Skip to main content

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 2

 அகரமுதல




(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 1 இன் தொடர்ச்சி)


பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம்


அத்தியாயம் 1 தொடர்ச்சி

தாழையூர் சத் சங்கத்தின் விசேடக் கூட்டம் அன்று விமரிசையாக நடைபெற்றது. உள்ளூர் வெளியூர்ப் பிராமணத் தலைவர்களும், சனாதனிகளான மற்ற வகுப்புப் பெரியவர்களும், இலட்சாதிகாரியும் வைதிகப் பிரியருமான சீரீமான் குழந்தைவேல் செட்டியாரைப் பாராட்டக் கூடினர். செட்டியார் மீது சத்சங்கத்தின் ஆசீர்வாதம் விழுந்ததற்குக் காரணம், அவர் சனாதனக் கோட்பாட்டைச் செயல் முறையிலே நிலை நாட்டத் தம் ஒரே மகனை வீட்டை விட்டு வெளியேற்றியது தான். மகன் பரமசாது, ஆனால் சீர்திருத்தவாதி. வேறொர் குலப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்றான் ; செட்டியார் தடுத்தார், மகன் கேட்க வில்லை ; சாதி ஆசாரத்தைக் கெடுக்கும் பிள்ளை என் வீட்டுக்குத் தேவையில்லை என்று துரத்திவிட்டார்.

        தாழையூர்.
அன்புள்ள அம்சாவுக்கு,

உனக்குக்கடிதம் எழுதவேண்டும் என்று பலநாட்களாக யோசித்து யோசித்து, கடைசியில் இன்று எழுத உட்கார்ந்தேன். “உனக்காவது கலியாணம் நடக்கப் போவதாவது. உன்னுடைய கொள்கைகளைக் கட்டிக் கொண்டு நீ அழவேண்டியவளே தவிர, ஊரிலே நாலு பேரைப் போலக் காலா காலத்தில் கலியாணம் செய்து கொண்டு சந்தோசமாக இருக்கப் போவதில்லை. நீ தான், எந்த சாதியானாக இருந்தாலும் சரி, காதலித்தவனைத்தான் கலியாணம் செய்து கொள்வது, அதிலேயும். ஐயர் இல்லாமல் செய்துகொள்வது, என்று கூட்டங்களிலே பேசுகிறாயே ! அது எப்படியடி நடக்கும் என்று என்னைக் கேலி செய்தபடி இருப்பாயல்லவா? அடி முட்டாளே ! கேள்! உனக்குக் காதலைப் பற்றிக் கடுகுப் பிரமாணமும் தெரியாது.


இப்போதாவது தெரிந்துகொள், என் சபதம் நிறைவேறிவிட் டது. அடுத்த வெள்ளிக்கிழமை எனக்குக் கலியாணம்! ஐயர் நுழையவே முடியாத இடத்தில், சிங்காரபுரிச் சேரியிலே உள்ள சீர்திருத்தச் சங்கத்திலே கலியாணம்! யார் தெரியுமா? என் மாமனாரைப் பார்த்தால், பக்தையான நீ கீழே விழுந்து விழுந்து கும்பிடுவாய்; அவ்வளவு சிவப்பழமாக இருப்பார். தாழையூர் தனவணிகர் குழந்தைவேல் செட்டியார் என்றால் எந்தக் கோயில், அர்ச்சகரும், “மகா பக்திமானல்லவா” என்று தோத் தரிப்பார்கள். அப்படிப்பட்டவர் தவம் செய்து பெற்ற பிள்ளைதாண்டி, என் கணவர் ; பெயர், பழனி!

