Skip to main content

தமிழினத்து நலவாழ்வை எண்ணல் வேண்டும்! – புலவர் பழ.தமிழாளன்

 அகரமுதல






தமிழினத்து நலவாழ்வை எண்ணல் வேண்டும்!

  • இதழ்களுக்கு வேண்டும் !

1.
நாடாம்நம் மொழியினமே போற்றல் வேண்டும் !
நற்றமிழர் பண்பாடு காத்தல் வேண்டும் !
வாடாமல் உணவுண்டே மக்கள் வாழ
வழிவகைகள் ஆசான்போல் கூறல் வேண்டும் !
நாடாளும் மன்னனிடம் குறையே கண்டால்
நக்கீரன் போலுறுதி கூறல் வேண்டும் !
ஏடாள்வோன் என்றென்றும் நெருப்பைக் கக்கும்
எரிமலையாய்த் தீமைதனை எரித்தல் வேண்டும் !

       தமிழினமக்களுக்கு  வேண்டும் !

2.
மனமொன்றித் தமிழினத்து மக்கள் எல்லாம்
மாற்றமின்றித் தமிழறத்தைப் போற்றல் வேண்டும் !
இனம்நாடு மொழிவாழ்ந்து சிறப்புற் றோங்க
எந்நாளும் ஏற்றபணி செய்தல் வேண்டும் !
தனதுநல வாழ்வதனைப் புறத்தே தள்ளித்
தமிழினத்து நலவாழ்வை எண்ணல் வேண்டும் !
இனப்பகையாம் ஆரியத்தை வெல்லு தற்கே !
எல்லாரும் ஒன்றிணைந்தே நிற்றல் வேண்டும் !

3.
பகுத்தறிவுப் பாதைவழி செல்லு கின்ற
பைந்தமிழர் நாமென்றே உணர்த்தல் வேண்டும் !
நகுவதற்கே ஏற்புடைய செயல்கள் போக்கி
ஞாலமதில் என்றென்றும் வாழ வேண்டும் !
பகுத்தளித்தே உணவுண்பார் தமிழ ரென்றே
பாரதிர முரசறைந்து கூறல் வேண்டும்!
தகுமானம் தமிழர்தம் உயிரே என்று
தரைவாழ்வார் உணர்ந்திடவே உரைத்தல் வேண்டும் !

புலவர் பழ.தமிழாளன்,
இயக்குநர் - பைந்தமிழியக்கம்,
திருச்சிராப்பள்ளி.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்