Skip to main content

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 5

 அகரமுதல




(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 4 இன் தொடர்ச்சி)

குமரிக் கோட்டம்

அத்தியாயம் 2

பழனி பராரியாகி, சோற்றுக்கே திண்டாடி, மனைவியால் வெறுக்கப்பட்டுத் தன் வீட்டு வாயிற்படிக்கு வந்து நின்று, “அப்பா ! புத்தியில்லாமல் ஏதோ செய்துவிட் டேன், பொறுத்துக் கொள்ளுங்கள் ‘ என்று கெஞ்ச வேண்டும், “சீ நீசா ! என் முகத்தில் விழிக்காதே! உன்னைக் கண்டாலே நரகம் சம்பவிக்கும்” என்று ஏச வேண்டும்; பழனி கதறவேண்டும்; பிறகு அவனை மன்னித்து உள்ளே சேர்த்துக்கொள்ள வேண்டும்; இதுவே செட்டியாரின் நித்தியப்பிரார்த்தனை. எந்தத் தெய்வத்திடம் மனுச்செய்தும், மகன் வாயிற்படி வரவும் இல்லை, வறுமையால் தாக்கப்பட்டதற்காக, மனம் மாறினதாகவும் தகவலில்லை.

“கை கோத்துக் கொண்டு கலகலவென்று சிரித்துக் கொண்டே போனார்கள்.”

“பழனி, (இ)ராசா போலத்தான் இருக்கிறான்.”

“ரொம்ப அழகாகப் பேசுகிறான்.”

” நேற்றுக் கூட்டத்திலே கல் விழுந்தபடி இருந்தது; பழனி கொஞ்சம் கூடப் பயப்படாமல், பேசிக் கொண்டே இருந்தான் என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஒவ்வோர் செய்தியும் செட்டியாருக்குச் செந்தேள் தான் ! துடித்தார், அவன் துயரமின்றிச் சந்தோசமாக வாழ்கிறான் என்று கேட்டு, தகப்பனார் மகன் விசயமாகக் கொள்ளக்கூடிய உணர்ச்சியல்ல தான். ஆனால் குழந்தைவேல் செட்டியார், பழனியைத் தன் மகன் என்று எண்ணவில்லை ; தன் பணத்தை அலட்சியப் படுத்திய ஆணவக்காரன் என்றே எண்ணினார்.

“இருக்கட்டும் இருக்கட்டும்; அவள் எத்தனை நாளைக்கு இவனிடம் ஆசை காட்டப் போகிறாள்? ‘முதலிலே கோபித்துக்கொண்டாலும் பிறகு சமாதானம் ஆகிவிடுவார், அப்போது சொத்துப் பழனிக்குத் தரப் படும், நாம் சொகுசாக வாழலாம்’ என்று அந்தச் சிறுக்கி எண்ணிக் கொண்டுதான், என் மகனைத் தன் வலையிலே போட்டுக்கொண்டாள். கடைசிவரை ஒரு பைசாகூட நான் தரப்போவதில்லை என்று தெரிந்தால், ‘போய் வாடா’ என்று கூறிவிடுவாள் ; பயல் வந்து சேருவான். பணத் தாசையால் தானே அவள் அவனை மயக்கி வைத்தாள் ” என்று எண்ணி, மனத்தைத் தேற்றிக்கொள்வார். அவருக்கென்ன தெரியும், அவர்கள் சிருட்டித்துக் கொண்ட இராச்சியத்திலே, பணத்துக்கு அல்ல மதிப்பு என்பது!

