் பரமேசுவர மங்கலத்தைத் தானமாக வழங்கிய செய்தி கூரத்துச் செப்பேடுகளில் கூறப்படுகின்றது.

பஞ்சவனீச்சுரம்

பாண்டி நாட்டிலும் பல ஈச்சுரங்கள் இருந்தன. மதுரையைச் சூழ்ந்திருந்த தலங்களுள் ஒன்று பஞ்சவனீச்சுரம் என்னும் பெயர் பெற்றிருந்த தென்பது கல்லாடத்தால் அறியப்படும்.6
பாண்டீச்சுரம்

பாண்டி நாட்டு ஆழ்வார் கோயில் என்னும் ஊரில் திருப்பாண்டீச்சுரம் அமைந்திருந்ததென்று பழனி வட்டத்திலுள்ள பெரிய கோட்டைச் சாசனம் கூறுகின்றது.7

சோழீச்சுரம்

குறுநில மன்னராகிய முத்தரசரிடமிருந்து தஞ்சை நகரைக் கைப்பற்றிஅரசாண்ட விசயாலயசோழன் பெயரால் அமைந்த கற்கோயில் புதுக்கோட்டையைச் சார்ந்த நாரத்தா மலையில் உள்ள தென்பர். விசாயலய சோழீச்சுரம் என்பது அதன் பெயர்.8 திரு நல்லம் என்பது தேவாரப்பாடல்பெற்ற நகரம்.

  “நல்லம் நல்லம் எனும்பெயர் நாவினால்
  சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே”

என்ற திருப்பாட்டு பெற்றது அப் பதி. திருநல்லச் சடையார்க்குச் செம்பியன்
மாதேவி கற்கோயில் கட்டினாள்
 என்றும், “ஆதித்தேச்சுரம்”
அக்கோயிலுக்குத் தன் கணவராகிய கண்டராதித்தர் பெயரை அமைத்தாள்
என்றும் கல்வெட்டுக் கூறுகின்றது.9 இங்ஙனம் அவர் பெயரால் அமைந்த
திருக்கோயில் ஆதித்தேச்சுரம் என வழங்கலாயிற் றென்பர். அங்குள்ள ஈசன்
திருவடியைத் தொழுகின்ற பான்மையில் கண்டராதித்தர் வடிவம்
அமைக்கப்பட்டுள்ளது.10

இராசராசேச்சுரம்

தஞ்சை நகரத்தின் நல்லணியாகத் திகழும் பெரிய கோவில் இராசராசன் என்னும் பெருநில மன்னனது சீர்மைக்கு ஒரு சிறந்த சான்றாக நின்று நிலவுகின்றது. அத்திருப்பணியை மிக்க ஆர்வத்தனமாய்ச் செய்து முடித்தான் அம் மன்னன் என்பது
சாசனங்களால் விளங்குகின்றது. இராசராசேச்சுரம் என்று பெயர் பெற்ற
அக்கோவில் தமிழகத்தின் பண்பாட்டை விளக்கும் கலைக்கோயிலாகவும்
அமைந்துள்ளது. அங்கு இறைவன் திருவுருவத்தை நிறுவும் பொழுது
உடனிருந்து உதவிய கருவூர்த் தேவர் பாடிய பாட்டு திருவிசைப்பா என
வழங்குகின்றது. “இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சுர”த்தின் ஏற்றமும்
தோற்றமும் அப் பாட்டில் இனிது காட்டப்படுகின்றன. விண்ணளாவி நின்ற
திருக்கோவிலில் கண்ணையும் கருத்தையும் கவரும் ஆடல் பாடல்கள்
நிகழ்ந்தன என்பது,

    “மின்னெடும் புருவத் திளமயில் அனையார்
    விலங்கல்செய் நாடக சாலை
    இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
    இராசரா சேச்சுரத் திவர்க்கே”

என்னும் திருவிசைப் பாவால் இனிது விளங்கும்.

