பூங்கொடி 18 – கவிஞர் முடியரசன்: இருவகைப் பூங்கா
(பூங்கொடி 17 – கவிஞர் முடியரசன்: வெருகன் நய வஞ்சகம் – தொடர்ச்சி)
பூங்கொடி
இருவகைப் பூங்கா
மேலும் வடதிசை மேவிய பூங்கா
தேளும் பாம்பும் என்னச் செப்பிடும்
கொடியவர் செல்லும் கூடம தாகும்; 90
அன்பும் பண்பும் ஆர்ந்தவர் நிறையும்
தென்புலப் பொழிற்கே செல்லுதற் குரியள்
என்பன கூறி எழுந்துபூங் கொடியொடு
காவண மறுகுகள் கடந்துபல் பொருள்பகர்
ஆவண வழியே படர்ந்தன ளாக. 95
கண்டோர் கவலை
வழியிற் காண்போர் விழிவாங் காமல்
‘எழில்நிறை யிவளை இல்லறப் படுத்தா
தல்லல் நிறைகொண் டாற்றுப் படுத்தினள்
கொடியள் இவள்தாய் கொடியள்’
என்று வடிகண் ணீரர் வருந்தி அரற்ற, 100
பொழிலுட் புகுதல்
அடிமலர் படிமிசைப் பொருந்தப் பூங்கொடி
ஓவியம் என்ன ஒசித்து நடந்து,
காவியம் வல்லான் கற்பனை பெருக்க
எழுதரு சோலை எழில்காண் புறவே
பழுதறு பாவை நுழைந்தனள் பொழிலே (105)
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment