தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 4. வள்ளலார் திருவுள்ளம்
- வள்ளலார் திருவுள்ளம்
(சென்னை சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் 125-ஆவது பிறந்த நாள் விழாவில் ஆற்றிய உரை)
சகோதரிகளே! சகோதரர்களே!!
யான் “வள்ளலார் திருவுள்ளம்” என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டிருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. மேலுலக இன்பத்திற்குப் பயன்படுவதா வாழ்க்கை? தற்கால உலகவாழ்க்கைக்குப் பயன்படுவதுதான் உண்மையான வாழ்க்கையாகும். அரிசிப் பஞ்சம் தற்சமயம் தாண்டவமாடுகிறது. ஒரு பணக்காரர் தன் வீட்டில் ஆயிரம் அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைப்பதுதான் முதலாளித்துவம். இதைகாரல் மார்க்குசு வெறுத்தார். நாமும் தான் வெறுக்கிறோம். நாடு என்பது எவ்வாறிருக்க வேண்டும்? இதற்கு ஆங்கில அறிஞரான மாலடோ அவர்கள்:
“நோயாளிகளை அதிகமாகப் பெற்றது நாடாகாது.
சிறைகளை அதிகமாகக் கொண்டது நாடாகாது.
வைத்திய சாலைகளை வெகுவாக உடையது நாடாகாது.
பெண் உரிமையைக் குலைப்பது நாடாகாது.
ஏழை மக்களைத் துன்புறுத்துவது நாடாகாது.”
என்றெல்லாம் கூறுகிறார். தீய ஒழுக்கங்களால் நோய் வருகிறது. நோய் தீர்க்கும் மருந்தை நமது அருட்சுடர் வள்ளலார் வெகு அழகாகக் கூறியுள்ளார். அவரை ஒரு பெரிய மருத்துவர் என்றே சொல்லலாம்.
வள்ளலார் நாட்டிலே அருளாட்சி காண விரும்பினார். ஆகவே ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக‘ என்றார். ‘அருணயந்த நன்மார்க்கர் ஆள்க‘ என்று அடுத்தபடியே ஆள்வோரையும் கூறினார். அவர் எந்த மாதிரியான அரசைச் சொன்னார்? அரசற்ற அரசை, காவற்காரன் இல்லாத அரசை, கள்ளச்சந்தை கலவாத அரசைச் சொன்னார். அவ்வாறு அவர் காண விரும்பிய அருளாட்சி வருமா? வரும். ஐந்து ஆண்டிலே வரும் என்று சிலர் சொல்லுகிறார்கள். பத்து ஆண்டிலே கட்டாயம் வரும் என்று நான் சொல்லுகிறேன்.
பாரதியாரைப் புதுநெறி காட்டிய புலவன் என்று உலகம் இன்று போற்றுகிறது. அந்த பாரதியார் உயிராயிருந்தபோது பத்து உரூபாய்க்குப் பட்டபாடு எனக்குத் தெரியும். இப்பொழுது பத்து இலட்சம் வேண்டுமானாலும் அவருக்குக் கிடைக்கிறது. ஆடம்பரமான வெளித் தோற்றத்தை அவர் விரும்பவில்லை- ஒருக்காலும் விரும்பவே மாட்டார். இப்போது பாரதியார் சொன்னதைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளலார் சொல்லி விட்டார். வள்ளலார் சொன்ன சிவம் எது?
‘கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்குங் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே
என்னரசே யான் புகலும் இசையுமணிந் தருளே.”
என்றவாறு எல்லார்க்கும் பொதுவான சிவமே வள்ளலார் கண்ட சிவம். ஒரு சிலரைக் கண்டு “கோயிலின் உள்ளே வராதே! சாமி அருகில் போகாதே” என்று சில தீட்சதர்கள் இன்றும் கூறுகிறார்கள். அவர்களே ‘செட்டியாரா! ஐந்து உரூபாய் தட்சணையா! வாங்க வாங்க’ என்று உபசரித்து அழைக்கும் இடத்திலா சிவம் இருக்கும்? ஒருக்காலும் இருக்காது, இருக்காது என்பதை நான் அறுதியிட்டுக் கூறுவேன்.
