புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.16- 20
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.11-15 தொடர்ச்சி)
16. இல்லாமை வறுமையவர்க் கியலாமை தீச்செயலே
சொல்லாமை பொய்குறளை சோராமை பிறர்பயனே
செல்லாமை தீநெறியே தீண்டாமை பிறர்பொருளே
கல்லாமை களவிவறே கருதாமை யறங்கடையே.
17. பொன்மான மானாலும் பொருண்மான மானாலும்
மன்மான நிலைதீர்ந்து மதிமான மானாலும்
கன்மான வயலார்முன் கையேந்திப் பல்லிளியார்
தன்மான மாறாத தகுமானத் தனித்தமிழர்.
18. சிறந்தானும் பெருமையினிற் றீர்ந்தானு முரிமையெலாந்
துறந்தானும் பொருவுநிலைத் துறைபோந்து முறைவாழ்ந்தார்
இறந்தேனும் பொதுவாழ்வுக் கியன்றனசெய் குவதல்லான்
மறந்தேனும் பிறன்கேடு சூழாத மணித்தமிழர்.
19. உளமலிந்த பெருங்காதற் கடல்படிந்த வொப்புடையார்
களவியலாம் புணைதழுவி்க் கற்பியலாந் துறைநண்ணி
வளமலிந்த மனைவாழ்க்கைக் கரையேறி மகிழ்பூத்தார்
குளமலிந்த புனன்மருதக் கொடையெதிருங் குளிர்நாடர்.
20. காதலரும் பாதவரைக் காதலிக்குங் கழிமடமும்
காதலர்தம் மிடைத்தோன்றுங் கைகடந்த காமமதும்
தீதெனவே நீத்தின்பத் திறந்தெரிந் திகழ்ந்தார்கள்
போதலர மதியெனப்பூங் குமுதமலர் புனனாடர்.
+++
16. குறளை – கோட்சொல். சோர்தல் – மறத்தல். இவறு – உலோபம். அறங்கடை – குற்றம். 17. மானம் – கேடு. மான – ஒப்ப. 18. பொருவு நிலை – ஒத்தநிலை.
+++
(தொடரும்)
இராவண காவியம் – புலவர் குழந்தை
Comments
Post a Comment