ஊரும் பேரும் 53 : இரா.பி.சேது(ப்பிள்ளை): திருமேனியும் தலமும்
(ஊரும் பேரும் 52 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அரசரும் ஈச்சுரமும் – தொடர்ச்சி)
திருமேனியும் தலமும்
திருவிற்கோலம்
தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்று திருவிற் கோலம். அங்குள்ள
ஈசன் கோயில் திரிபுராந்தகம் எனப்படும். திரிபுரங்களில் இருந்து
தீங்கிழைத்த அவுணரை அழிக்கத் திருவுளங் கொண்ட இறைவன்
வில்லெடுத்த கோலம் அங்கு விளங்குதலால் விற்கோலம் என்ற பெயர்
அதற்கு அமைந்ததென்பர். “திரிதருபுரம் எரிசெய்த சேவகன் உறைவிடம்
திருவிற்கோலமே” என்று தேவாரமும் இச்செய்தியைத் தெரிவிக்கின்றது.
எனவே, ஈசனது திருமேனியின் கோலத்தைக் குறித்த சொல், நாளடைவில்
அவர் உறையும் கோயிலுக்கும் பெயராயிற் றென்பது விளங்கும். இத் தகைய
விற்கோலம் கூகம் என்ற ஊரிலே காட்சியளித்தது.
“கோடல்வெண் பிறையனைக் கூகம் மேவிய
சேடன் செழுமதில் திருவிற் கோலத்தை”
என்று திருஞான சம்பந்தர் பாடுதலால், கூகம் என்பது ஊரின் பெயரென்றும்,
திருவிற்கோலம் அங்குள்ள ஆலயத்தின் பெயரென்றும் அறியலாகும்.
இக்காலத்தில் கூவம் என்பது அத் தலத்தின் பெயராக வழங்குகின்றது.
திருமேனிநாதபுரம்
தஞ்சை நாட்டுப் பட்டுக்கோட்டை வட்டத்தில் திரு ஆவணம் என்று
வழங்கிய தலமொன்று உண்டு. அங்கு எழுந்தருளிய ஈசன் திருமேனிநாதர்
என்னும் திரு நாமம் பெற்றார். இப்பொழுது அப் பெருமான் பெயரால்
திருமேனி நாதபுரம் என்று அவ்வூர் அழைக்கப்பெறுகின்றது.1
ஆப்பனூர்
மதுரைக்கு அருகே வைகையாற்றின் கரையில் ஓர் ஆப்பிலே தோன்றிய
ஈசன் ஆப்பன் என்று பெயர் பெற்றார். அவர் அமர்ந்த இடம் ஆப்பனூர்
ஆயிற்று. அப்பதியைப் பாடினார் திருஞான சம்பந்தர். இப்பொழுது
ஆப்பனூர் திருவாப்புடையார் கோயில் என்று குறிக்கப்படுகிறது.
கன்றாப்பூர்
சோழ நாட்டில் கன்று கட்டிய ஒரு முளையினின்றும் இறைவன்
வெளிப்பட்டமையால் கன்றாப்பூர் என்னும் பெயர் அவ்வூருக்கு அமைந்த
தென்பர்.
“கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே”
என்னும் தேவாரத்தில் நடுதறி என்பது அங்குக் கோயில் கொண்ட ஈசன்
திருநாமம் என்று தெரிகின்றது. இவ்வூர் இப்பொழுது கண்ணாப்பூர் என
வழங்கும்.2
கானூர்
கானகத்தில் அமைந்த கானூர் என்ற ஊரிலே செழுஞ்சோலையினிடையே
முளைத்தெழுந்த இறைவன் திருவுருவத்தைக் கானூர் முளையென்று
போற்றினார் திருநாவுக்கரசர். “காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்”
என்பது அவர் திருவாக்கு. இப்பொழுது அங்கு ஊரில்லை. கோயில் மட்டும்
உள்ளது.3
பெருமுளை
கானூர் முளைபோல் எழுந்த மற்றொரு கோயில் மாயவர வட்டத்தில்
உள்ளது. அங்கு முளைத்த மூர்த்தியைப் பெருமுளை என்று அழைத்தனர்.
