Skip to main content

ஊரும் பேரும் 54 : இறையவரும் உறைவிடமும்

 




(ஊரும் பேரும் 53 : இரா.பி.சேது(ப்பிள்ளை): திருமேனியும் தலமும் – தொடர்ச்சி)

ஊரும் பேரும்

இறையவரும் உறைவிடமும்

இரு சுடர்

     இந் நில வுலகிற்கு ஒளி தரும் சூரியனையும் சந்திரனையும் நெடுங்

காலமாகத் தமிழகம் போற்றி வருகின்றது. சிலப்பதிகாரம் மங்கல

வாழ்த்துரைக்கு மிடத்து ஞாயிறு, திங்கள் என்னும் இரு சுடர்களையும்

போற்றுதல் இதற்கொரு சான்றாகும்.1

பரிதி நியமம்

    தேவாரத்தில் பரிதி நியமம் என்ற கோயில் பாடல் பெற்றுள்ளது.

நியமம் என்பது கோயில்.2 எனவே, பரிதி நியமம் என்பது சூரியன் கோயில்ஆகும். பிற்காலத்தில் பரிதியப்பர் என்னும் பெயர் அக் கோயிற் பெருமானுக்கு அமைந்தது. பரிதியப்பர் கோயில் பருத்தியப்பர் கோயில் என மருவி, இப்பொழுது பருத்திச் செடியோடு தொடர்பு கொண்டுள்ளது.

சூரியனார் கோயில்

    இன்னும், திருவிடை மருதூருக்கு அருகே சூரியன் கோவில் ஒன்று உள்ளது. அது முதற் குலோத்துங்க சோழனாற் கட்டப்பட்ட தென்று சாசனம் கூறும். மூலத் தானத்தில் சூரியன் வடிவம் காணப்படுகின்றது. மற்றைய கிரகங்களும் தனித்தனி இடம் பெற்றுள்ளன. இக் கோயிலையுடைய தலமும் சூரியனார் கோயில் என வழங்கும்.4

திங்களூர்

    சந்திரனைக் குறிக்கும் பழந் தமிழ்ச் சொல் திங்கள் என்பதாகும். சோழ நாட்டில் திருவையாற்றுக் கருகே திங்களூர் என்ற ஊர் உண்டு. அவ்வூரில் அப்பூதியடிகள் என்ற திருத்தொண்டர் அறம் வளர்த்த வரலாறு பெரிய புராணத்தில் விளக்கப்படுகின்றது.5 கோவை வட்டத்தில்மற்றொரு திங்களூர் உள்ளது. இவ்வூர் இரண்டும் சந்திரனோடு தொடர்புடையன போலும்!

                      இரு சேய்கள்

பிள்ளையார்

     ஈசனருளாலே தோன்றிய பிள்ளையாரும் முருகனும் தமிழ்நாடெங்கும் வணங்கப் பெறுவர். ஒவ்வொரு சிவாலயத்திலும் அவ் விருவருக்கும் தனித் தனி இடமுண்டு. கோயில் இல்லாத சிற்றூர்களிலும் பிள்ளையார் என்னும் விநாயகர் ஆற்றங்கரை, குளக்கரை, அரசமரம் முதலிய இடங்களில் அமர்ந்திருப்பார். அப் பெருமானுக்குரிய பல பெயர்களுள் பிள்ளையார், கணபதி என்ற இரண்டும் ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கக் காணலாம்.6

பிள்ளையார்பட்டி

     பாண்டி நாட்டில் குன்னக்குடிக்கு அருகேயுள்ளது பிள்ளையார்பட்டி என்னும் ஊர்.7 முற்காலத்தில் அது மருதங்குடி என்று வழங்கியதாகத் தெரிகின்றது. அங்குப் பழமையான குகைக்கோயில் ஒன்றுண்டு. அச்சிவாலயத்தின் ஒரு சார் உள்ள பாறையில் பிள்ளையார் வடிவம் அமைக்கப்பட்டது. நாளடைவில் கற்பகப் பிள்ளையார் என்னும் பெயர் வாய்ந்த அப் பெருமான் வரதமுடைய மூர்த்தியாக வணங்கப்பட்டார்; அவர் பெயரே ஊருக்கும் அமைவதாயிற்று.8

இன்னும், நெல்லை நாட்டிலுள்ள பிள்ளையார் குளமும், சேலம் நாட்டிலுள்ள கணபதி நல்லூரும், வட ஆர்க்காட்டிலுள்ள கணபதி மடுவும், தஞ்சை மாநகரத்தில் புதிதாகத் தோன்றியுள்ள கணபதி நகரமும் விநாயகர் பெயர் தாங்கி நிலவும் ஊர்களாகும்.

