Skip to main content

‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு 4/4 – வெ.அரங்கராசன்

 அகரமுதல




(‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ 3/4 தொடர்ச்சி)

முனைவர் மு.மோகனராசின்

கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’

நூல் திறனாய்வுக் கட்டுரை

4/4

13.1.0.0.அவ்ஆய்வு முடிவுகள் – 6:

               இவை நூலாசிரியன் ஆய்வு முடிவுகள்:

13.1.1.0.பழமையில் பெரும்பற்றுக் கொண்ட கன்பூசியசின் நோக்கிலிருந்து, வள்ளுவர் பெரிதும் வேறுபடுகிறார்.

[பக்.27].

13.1.1.1. பழையன என்பதாலேயே அவற்றைக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும் – போற்ற வேண்டும் என்னும்  உணர்வோ புதியன என்பதாலேயே அவற்றை ஏற்கக் கூடாது என் னும்  உணர்வோ வள்ளுவரிடம் சிறிதும் இல்லை. பழையன வாயினும் புதியனவாயினும் பயனுடையனவாயின் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர் உள்ளம்; அதுவே வள்ளுவம். [பக்.27].

13.1.2.1. உலக மக்கள் ஒன்றெனக்  கருதும் உணர்வைக் கல்வி  உருவாக்க வேண்டும் என்னும் நோக்கைக் கன்பூசியசு  வெளிப்படையாக எங்குமே காட்டவில்லை. உயிரின உறவு / உணர்வு என்னும் அளவில் அவருடைய எண்ணம் செல்லவே இல்லை எனத் துணிந்து கூறலாம்.[பக்.30-3].

13.1.2.2. உலகளாவிய உணர்வை – உறவை – ஒருமைப் பாட் டை உருவாக்குவதை வள்ளுவர் கல்வியின் நோக்குகளில் ஒன்றாகக் கொள்கிறார்.[பக்.45].

13.1.3.0.தம்மை நாடிவரும் தாழ்ந்த குடி மாணர்வர்களுக்குத் தான் கன்பூசியசு மேனிலைக் கல்வியைக் கற்பித்தாரே ஒழிய, தாழ்ந்த குடி ஆடவர் அனைவருமே மேனிலைக் கல்வி கற்க வேண் டும் என வலியுறுத்தவில்லை.[பக்40]. 

13.1.3.1.உலக அரங்கில் “எல்லார்க்கும் கல்வி” எனக் குரல் கொடுத்த – புரட்சி செய்த முதல் பேரறிஞர் வள்ளுவரே எனத் துணியவும் இடமுண்டு.[பக்.43].

13.1.4.0.பெண்கள் கல்வியில் கன்பூசியசு சிறிதளவும் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை.[பக்.41].

13.1.4.1.வள்ளுவரின் கல்வி தொடர்பான சிந்தனைகளில் ஆண், பெண், இளையர், முதியர் செல்வந்தர், ஏழை முதலாகிய எவ்வகை வேறுபாட்டிற்கும் இடமேயில்லை.[பக்.44].

13.1.5.0.தமக்கு முற்றிலும் புதிதான கோட்பாட்டில் கருத்தைச் செலுத்தக் கூடாது என எச்சரிக்கிறார் கன்பூசியசு. [(உ)லூன்  யூ 2:16] [பக்.102].

13.1.5.1.வள்ளுவர் பயனுடையனவாகத் தோன்றும் எல்லாவற்றையும் கற்கலாம் என ஆற்றுப்படுத்துகிறார். [குறள்கள் 321,823].[பக்.102]. 

13.1.6.0.கன்பூசியசின் நோக்கமெல்லாம் அரசு அலுவலுக்கு உரியனவாகக் கருதப்பட்ட நூல்களைக் கற்றுத் தெளிந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. ஆகவே, அவர், ஆய்வுக் கல்வி முறையில் போதிய நாட்டம் செலுத்தவில்லை.

13.1.6.1.கன்பூசியசுக்கு ஏற்பட்ட அந்த உடனடித் தேவை வள்ளுவருக்கு ஏற்பட்டிருக்குமா என்பது ஐயப்பாடே. [பக்.24]

எனவே, திருவள்ளுவர் அரசியல் கல்வியோடு அனைவரும்  இன்றியமையாத அனைத்து வகைக் கல்வியையும் பெற வேண்டும் – எல்லார்க்கும் கல்வி – எல்லார்க்கு  எல்லாம் [குறள்.582]  என்பதை அடிப்படை நோக்காகக் கொண்டிருந்தார். இவ்வகையில், திருவள்ளுவர் உலகளாவிய நிலையில் உயர்ந்து நிற்கிறார் என்பது  பெருமைக்கும் பெருமிதத்திற்கும் உரியது.

14.0.0.0.நூற் பயன்பாட்டு நலன்கள்:

            இந்நூலின் பயனை நூலாசிரியர் முனைவர் கு.மோகனராசு நுழைவாயில் கூறியுள்ளார். அஃது:

          “ஒப்பாய்வு என்பது இன்று வேகமாக வளர்ந்து வரும் ஒரு புதிய புலம். இப்புலத்திற்கு இந்நூல் ஓர் ஆரமாகவும் ஒருமைப்பாட்டுணர்வுக்கு இந்நூல் ஒரு தூண்டுகோலாகவும் அமையும் என்பது உறுதி.”[பக்.4].