அப் பெயரே ஊர்ப் பெயரும் ஆயிற்று. இப்பொழுது பெருமுளை என்னும்
ஊரில் உள்ள சிவாலயம் சுயம்பு நாதர் கோயில் என வழங்குகின்றது.4
அவிநாசி
இறைவனுடைய திரு நாமமே ஊர்ப் பெயராதலும் உண்டு. கொங்கு
நாட்டில் இன்று அவிநாசி யென்று வழங்கும் ஊரின் பழம் பெயர்
தேவாரத்தால் விளங்கும். அங்கு முதலை வாயினின்றும் ஒரு பாலனை
மீட்பதற்காகச் சுந்தரர் பாடிய திருப்பாசுரத்தில்,
“புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே”
ன்று வேண்டுதலால் புக்கொளியூர் என்பது அவ்வூரின் பெயர் என்பதும்,
அவிநாசி யென்பது ஆண்டவன் திருநாமம் என்பதும், தெளிவாகத்
தெரிகின்றன.5 நாளடைவில் ஊர்ப் பெயர் வழக்கா றிழந்துவிட்டது. அவிநாசி
யென்பது ஊர்ப் பெயராயிற்று.
திருக்கோளிலி
இவ்வாறே, திருவாரூருக்குத் தென்கிழக்கே அமைந்த திருக்கோளிலி
என்ற ஊரின் பெயரும் இறைவன் பெயராகவே தோற்று கின்றது. கேடில்லாத
பரம்பொருளைக் கோளிலி என்னும் சொல் குறிப்பதாகும். அவிநாசி
யென்ற வடசொல்லுக்கும், கோளிலி யென்ற தமிழ்ச் சொல்லுக்கும் பொருள்
ஒன்றே. இந்த நாளில் திருக்கோளிலி என்பது திருக் குவளை யெனச்
சிதைந்து வழங்குகின்றது.
வட ஆர்க்காட்டு வேலூர் வட்டத்தில் ஒக்கணாபுரம் என்றும்,
வக்கணாபுரம் என்றும் வழங்கும் ஊர் ஒன்று
உள்ளது. சாசனத்தின் வாயிலாக ஆராயும் பொழுது அவ்வூர்ப் பெயரின்
வரலாறு விளங்குகின்றது. அங்குள்ள திருக் கோயிலில் அமர்ந்த ஈசன் ஒக்க
நின்றான் என்னும் திருநாமம் பெற்றுள்ளார். அங்கிங்கெனாதபடி எங்கும்
நிறைந்து நிற்கும் பரம்பொருளை ஒக்க நின்றான் என்ற சொல்
உணர்த்துவதாகும்.6 ஒக்க நின்றானையுடைய ஊர், ஒக்க நின்றான் புரம்
என்று பெயர் பெற்றது. அதுவே ஒக்கணாபுரம் என் மருவிற்று.
தான்தோன்றீச்சுரம்
இராமநாதபுரம் என்னும் சேது நாட்டில் சிவபுரி என்ற ஊர் உள்ளது.
சுயம்பு வடிவத்தில் சிவன் அங்கு வெளிப்பட்டமையால் சிவபுரி என்னும்
பெயர் அதற்கு அமைந்த தென்பர். அவ்வூரில் உள்ள பழமையான
சிவாலயம் தான்தோன்றீச்சுரம் என்று சாசனங்களிற் குறிக்கப்படுகின்றது.7
பழைய கொங்கு நாட்டுப் பேரூர்களில் ஒன்று நம்பி பேரூர் ஆகும்.8
இப்போழுது அதன் பெயர் நம்பியூர் என மருவியுள்ளது. அங்குள்ள
சிவாலயத்தின் பெயர் தான்தோன்றீச்சுரம்.9 எனவே, அப் பதியிலும் ஈசன்
சுயம்பு வடிவத்தில் வெளிப்பட்டான் என்பது விளங்குகின்றது.
அடிக் குறிப்பு
- M.E.R., 1930-31.
- இது நாகபட்டின வட்டத்தில் உள்ளது.
- திருக்கோயிலும் மண்ணுள் மூழ்கி மறைந்திருந்த தென்றும், சில
நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பெரியார் முயற்சியால் அது,
தோண்டியெடுக்கப்பட்டதென்றும் கூறுவர். திருக்கானூரைச் “சோலைக்
கானூர்“ என்று ஐந்து பாசுரத்திற் பாடிய திருஞான சம்பந்தர் கடைசிப்
பாட்டில் “கழுது துஞ்சம் கங்கு லாடும் கானூர்” என்று கூறுதல் காண்க. - M.E.R., 1917,221.
- விநாசம் இல்லாத பொருள் (அழிவில்லாத பொருள்) அவிநாசி எனப்படும்.
- S.I.I. Vol.I.p. 92.
- 35 of 1929.
- நம்பியூர் கோயம்புத்தூர் நாட்டுக் கோபி செட்டிப் பாளைய வட்டத்தில்
உள்ளது. - I.M.P., Coimbattore, 278-283.
- (தொடரும்) இரா.பி.சேது(ப்பிள்ளை) ஊரும் பேரும்
Comments
Post a Comment