அவர், என்னை வெற்றி கொள்ள அதிகக் கசுடப் படவில்லை. எப்போதாவது ஒரு தடவை, சீர்திருத்தச் சங்கத்துக்கு வருவார் அதிகம் பேசமாட்டார் : மற்றவர்கள் பேசும் போது, மிகக் கவனமாகக் கேட்பார்; அதிலும் நான் பேசும்போது, ஆனந்தம் அவருக்கு. மெள்ள மெள்ள நான் அவரைச் சீர்திருத்தக்காரராக்கினேன். ஆரம்பத்தில் அவர் சாதிச் சண்டை, குலச் சண்டை கூடாது; வேறு வேறு சததியாக இருந்தாலும், சண்டை சச்சரவு இல்லாமல் வாழவேண்டும் என்று மட்டுமே கூறி வந்தார். நாளாக நாளாக, தீவிர வாதியானார். நான் என் பேச்சினால், அவரை வென்று விட்டேன் : அந்தப் பெருமையும் சந்தோசமும் எனக்கு ! அவரோ, தம் பார்வையாலேயே, என்னை வென்றுவிட்டார். குழந்தை போன்ற உள்ளம் அவருக்கு. சாதாரணமாகப் பல ஆடவருக்கு உள்ள குறும்புப் பார்வை, குத்தலான பேச்சு இவை கிடையா. “மிசுட்டர் பழனி” என்று நான் தைரியமாக அவரைக் கூப்பிடுவேன். அவரோ நாகவல்லி என்று கூடத் தைரியமாக என்னைக் கூப்பிட மாட்டார். புன்சிரிப்புடன் என் அருகே வருவார். அவ்வளவு சங்கோசம். ஆனால், அவருடைய காதலைக் கண்கள் நன்றாக எடுத்துக் காட்டியபடி இருந்தன.

துணிந்து ஒரு தினம் கேட்டார், நான் திடுக்கிட்டேன் ; அவர் கேட்டாரே என்பதால் அல்ல. அந்தக் கேள்வி என் மனத்திலே எழுப்பிய களிப்பைக் கண்டு! “நான் என்ன சாதி? நீங்கள் சைவச் செட்டிமார் குலம்!” என்று நான் கூறினேன். அவர், நான் அடிக்கடி சங்கத்திலே சாதியைக் கண்டித்துப் பேசுவேனே, அந்த வாதங்களை அழுத்தம் திருத்தமாகக் கூறினார். அன்று மாலை மணி ஆறு இருக்கும். அம்சா! என்ன இருந்தாலும் இந்த ஆண்களே கொஞ்சம் அவசரக்காரர்கள் தான். பேச்சு நடந்து கொண்டே இருக்கையில் அவர், திடீரென்று என்னை ஆரத்தழுவிக் கொண்டார். எதிர்ப்பவர்களின் வாதங்களைத் தவிடு பொடியாக்கும் திறமை கொண்ட நான், பைத்தியம் போல ‘ஐயோ ! விடுங்கள் ! யாராவது வந்துவிட்டால் !’ என்று குழைந்து கூறினேன். நல்லவேளை , பழனி, என் பேச்சைக் கேட்கவில்லை ! எமது அதரங்கள் ………………… சகசந்தானடி !

பிறகு அவர் ஒவ்வொரு மாலையும் வர ஆரம்பித்தார். காலையிலே நான் பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போதெல்லாம் அன்று மாலை அவர் என்ன பேசுவார், என்னென்ன விதமாக விளையாடுவார் என்று நினைத்தபடியே இருப்பேன்.


வங்காளத்துக்குத் தலை நகரம் எது என்று கேட்க வேண்டும்; நானோ கல்கத்தாவுக்குத் தலைநகரம் எது என்று கேட்பேன். என் வகுப்பிலேயே புத்திசாலி வனிதா; அவள் எழுந்திருந்து “கேள்வியே தவறு” என்றாள். எனக்குக் கோபம் பிரமாதமாக வந்தது. பிறகு, என் தவற்றை உணர்ந்து நானே சிரித்துவிட்டேன். சிரித்ததும் எனக்கு அவருடைய கவனம் தான் வந்ததது. ஏன் தெரியுமா? நீ குறும்புக்காரி, உன்னிடம் கூறமுடியாது!

எங்கள் காதல் வளர வளர, அவர் வீட்டிலே சச்சரவு வளர்ந்தது. சாதி குல ஆச்சாரத்திலே, ஐயர்மார்கள் தவறிவிட்டதாலேயே காலா காலத்தில் மழை பெய்வதில்லை என்று எண்ணுபவர் என் மாமனார்; அதற்குப் பரிகாரமாக , மற்ற சாதியார் தத்தம் சாதியாச் சாரத்தைச் சரியாகக் கவனிக்கவேண்டும் என்று கூறுபவர், அப்படிப்பட்ட கைலாய பரம்பரைக்காரர், சிலுவையின் தயவால் கிருத்தவச்சியான சேரிப் பெண்ணைத் தம் மகன் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதிப்பாரா? வீட்டிலே புயல் அடித்தது. அவர், என் காதலர் தகப்பனார் போடும் கோட்டைத் தாண்டுபவரல்ல. ஆனால் காதல் இராச்சியத்திலே, என் மாமனாருக்குக் கோடு போடும் அதிகாரம் ஏது? தமக்குச் சம்பந்தமில்லாத இலாக்கா என்பதை அவர் மறந்து விட்டார் அதன் விளைவு என்ன தெரியுமா? தந்தை – மகன் என்ற சம்பந்தமே அறுபட்டுப் போய்விட்டது. அந்தக் கிருத்தவச் சிறுக்கியைக் கல்யாணம் செய்து கொள்வதானால் என் முகாலோபனம் செய்யக்கூடாது. இனி நீ என் மகன் அல்ல . நட வீட்டைவிட்டு,’ என்று கூறிவிட்டாராம்.