தொண்டை நாட்டு மணவிற் கோட்டத்துப் புரிசை நாட்டில் இராசராசேச்சுரம் என்னும் சிவாலயம் ஒன்று எழுந்தது.11 அக் கோயிற் சிறப்பினால் சிவபுரம் என்னும் பெயர் அவ்வூருக்கு வழங்கலாயிற்று.

திரு விந்தனூர் நாட்டைச் சேர்ந்த குளத்தூரில் பெருமா நம்பி என்னும் பல்லவ ராயர் ஒரு சிவாலயம் கட்டி, அதற்கு இராசராசேச்சுரம் என்று பெயரிட்டார். இப்போது அவர் பெயரால் வழங்கும் பல்லவராயன் பேட்டையில் உள்ள ஆலயம் அதுவே.12 கழிக்குடி யென்னும் மறு பெயருடைய கன்னியாகுமரியில் மற்றோர் இராசராசேச்சுரம் காணப்படுகின்றது. இப்பொழுது சிதிலமுற்றிருக்கும் குகைநாதர் கோவிலே பழைய இராசராசேச்சுரம் என்பர்.13

இக் கோவில் நந்தா விளக்குக்காகச் சோழகுல வல்லி அளித்தநன்கொடை கல்வெட்டால் அறியப்படுகின்றது.14 இராசேந்திர சோழன் காலத்தில் கன்னியாகுமரி கங்கை கொண்ட சோழபுரம் என்னும் பெயர் பெற்றது.

தாராசுரம்

தாராசுரம் என்பது கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள ஓர் ஊர். அங்குள்ள சிவன் கோவில் இராசராசேச்சுரம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகின்றது. ‘இராசராச புரத்திலுள்ள இராசராசேச்சுரம்’ என்னும் சாசனத் தொடரால்15 இராசராச சோழனுக்கும் அவ்வூருக்கும் உள்ள தொடர்பு நன்கு விளங்குகின்றது இராசராசேச்சுரம் என்பது நாளடைவில் ராராசுரம் ஆகக் குறுகிற்று.16 ராராசுரம் தாராசுரமாகத் திரிந்தது. தாராசுரக்கோயிலின் கட்டுமானமும் தஞ்சைப் பெருங் கோயில் முறையில்
அமைந்துள்ளது.

அரிஞ்சயேச்சுரம்

திருவல்லத்துக்கு வடக்கே யுள்ள மேற் பாடி என்னும் ஊரில் உள்ள சிவாலயத்தின் பெயர் அரிஞ்சயேச்சுரம். முதற் பராந்தக சோழனுடைய மகன் அரிஞ்சயன். அவன் நெடுநாள் அரசாளவில்லை என்று தோன்றுகின்றது. பாணர் நாட்டின்மீது படையெடுத்துச் சென்ற அம் மன்னன் போர்க்களத்தில் வீழ்ந்து பட்டான் என்று கருதுவர் பலர். பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டிநாட்டை யாண்ட வீர பாண்டியன் ‘சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் என்று கல்வெட்டுகளிற் குறிக்கப்படுதலால், அரிஞ்சயன்
தலை கொண்டவன் அவனே போலும்! இவ்வாறு அகால மரணமடைந்த
அரிஞ்சயன் பெயரால் இராசராச சோழன் பள்ளிப் படையாகக் கட்டிய
ஆலயம் அரிஞ்சயேச்சுரம் என்று வழங்கப்பெற்றது.17 இக் காலத்தில் அக்
கோயிலின் பெயர் சோழேச்சுரம் என்பதாகும்.

கங்கைகொண்ட சோழேச்சுரம்

இராசேந்திர சோழனது விருதுப் பெயரால் அமைந்த நகரம் கங்கைகொண்ட சோழபுரம். அந் நகரில் அம்மன்னம் கட்டிய சிவன் கோவில்
கங்கை கொண்ட சோழேச்சுரம் என்று பெயர் பெற்றது. அந் நாளில் ஆறு
கோபுரங்களோடும், அழகிய மதில்களோடும் விளங்கிய அவ்வாலயம் இன்று
மதில் இழந்து, மாண்பிழந்து நிற்கின்றது. ஆறு கோபுரங்களில் எஞ்சியுள்ளது
ஒன்றே. ஒன்பது அடுக்குள்ள அக் கோபுரத்தின் உயரம் நூற்றெழுபது அடி
என்பர். தஞ்சைப் பெருங் கோயிலைப் பாடிய கருவூர்த் தேவர் கங்கை
கொண்ட சோழேச்சுரத்தையும் பாடியுள்ளார்.