    முருகன் வழிபாடு இந் நாட்டில் தொன்று தொட்டு நிகழ்ந்து வருகின்றது. தொல்காப்பியத்தில் குறிஞ்சி நிலம் அவர்க் குரியதாகக் கூறப்படும். முருகன், கந்தன், குமரன், சேயோன் முதலிய பல பெயர்களால் தமிழகம் அப்பெருமானைப் போற்றும்.

    கொங்கு நாட்டில் திரு முருகன் பூண்டி என்பது தேவாரப் பாமாலை பெற்ற பழம் பதி. முருகன் பெயர் தாங்கிய அவ்வூரில் ஆறலைக்கும் வடுக வேடர் பலர் இருந்தனர் என்று தேவாரம் கூறுகின்றது.9 அப் பூண்டியிலுள்ள முருகனை அருணகிரி நாதர் பாடியுள்ளார்.

    சோழ நாட்டில் மண்ணியாற்றின் தென் கரையில் விளங்கும் சீர்மை வாய்ந்த சிவப் பதிகளுள் ஒன்று சேய்நல்லூர். அசுர வீரனாகிய சூரனை வென்றழிக்கப் போந்த முருகப்பெருமான் மண்ணியாற்றங் கரையில் தங்கி ஈசனார்க்குப் பூசனை இயற்றிய காரணத்தால் அவ்விடம் சேய்நல்லூர் என்று பெயர் பெற்ற தென்பர்.10 அறுபத்து மூன்று சிவனடியார்களுள் சிறப்பாக ஆலயங்களிவணங்கப்படுகின்ற சண்டேச்சுரர் பிறந்த ஊர் இந்த ஊரேயாகும். அவ்வூரைப் பாடியுள்ளார் திருஞான சம்பந்தர். திருச்சேய் நல்லூர் என்னும் பெயர் இப்பொழுது திருச்செங்கனூர் என மருவி வழங்குகின்றது.

    வட ஆர்க்காட்டிலுள்ள சேனூரும் முருகனோடு தொடர்புடையதாகத் தோன்றுகின்றது. முன்னாளில் அவ்வூர் சேய் நல்லூர் என வழங்கிற்று.11 அப் பெயரே சேனூர் என்று மருவியுள்ளது.

திருச்செந்தில்

    தமிழகத்தில் முருகவேள் காட்சி தரும் பழம்பதிகளை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் எடுத்துரைத்தார்.

         “சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

         ஏரகமும் நீங்கா இறைவன்

என்பது அவர் பாட்டு. தென்பாண்டி நாட்டில் கடற் கரைக் கோவிலாக விளங்குவது செந்திலம்பதி. நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று நிலவும் செந்தில் மாநகர்க் கந்தன் கோவில் திருச்சீர் அலைவாய் என்று நக்கீர தேவரால் திருமுருகாற்றுப் படையிலே பாடப் பெற்றுள்ளது. இளங்கோவடிகள் புகழ்ந்தவாறே நக்கீரரும் செந்திற் பதியில் வீற்றிருக்கும் அலைவாய்க் கோயிலை,

        “உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்

என நிறைந்த மொழிகளால் போற்றினார். கடல் சூழ்ந்த வீர மகேந்திரத்தில் அரசு புரிந்த சூரன் என்னும் அசுரனை வென்று, அறத்தை நிலை நிறுத்தக் கருதிய முருகவேள் செந்திற் பதியைப் படை வீடாகக் கொண்டார் என்று கந்த புராணம் கூறும்.12 எனவே, முருகப் பெருமானை வெற்றி வீரனாகக் கண்ட செந்தில் மாநகரம் உலகம் புகழும் ஓங்குயர் சீர்மை பெற்று விளங்குவதாயிற்று.

திருச்செங்கோடு

    சேலம் நாட்டிலுள்ள செங்கோடு என்னும் மலையும் முருகன் விரும்பியுறையும் பழம் பதிகளுள் ஒன்று என்பதை முன்னமே கண்டோம். அம்மலையடிவாரத்தில் அமைந்த ஊர் செங்குன்றூர் என்று தேவாரத்தில் பாடப்பெற்றுள்ளது. “ குன்றன்ன மாளிகை சூழ் கொடி மாடச் செங்குன்றூர்”என்று திருஞான சம்பந்தர் இப்பதியின் சீர்மையை எடுத்துரைத்தார். அழகிய கொடிகளையுடைய நெடு மாடங்களை அவ்வூரிற் கண்களிப்பக் கண்ட காழிக்கவிஞர் கொடி மாடங்களை ஊரோடு இணைத்துப் பாடினார் போலும்! செங்குன்றில் உள்ள சிகரம் செங்கோடு என்னும் பெயர் பெற்றது.

வெண்குன்று

    கொங்கு நாட்டில் பவானி நதியும் சிந்தாமணியாறும் கலந்து கூடுமிடத்தில் தவளகிரி என்னும் மலையொன்று உண்டு. அங்கு முருகன் கோயில் கொண்டு விளங்கினான் என்பது சாசனத்தால் அறியப்படும்.13 வெண்கோடு என்ற தமிழ்ச் சொல்லுக்கு நேரான வடமொழிப்பதம் தவளகிரி யாதலால் இளங்கோவடிகள் குறித்த முருகப்பதி அதுவாயிருத்தல் கூடும்.

திருஏரகம்

    கும்பகோணத்திற்கு மேற்கேயுள்ள சுவாமி மலையே திரு ஏரகம் என்பர். அங்குக் கோயில் கொண்டுள்ள முருகன் சுவாமிநாதன் என்னும் பெயருடையார். மூலமந்திரமாகிய பிரணவத்தின் உட்பொருளை ஈசனார் மணங்குளிர எடுத்துரைத்த காரணத்தால் சிவகுரு என்றும், சுவாமி நாதன் என்றும் முருகன் பெயர் பெற்றார் என்பர். சுவாமி நாதனுக்குரிய மலை சுவாமி மலை என்று அழைக்கப் படுகிறது.

திருஆவிநன்குடி

    முருகவேளுக்குரிய படை வீடுகளுள் ஒன்றாகிய பழனி மலையும் பழம் பெருமை வாய்ந்ததாகும். ஆதியில் அது பொதினி என்று பெயர் பெற்றிருந்தது. வேளிர் குலத்தலைவர்கள் அம் மலையையும் அதைச் சார்ந்த நாட்டையும் ஆண்டு வந்தனர்.

       “முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி

       பொன்னுடை நெடுநகர்ப் பொதினி

என்னும் அகநானூற்றுப் பாட்டால் வேளிர் குலத்தைச் சேர்ந்த ஆவி என்ற குறுநில மன்னன் பொதினி என்னும் நகரத்தில் ஆட்சி புரிந்தான் என்பது அறியப்படும். இங்ஙனம் ஆவியர் குடியினரால் நெடுங்காலமாக ஆளப் பெற்ற நகரம் ஆவிநன்குடி என்று பெயர் பெற்றது. அப் பதியில் அமர்ந்த முருகனை, “ஆவிநன்குடி அமர்தலும் உரியன்” என்று திருமுருகாற்றுப்படை போற்றுகின்றது.

சித்தன் வாழ்வு

    சித்தன் வாழ்வு என்ற பெயரும் ஆவிநன்குடிக்கு உண்டு என்பர்.

சித்தன் என்பது முருகனுக்குரிய பெயர்களுள் ஒன்றாதலால், அவர் படை வீடு சித்தன் வாழ்வு என்னும் பெயர் பெற்றதென்பர்.14

நல்லம்பர் நல்ல குடியுடைத்து; சித்தன் வாழ்வு

          இல்லந்தொறும் மூன்றெரி யுடைத்து

என்று ஒளவையார் சித்தன் வாழ்வைச் சிறப்பித்துப் பாடினார்.

திருவிடைக்கழி

    சோழ நாட்டில் முருகப் பெருமான் தண்ணருள் புரியும் தலங்களுள் ஒன்று திருவிடைக் கழியாகும். அத்தலத்தின் பெயர் விடைக்கழி எனவும் இடைக் கழி எனவும் வழங்கும்.15 அங்கு நறுமணம் கமழும்

மகிழஞ்சோலையில் குரவமரத்தடியில் அமர்ந்துள்ள குமாரக் கடவுளை,

         “குலவிடைக் கழியின் மகிழ்வனத்தில் ஒரு

         குரவடிக்கணமர் நீபமாலைப்புய வேளைப் புரக்கவே

என்று போற்றினார் திருவிடைக்கழி முருகன் பிள்ளைத் தமிழுடையார்.

இவ்வூர் தஞ்சை நாட்டு மாயவர வட்டத்தில் உள்ளது.

 சாத்தனும் பலதேவனும்

சாத்தான்

      சாத்தான் பெயரால் அமைந்த ஊர்கள் தமிழ் நாட்டிற் பலவுண்டு. அவ்வூர்களிற் பெரும்பாலும் இன்றும் சாத்தன் வழிபாடு சிறப்பாக நடைபெறக் காணலாம். சாத்தனாரை ஐயனார் என்றும் அழைப்பதுண்டு. சோழ நாட்டில் திருவாவடுதுறைக்கு அருகில் ஒரு சாத்தனூர் உள்ளது. திருவிசைப்பாவிலும், திருத் தொண்டர் புராணத்திலும் அவ்வூர் குறிக்கப்படுகின்றது. அங்கே சிறப்பு வாய்ந்த ஐயனார் கோவில் ஒன்று விளங்குகின்றது. எனவே, ஐயனார் பெயரே ஊர்ப் பெயராக வழங்கலாயிற் றென்பது வெளிப்படை.