பழனி எங்கள் கிராமத்துக்கே வந்து விட்டார். இரண்டு மைல்தான் இருக்கும் தாழையூருக்கும் சிங்காரபுரிக்கும். ஆனால் இரண்டு மைலை அவர் தாண்டும் போது, ஒரு உலகத்தை விட்டு மற்றோர் உலகுக்கே வந்து சேர்ந்தார் என்றுதான் பொருள். அடி அம்சா ! அந்த உலகிலே, என் காதலருக்கு மாளிகை இருக்கிறது. வைரக்கடுக்கண் இருக்கிறது. தங்க அரைஞாண் இருக்கிறது, இரும்புப் பெட்டியிலே இலட்சக் கணக்கிலே கொடுக்கல் வாங்கல் பட்டி இருக்கிறது, இரட்டைக் குதிரைச்சாரட்டும். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் ஆட்களும் உள்ளனர். இரண்டே மைல் தாண்டி இங்கே வந்தார்; என்ன இருக்கிறது? என்னுடைய பழைய வீடு ! தோட்டத்திலே பூசினிக்கொடி ! தெருக்கோடியில் ஒரு வெறி நாய், இவ்வளவு தான்!

‘கண்ணாளா! என் பொருட்டு ஏனோ இந்தக் கசுட்டம்?’ என்று நான் கனிவுடன் கேட்டேன். அவரோ, ‘ஒருவருடன் வாதாடிப் பாதி உயிர்போயிற்று, இனி உன்னிடமும் வாதாட வேண்டுமா?’ என்று கேட்டார். எவ்வளவோ செல்வத்தை என் பொருட்டுத் தியாகம் செய்த அந்தத் தீரரை நான் என்ன போற்றினாலும் தகும். என் அன்புக்கு ஈடாகாது அந்த ஐசுவரியம் என்றார்; என் கண்ணொளி முன் வைரம் என்ன செய்யும் என்று கேட்டார்; உன் ஒரு புன்சிரிப்புரிக்கு ஈடோ, என் தகப்பனாரின் பெட்டியிலே கிடக்கும் பவுன்கள் என்றார்; ஒவ்வொரு வாசகத்துக்கும் முத்தமே முற்றுப்புள்ளி! காதலர் இலக்கணம் அலாதி அல்லவா ! உன்னிடம் சொல்கிறேனே நான். நீயோ, மரக்கட்டை !

கடைசியில், சிங்காரபுரியிலேயே அடுத்த வெள்ளிக் கிழமை கல்யாணம் என்று நிச்சயமாகி விட்டது. யாராரோ தடுத்துப் பார்த்தார்கள் அவரை. முடியவில்லை. தாழையூர் கொதிக்கிறது. என் மாமனார் தற்கொலை செய்து கொள்ளக் கூட நினைத்தாராம் : ஆனால் ஏதோ ஒரு சிவபுராணத்திலே, ஆண்டவன் கொடுத்த உயிரை அவராகப் பார்த்து அழைக்கு முன்னம் போக்கிக் கொள்வது மகாபாபம் என்று எழுதியிருக்கிறதாம். இல்லையானால் இந்நேரம் எனக்கு மாமனாரும் இருந்திருக்க மாட்டார். மாமி காலமாகி ஏறக்குறைய 5 வருடங்களாகின்றனவாம். பழனிக்கு வயது 22: அதாவது என்னைவிட 3 வயது பெரியவர் (என் வயது 19 என்று அவரிடம் சொல்லி வைத்திருக்கிறேன்!). வெள்ளிக்கிழமை நீ அவசியம் வரவேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு நீண்ட கடிதம். இன்னும் கூட ஏதாவது எழுதலாமா என்று தோன்றுகிறது. முடியாது! அதோ அவர்!

உன் அன்புள்ள, நாகவல்லி.

(தொடரும்)

கா.ந. அண்ணாதுரை

குமரிக்கோட்டம்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்