எனவே, நூல் ஒப்பாய்ஞர்கள் இந்நூலை ஆழ்ந்து கற்று  ஒப்பாய்வு முறைமைகளை உணர்ந்து மனத்தில் பதிவு செய்து  கொண்டால், பெரும்பயன் தரும்.

ஒப்பாய்வுக்குச் சான்று செப்பும் நூல் இது. ஓர் ஒப்பாய்வை ஒப்பற்ற ஆய்வாக வடிவமைக்க விழையுநருக்கு ஒப்பாய்வு நுண்ணியல் அணுகுமுறைமைகளைத் தப்பாது கற்பிக்கும் வகையில் இந்நூல் பயன்பாட்டு நலன்களை வழங்குகிறது. 

15.0.0.0.நிறைவுரை: 

            ஓர் ஒப்பாய்வு நூல் எப்படி அமைதல் வேண்டும் என்பதற்கு இந்நூல் ஓர் ஒப்புயர்வற்ற ஒப்பாய்வு நூலாகச் செப்பமுற உயர்ந்து நிற்கிறது. ஒப்பாய்வியல் அணுகுமுறைமைகளை அக, புறச் சான்றுகளுடன் ஓர் ஒப்பாய்வியல் சான்று நூலாகச் செப்பரிய முறைமையில் சிறப்புற்று நிற்கிறது.

            அருமை உடைத்து என்று அசாவாமையோடு உழைத்த உழைப்பின் விளைச்சல் இந்நூல். இதனை,

             “நூலாசிரியர் முனைவர் கு.மோகனராசு அவர்கள் ஆண் டில் இளையவரானாயினும் அறிவில் முதியவர்;  உருவில் சிறியவராயினும் உழைப்பில் பெரியவர்; அவ்வியல்புகட்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்றே “கன்பூசியசும் திருவள்ளு வரும் கண்ட கல்வி”  என்னும் இந்நூல்.[பக்.5].

என அணிந்துரையில் முனைவர் சூ.இன்னாசி அவர்கள் அளிக்கும் உயர்தரச் சான்றிதழே [Highly Commented] உண்மைச் சான்று.

            ஒப்பாய்வில் முத்திரை பதித்த இந்நூலுக்கு – இச்செந்நூலுக்கு , ஒப்பாய்வு நூல் வரலாற்றின் ஒரு பக்கத்தில் உறுதியாக இடம் உண்டு. ஒப்பாய்ஞர்களுக்கு மட்டுமன்று, உலகின் மூலை முடுக்குகளில் வாழும் மாந்தர்க்கும் இப்பொன்நூல் கல்வியின் நுணுக்கத்தை  அணுக்கமாக அறிவிக்கும் நன்னூல் ஆகும்.  

            இந்நூலை  ஒப்பாய்வுக் கொடையாக வழங்கிய முனைவர் கு. மோகனராசு அவர்களுக்கு ஒப்பாய்வு  உலகமே நன்றிக் கடன் செலுத்துகிறது.        

            கன்பூசியசை மேல்நாட்டு அறிஞர்கள் உலகெல்லாம் கொண்டு சென்றார்கள். அதுபோல் நாமும் திருவள்ளுவரை உலகெல்லாம் கொண்டுசெல்ல வேண்டும். அதுதான் நாம் திருவள் ளுவருக்குச் செலுத்தும் நன்றிப் பெருங்கடன்.       

16.0.0.0.மேற்கோள் நூல்கள்:

16.1.0.0.திருக்குறள் பரிமேலழகர் உரை, பழனியப்பா பிரதர்சு, சென்னை, ஏழாம் பதிப்பு 2007.

16.2.0.0.தமிழ் நீதிச் செல்வம், புலவர் சு.சீனிவாசன், அறநெறிச் சாரம், சாந்தா பப்ளிஷ்ர்ஸ்,  இராயப்பேட்டை, சென்னை, இரண் டாம் ப திப்பு ஏப்பிரல் 2006.

17.0.0.0.துணைநூற் பட்டியல்:

17.1.0.0.சீனிவாசன் சு., புலவர், முனைப்பாடியார் அறநெறிச் சாரம், தமிழ் நீதிச் செல்வம், பக்.327,.சாந்தா பப்ளிசர்சு, இராயப் பேட்டை, சென்னை, இரண்டாம் ப திப்பு ஏப்பிரல் 2006.

17.2.0.0.திருக்குறள் பரிமேலழகர் உரை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, ஏழாம் பதிப்பு 2007.

17.3.0.0.மோகனராசு கு., முனைவர்,  கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி, வள்ளுவர் கழகம், சென்னை, முதல் பதிப்பு 25-12-1984.

18.0.0.0.சுருக்க விளக்கம்:

18.1.0.0.அறநெறி. – அறநெறிச்சாரம்.

000

பேராசிரியர் வெ.அரங்கராசன்

(முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்

கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி

கோவிற்பட்டி — 628 502, )

கைப்பேசி: 9840947998

   மின்னஞ்சல்: arangarasan48@admin


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்