# # #

மறையூர், நால்வரின் பாடல் பெற்ற தலமல்ல ஆனால் அதற்கு அடுத்த படிக்கட்டிலிருந்த அடியார்கள் பலர், அந்த சேத்திரத்தைப்பற்றிப் பாடியிருக்கிறார்கள். அங்கிருந்த ஒரு மண்மேடு, ஒரு காலத்தில் மால்மருகன் கோயிலாக இருந்ததென்று வைதிகர்கள் கூறுவர்.
குழந்தைவேல் செட்டியாருக்கு, மறையூர் முருகன் கோயிலை அமைக்கும் திருப்பணியின் விசேடத்தைத் தாழையூர் சனாதனிகளும் மறையூர் வைதிகர்களும் கூறினர். அவரும், வெகுகாலத்துக்கு முன்பு கிலமாகிப் போன திருக்கோயிலை மீண்டும் அமைத்துத் தரும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததே என்று பூரித்தார். பணத்துக்குக் குறைவில்லை ; ஆகவே, நினைத்த மாத்திரத்தில் ஆள் அம்பு தளவாடங்கள் வந்து சேர்ந்தன. செட்டியார் மறையூர் முகாம் ஏற்படுத்திக் கொண்டு, கோயில் வேலையை ஆரம்பித்துவிட்டார். பல ஊர்களிலிருந்து, கட்டட வேலைக்காரர்கள், சிற்பிகள், ஓவியக் காரர், கூலிகள் ஆகியோர் மறையூர் வந்து குவிந்தனர். மறையூர் சேரிக்குப் பக்கத்திலே, நூறு குடிசைகள் புதிதாக அமைக்கப்பட்டு, அவற்றிலே கூலி வேலை செய்பவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது அதிகாலை எழுந்திருப்பார்; காலைக்கடனை முடித்துக்கொண்டு, திருப்பணியைக் கவனிப்பார். அரைத்த சுண்ணாம்பை எடுத்துப் பார்ப்பார் ; செதுக்கிய கற்கம்பங்களைத் தடவிப் பார்ப்பார் ; வேலையாட்களைச் சுறுசுறுப்பாக்குவார். சோலையிலே புட்பங்கள் மலரத் தொடங்கியதும் வண்டுகள் மொய்த்துக்கொள்வது போல, மறையூரில் வேலையாட்கள் குழுமிவிட்டனர். ஒவ்வோர் மாலையும், அங்கிருந்த பெரிய ஆலமரத்தடியிலே அமர்ந்து அன்றாடக் கூலியைத் தருவார்.

பழனிமேல் ஏற்பட்ட கோபம், செட்டியாரின் சொத்தை மதிலாகவும் பிரகாரமாகவும், திருக்குளமாகவும், மண்டபமாகவும் மாற்றிக்கொண்டிருந்தது. இந்தக் கோயில் கட்டும் வேலையிலே ஈடுபட்டுக் கொண் டிருந்த வேலையாட்களிலே பெண்களும் ஏராளம். அவர்களிலே. குமரி ஒருத்தி. மாநிறம், ஆனால் உழைப் பால் மெருகேறின உடல், குறுகுறுப்பான பார்வை, இயற்கையான ஓர் புன்னகை தவழ்ந்தபடி இருக்கும். என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் மெல்லிய குரலிலே ஏதாவது பாடிக்கொண்டே இருப்பாள். இருபதுக்குள் தான் வயது. பருவ கருவத்துடன் விளங்கும் அப்பாவையின் பார்வையிலேயே ஓர்வித மயக்கும் சக்தி இருந்தது. கொச்சைப் பேச்சோ, வேதாந்திக்குக் கூட இச்சையைக் கிளறி விடுவதாக இருக்கும். அவள் கோபமே கொள்வதில்லை.

“ஏலே ! குட்டி ! என்ன அங்கே குரங்கு ஆட்டம் ஆடறே!’ என்று மேசுதிரி முத்துசாமி மிரட்டுவான். குமரி பயப்படவுமாட்டாள், கோபிக்கவுமாட்டாள். ” அண்ணி, காலையிலே சண்டைபோட்டுதா?” என்று கேலி பேசுவாள். கடைக்கண்ணால் பார்ப்பது குமரிக்கு வழக்கமாகிவிட்டது. கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டே . முகவாய்க்கட்டையில் கைவைத்துவிட்டு, கழுத்தை ஒரு வெட்டு வெட்டி, “அடே, அப்பா! காளைமாடு மாதிரி விழிக்கிறான் பாரு . ஏமாறுகிறவ நான் இல்லை. அதுக்கு வேறே ஆளைப் பாருடா. ராசா தேசிங்கு” என்று குறும்பாகப் பேசுவாள், யாராவது அவளிடம் கொஞ்சம், அப்படி இப்படி நடக்க நினைத்தால்.