பலதேவர்

    பழந் தமிழ் நாட்டில் பலதேவன் வழிபாடு நிகழ்ந்த தென்பது இலக்கியங்களால் அறியப்படும். வெண்ணிறம் வாய்ந்த அத்தேவனை, “வால்வளை மேனி வாலியோன்” என்று சிலப்பதிகாரம் குறிக்கின்றது. அவரை வெள்ளை மூர்த்தி என்றும், பல தேவன் என்றும் பண்டைத் தமிழர் அழைப்பாராயினர்.16 காவிரிப்பூம்பட்டினத்திலும், மதுரையம் பதியிலும் அவர்க்குக் கோயில் இருந்ததாகத் தெரிகின்றது. மதுரையில் இருந்த பலதேவர் கோயிலை “வெள்ளை நகரம்” என்று சிலப்பதிகாரம் குறிக்கும்.17 உத்தரமேரூர் என்னும் ஊரில் வெள்ளை மூர்த்தி கோயில் ஒன்று இருந்த தென்பது சாசனத்தால் விளங்குகின்றது.18 தாமிரபரணி யாற்றின் கரையில் வெள்ளைக் கோயில் துறை ஒன்றுண்டு. பழைய பலதேவர் வழிபாட்டை அது நினைவூட்டுவதாகும்.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை) ஊரும் பேரும்

                  அடிக் குறிப்பு

1. “திங்களைப் போற்றுதும் திங்ளைப் போற்றுதும்”

“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்-”

-மங்கல வாழ்த்துப் பாடல்.

2. நியமம், கோயில் என்பது “உவணச் சேவல் உயர்த்தோன் நியமனம்”

என்று திருமால் கோயில் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படுதலாலும்

உணரப்படும்-ஊர்காண் காதை, 8.

3. பரிதி நியமம், சூரியன் ஈசனை வழிபட்ட ஸ்தலம் என்று கொள்ளலு

மாகும்.

4. சூரியனார் கோயிலைப் பற்றிய சாசனங்களும், அங்குள்ள நவக்கிரகங்களின் அமைப்பும், அவற்றின் படங்களும்  ஜெகதீசய்யர் எழுதிய நூலிற் காண்க( -Indian Shrines. p. 313 -16.)

5. அந்தணரின் மேம்பட்ட அப்பூதியடிகள் திருநாவுக்கரசரைப் போற்றிஅவர் பெயரால் அறம் புரிந்தவர். அடிகளின் மைந்தனைப் பாம்பு தீண்டிய போது, திருநாவுக்கரசர் ஆண்டவனைப் பாடி விஷத்தைப் போக்கிய செய்தி தேவாரத்தால் அறியப்படும்.

6. சங்க நூல்களில் பிள்ளையாரைப்பற்றிய குறிப்பொன்றும் கிடைக்கவில்லை. “பிடியதன் உரு உமைகொள என்ற தேவாரத்தில், “கணபதி வர அருளினன்” என்று பாடியுள்ளார் திருஞான சம்பந்தர்.

7. இராமநாதபுரம் நாட்டில் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ளது பிள்ளையார்பட்டி.

8. M.E.R., 1935-36.

9. “கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்….ஆறலைக்குமிடம்” என்றும், “முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன் பூண்டி” என்றும் பாடினார் சுந்தரர்.

-திருமுருகன் பூண்டிப் பதிகம் 1, 3.

10. ஏந்தும் அயில்வேல் நிலைகாட்டி

இமையோர் இகல்வெம் படைகடக்கும்

சேந்தன் அளித்த திருமறையோர்

மூதூர் செல்வச் சேய்ஞலூர்

-என்று சேக்கிழார் கூறியருளினார். (சண்டேசுரர் புராணம், 1)

இப் பதியில் ஆறுமுகப் பெருமான் பூசனை புரிந்து ஈசனிடம்

பாசுபதாஸ்திரம் பெற்ற வரலாறு கந்த புராண உற்பத்திக் காண்டத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

11. 394 / 1811.

12. உற்பத்திக் காண்டம், திருச்செந்திற் படலத்திற் காண்க. 

13. 181 / 1910.

14. சித்தன் என்பது முருகக் கடவுளின் திரு நாமம் என்பர்

 நச்சினார்க்கினியர். திருமுருகாற்றுப்படை, 176 – உரை.

15. மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரிதம், முதற் பாகம், 212.

16. “வால்வளை மேனி வாலியோன்” என்பதற்கு “வெள்ளியவளை (சங்கு) போலும் நிறத்தையுடைய வெள்ளை மூர்த்தி” என்று பொருள் உரைத்தார் அடியார்க்கு நல்லார்.

17. ஊர்காண் காதை, 9.

18. 181 / 1923. 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்