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் சிவம் அல்லவா நம் சிவம்! கடவுள் இல்லை என்று சொல்பவரையும் மதிப்பவரன்றோ நம் சிவம். நாத்திகத்தைப் பரப்பும் ஆசிரியர்களை நீக்கவேண்டு மென்று புதுச் சட்டம் ஒன்று பிறந்திருக்கிறது. சட்டத்தால் தடுப்பது அறியாமை-அநாகரிகம் என்பேன். சட்டம் என்றாலேயே எதையும் வெல்ல முடியாது. இன்று ஆத்திக ஆட்சி சட்டத்தால் தடுக்கிறது. நாளை நாத்திக ஆட்சி வந்தால் ஆத்திகம் கூடாது என்று சட்டம் போடுகிறது. இது தவறு. கடவுள் இல்லை யென்றால் காட்டவேண்டும். அறிவியல் மூலமாகக் காட்டலாமே! திருநீற்றில் இருக்கிற நன்மையை எடுத்துச் சொல்லலாமே. குங்குமத்தில் இருக்கிற குணத்தை எடுத்துச் சொல்லலாமே. நாட்டில் சட்டமே கூடாது என்பது என் கருத்து. ஏழையைக் கண்டு தீட்சதர் வெறுக்கிறார். ஏழையை நடராசாவிடம் நெருங்காதபடி செய்கிறார். பொதுவுடைமையாகிய நடராசா அப்படி யில்லையே! அவர் எங்கும் உள்ளாரே! வள்ளலார் கண்டது தீட்சதருடன் இருக்கும் நடராசா அல்ல. அவர் கண்டது பொதுவுடைமை நடராசா வன்றே !
“மழவுக்கு மொருபிடிசோ றளிப்பதன்றி
யிருபிடியூண் வழங்க லிங்கே
உழவுக்கு முதல் குறையு மெனவளர்த்தங்கு
அவற்றையெலா மோகோ பேயின்
விழவுக்கும் புலாலுண்ணும் விருந்துக்கும்
மருந்துக்கு மெலிந்து மாண்டார்
இழவுக்கு மிடர்கொடுங்கோ லிறைவரிக்குங்
கொடுத்திழப்பா ரென்னே யென்னே.”
இன்றைய நாட்டிலே உணவுப் பஞ்சமும் உடைப் பஞ்சமும் தாண்டவமாடும் காலத்திலே நம்மனோர் செய்கின்ற தடபுடல் உற்சவத்தைக் கண்டே நம் வள்ளலார் மேற்கண்ட பாடலைப் பாடினார் போலும். இரு பிடியூண் வழங்கினால் உழவுக்கு முதல் குறையு மென்று வளர்த்த பொருளை-கள்ளச் சந்தை காசை-பேயின் விழவுக்கு வீணாக்குகின்றனர். தங்க மயில்வாகனம், வெள்ளி (இ)ரிசபம், புட்ப விமானம், பொய்க்கால் குதிரை, மேளக் கச்சேரி, நாட்டியக் கச்சேரி, வாண வேடிக்கை முதலான வற்றிற்கு பணத்தைப் பாழாக்குகின்றனர். இவை யெல்லாம் பேயின் விழாவல்லாமல் வேறென்ன? உயிர்க்கிரங்கும் கடவுள் உண்மையாக இவற்றை யெல்லாம் கண்டு உளம் பூரிப்பாரா? அவ்வாறு அவரது உள்ளம் இவற்றைக் கண்டு குளிருமாயின் அது பேயல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்?
இங்ஙனமே புலாலுண்ணும் விருந்துக்கும், மாண்டார் இழவுக்கும், கொடுங்கோல் இறைவரிக்கும் பணம் செலவிடப்படுவதையும் கண்டு உள்ளம் வெதும்புகின்றார் வள்ளலார். அறிவு விளங்க வேண்டிய காலத்தில் அந்தக் காலத்தில் ஒருவர் தோன்றுகிறார். அவரைப் பெரியவர் என்கிறோம்.
சன்மார்க்கம் வேண்டிய காலத்தில் அருட்சுடர் வள்ளலார் அவர்கள் தோன்றி அதற்கு வழிகாட்டி யுள்ளார்கள். ஆகவே வள்ளற் பெருமானார் வாழ்க என்று அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்று வோமாக.
(தொடரும்)
தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்)
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார்
Comments
Post a Comment