“குட்டி, பார்ப்பதும் சிரிப்பதும், குலுக்கி நடப்பதும், வெடுக்கென்று பேசுவதும் பார்த்தா, தொட்டால் போதும் என்று தோன்றுகிறது; கிட்டே போனாலோ, நெருப்பு : நெருப்பிடம் போவது போலச் சீறிவிழுகிறாளே, இப்படி ஒருத்தி இருப்பாளா?” என்று பலபேர் தோல்விக்குப் பிறகு பேசிக் கொள்வார்கள். குமரிக்கு, அங்கிருந்தவர்களின் சுபாவம் நன்றாகத் தெரியும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வழியும் தெரியும். அதற்காக வேண்டி, யாருடனும் பழகாமலும் இருக்க மாட்டாள். தாராளமாகப் பழகுவாள்; ஆனால் ‘கெட்ட பேச்சு வரும் என்று தெரிந்தால் போதும், வெட்டி விடுவாள். காற்றிலே அலையும் ஆடையைச் சரிப்படுத்த நிற்பாள் ; குறும்புக்காரரின் கண்கள் தன் மீது பாய்வதைக் காண்பாள், முகத்தை எட்டுக்கோணலாக்கிக்காட்டுவாள். அண்ட முடியாத நெருப்பு அவள். அவள் அண்ணனோ, மகா கோபக்காரன். குமரியைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நாணயமான கருத்தைக் கொண்டவர்கள் கூடச் சொக்கனிடம் (குமரியின் அண்ணனிடம்) கேட்கப் பயப்படுவார்கள். தாய்தந்தை இருவரும் இல்லை. தங்கைக்கு அண்ணன் துணை, அண்ணனுக்குத் தங்கை துணை. இருவருக்கும், ரோச உணர்ச்சியே பலமான கவசம்.

குமரி, வேலை செய்யுமிடந்திலே இருந்தவர் அனைவரையும் ‘எடை’ போட்டுவிட்டாளே தவிர, செட்டியாரை அவள் சரியாக எடைபோடவில்லை. பாவம், பெரிய மனுசர், மெத்தாதி, உபகாரி, ஏழைகளிடம் இரக்கம் உள்ளவர், என்றுதான் குமரியும், மற்றவர்களைப்போலவே, அவரைப்பற்றித் தெரிந்திருந்தாள். மற்றவர்களிடம் பேசுவதைவிட, அவரிடம் கொஞ்சம் அடக்கமாகவே பேசுவாள். “யாரங்கே ! மணல் ஏன் இப்படிச் சிதறி இருக்கு? பகவானுக்கான காரியம், பாவபுண்யம் பார்த்து வேலை செய்யுங்கள், கேவலம் பணத்தை மட்டும் கவனித்தால் சரி இல்லை” என்று செட்டியார் சொல்வார்; மற்றவர்கள் முணுமுணுத்தாலும் குமரி மட்டும் குறை கூற மாட்டாள். ஓடிப்போய், மணற் குவியலைச் சரிசெய்வாள்.

மீனா, ஒரு குறும்புக்காரி; கொஞ்சம் கைகாரியுங் கூட, அதற்காகவே அவளுக்கு, மேஸ்திரி ஒருநாள் தவறாமல் வேலை கொடுப்பான். இடுப்பிலே கூடை இருக்கும், அது நிறைய மணல் இருக்காது; ஒய்யார நடை நடப்பாள். பாக்கு இருக்கா அண்ணேன் ! ஒரு வெத்திலைச் சருகு கொடுடி முனி!” என்று யாரையாவது ஏதாவது கேட்டபடி இருப்பாள். கொடுத்தாக வேண்டு மென்பதில்லை. மேஸ்திரியிடம் பேசுவதிலே ரொம்பக் குஷி அவளுக்கு. அவனுக்குந்தான்.

“மேசுதிரியாரே ! இருக்குதா?”

‘கருக்கு மீசைக்காரனை, இருக்குதாண்ணு கேக்கறயே!”

“நான் எதைக் கேட்கறேன் நீ எதைச் சொல்கிறே? “

” கேட்டதற்குப் பதில் நீ என்ன இருக்கான்னு கேட்டே ?”

“கொஞ்சம் புகையிலை கேட்டேன்.” “காரமா இருக்கும்.”

பரவாயில்லை. அந்தக் காரத்தைக் காணதவளா நானு. கொடுங்க இருந்தா”. இப்படிப் பேச்சு நடக்கும். இருவரும் பேசும் போது மற்றப் பெண்கள் இளித்துக் கொண்டு நிற்பார்கள். விடமாட்டாள் மீனா.

தொடரும்)

கா.ந. அண்ணாதுரை

குமரிக்கோட்டம்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்