     “பண்ணிநின் றுருகேன் பணிசெயேன் எனினும்
     பாவியேன் ஆவியுட் புகுந்தென்
     கண்ணினின் றகலா என்கொலோ கங்கை
     கொண்டசோ ழேச்சரத் தானே

என்ற திருவிசைப் பாவால் அதன் பெருமை இனிது விளங்கும்.

நாஞ்சில் நாட்டில் உள்ள கோட்டாறு என்னும் நகரைக் குலோத்துங்க சோழன் வென்று கைக்கொண்ட பின்னர், அங்கு சிவன் கோவில் ஒன்று கட்டுவித்து அதற்கு இராசேந்திர சோழேச்சுரம் என்று பெயரிட்டான். அத் திருக் கோயிலைச் சூழ்ந்த இடம் சோழபுரம் என்னும் பெயர் பெற்றது. இக் காலத்தில் நாகர் கோயிலின் ஒரு பகுதி சோழபுர மென்றும், அங்குள்ள கோவில் சோழேச்சுரம் என்றும் சொல்லப்படுகின்றன.18

இந் நாளில் வேப்பத்தூர் (தஞ்சை நாடு) என வழங்கும் திருந்துதேவன் குடியில் கங்கை கொண்ட சோழேச்சுரம் என்ற சிவாலயம் ஒன்று இருந்ததாகத் தெரிகின்றது.19 முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் திருச்சி நாட்டிலுள்ள மேலப் பழுவூரில் இருந்த பழமையான செங்கற் கோவில் புதுப்பிக்கப்பட்டுக் குலோத்துங்க சோழேச்சுரம் என்னும் பெயர் பெற்றது.20

 (தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்
               அடிக் குறிப்பு
  1. திருநாவுக்கரசர் புராணம், 146.
  2. பல்லவர்(Pallavas), P.171.
  3. தெ.இ.க. தொ.I,ப..13.
  4. 3 / 1887.
  5. ஆழ்வார்கள் கால நிலை,137.
  6. “வெள்ளி யம்பலம் நள்ளா றிந்திரை
    பஞ்சவ னீச்சரம் அஞ்செழுத் தமைந்த
    சென்னி மாபுரம் சேரன் திருத்தளி”
    -கல்லாடம் 61.
  7. 468/ 1907.
  8. முதல் இராசராச சோழன் (,டி,வி, உலகநாத பிள்ளை) 11
  9. 450 / 1908.

10 தெ.இ.க. தொ. 3. ப.396.

  1. 18/ 1896.
  2. ஏ.ஆர்.இ.1923. 24, ப. 103
  3. தி.தொ.வ.(T.A.S.,) தொ.1.ப. 161.

14 சோழ குல வல்லி என்பவள் இராசேந்திர சோழனுக்குத் திருவமுது
சமைத்திட்டவள் என்பதும், அவள் புலியூர் நாட்டுப் பாலையூர்த்
திட்டையைச் சேர்ந்தவள் என்பதும் சாசனத்தால் விளங்குகின்றன. தி.தொ.வ.தொ.1.ப.61

  1. 21 /1908 கும்பகோணத்துக் கும்பேசுரர் கோயிலுக்குப் பத்துக்கல்
    சுற்றளவுக் குட்பட்ட பதினெட்டுப் பெரிய கோயில்களுள் ஒன்று தாராசுரம்.
  2. 23 / 1908.
  3. தெ.இ.க. தொ. 3, எண்கள் 15, 16, 17
  4. தெ.இ.க. தொ. 3, ப.159.
  1. 51/ 1910.
  2. 393 / 1914

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்