பூங்கொடி 21 – கவிஞர் முடியரசன்: கோமகன் ஆவல்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 01 November 2023 அகரமுதல (பூங்கொடி 20 – கவிஞர் முடியரசன்: புற்றரைக் காட்சி – தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் ஆவல் மானிகர் விழியாள் மலர்வனம் புகுசொல் தேனெனப் பாய்ந்தது திருமகன் செவியில்; ‘ஒண்டொடி அவள்மன ஒப்புதல் பெற்றுத் தண்டமிழ் நிகர்க்கும் தையல் கொழுநன் ஆவேன் யான்’ என ஆவல் துரப்பக் காவிற் புகுந்துள பாவையைக் காண்பான் வில்விடு அம்பென விரைந்தனன் கோமகன்; பூங்கொடி வெருவுதல் புகுவோன் றன்னைப் பூங்கொடி நோக்கி ‘இகுளை! இம்மகன் என்மேற் காதல் 60 மிகுமனத் தானென மேலொரு நாளில் தேன்மொழி அனையிடம் செப்பக் கேட்டுளேன் யானிவண் செய்வது யாது’என. நடுங்கினள்; படிப்பகம் புகுதல் அல்லி வெருவி ஆங்குள படிப்பகம் அதனுட் புகுகென அரிவையைக் கடத்தித் தான்வெளிப் புறத்தே தனிமையில் நின்றனள், கோமகன் காமவுரை காமம் என்னுங் கடுவிட நாகம் செக்கர் மாலைத் தென்றலின் இசையால் பக்கம் நின்று படம்விரித் தாடித் தீண்டஅப் பெருமகன் சிறுகுணம் மேவி நீண்ட உயிர்ப்பொடும் நெருங்கி வருவ...