Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 52

 அகரமுதல

     13 June 2022      No Comment



(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  51 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்
19


சிறிது நேரம் அவருக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தோன்றாமல் சும்மா இருந்தான் அரவிந்தன். அவனிடமிருந்து என்ன பதில் வரப்போகிறதென்று அவனையே இமையாத கண்களால் கவனித்துக் கொண்டு அவரும் நின்றார். அந்தச் சமயத்தில் இடையிடையே பூக்கள் உதிர்ந்து நார் தெரியும் ஒரு உரோசாப் பூமாலையைக் கையில் ஏந்திக் கொண்டு முருகானந்தம் வந்து சேர்ந்தான். “இப்போதுதானப்பா கூட்டம் முடிந்தது. ஒன்றரை மணி நேரப் பேச்சு. தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி வெளுத்துக் கட்டி விட்டேன். தொண்டை வறண்டு போச்சு” என்று அரவிந்தன் மட்டும் தான் அங்கிருப்பான் என்னும் எண்ணத்தில் இரைந்து கூறிக் கொண்டே உள்ளே நுழைந்த முருகானந்தம் மீனாட்சிசுந்தரம் இருப்பதைக் கண்டு கூச்சமடைந்தான்.

“வா தம்பி! நல்ல சமயத்தில்தான் வந்திருக்கிறாய்! உனக்கு ஆயுசு நூறு! இப்போதுதான் சற்று முன் அரவிந்தனிடம் உன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று அவரே தாராளமாக வரவேற்ற பின்புதான் முருகானந்தம் கூச்சம் தணிந்து இயல்பு நிலையை அடைந்தான். தன்னுடைய கோடைக்கானல் கடிதப் போக்குவரவு விவகாரத்தை மீனாட்சிசுந்தரம் வரை எட்டவிட்டு அவரையும் கூப்பிட்டு வைத்துக் கொண்டு தன்னை விசாரிக்க அரவிந்தன் காத்திருக்கிறானோ என்னும் தயக்கமும் முருகானந்தத்தின் கூச்சத்துக்கு ஒரு காரணம். அப்படி இல்லை என அப்போதே தெரிந்தது. “இப்போது அவசரமில்லை அரவிந்தன்! உனக்கு நிதானமாக யோசிக்க கொஞ்ச நேரம் தருகிறேன். நீ இந்தத் தம்பியையும் கலந்து சிந்தித்துக் கொண்டு நாளைக்குக் காலையில் எனக்கு முடிவு சொன்னால் போதும். அப்புறம் உன்னையே கோடைக்கானலுக்கு அனுப்புகிறேன். பூரணியையும் ஒரு வார்த்தை கேட்டுத் தெரிந்து கொண்டு வந்துவிடலாம். எனக்கு வீட்டுக்குப் போக நேரமாயிற்று. நான் வருகிறேன். காலையில் பார்க்கலாம்” என்று அவர்கள் இருவரையும் தனிமையில் அங்கு விட்டுவிட்டுக் கிளம்பினார் மீனாட்சிசுந்தரம். அவரை வழியனுப்பும் பாவனையில் எழுந்திருந்த அரவிந்தனும் முருகானந்தமும், வாயில் வரை உடன் போய்விட்டு வண்டி புறப்பட்டதும் உள்ளே திரும்பி வந்தார்கள். திரும்பியதும் கன்னத்தில் கையூன்றியபடி முகத்தில் தீவிர சிந்தனையின் சாயல் தெரிய நாற்காலியில் சாய்ந்தான் அரவிந்தன். அவனுடைய அந்த நிலைக்குக் காரணம் புரியாமல் முருகானந்தம், “என்னப்பா இது? கப்பல் கவிழ்ந்து போன மாதிரி கன்னத்தில் கையூன்றிக் கொண்டு உட்கார்ந்து விட்டாய்? ‘பெரியவர்’ என்ன சொல்லிவிட்டுப் போகிறார் உன்னிடம்? ஏதோ என்னையும் கலந்து கொண்டு காலையில் முடிவு சொல்லும்படிக் கூறிவிட்டுப் போகிறாரே என்ன அது?” என்று கேட்டான்.

‘முருகானந்தம்-வசந்தா தொடர்பு எப்போது எந்தவிதத்தில் ஆரம்பமாகிக் கடிதங்கள் எழுதிக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது’ என்று அவனையே விசாரித்துத் தெரிந்து கொண்டு கண்டிக்க வேண்டுமென்று அரவிந்தன் நினைத்திருந்தான். ஆனால் இப்போது அந்த நினைவே முற்றிலும் மறந்து போய்விட்டிருந்தது அவனுக்கு. மீனாட்சிசுந்தரம் பூரணியைத் தேர்தலில் நிறுத்தும் விசயம் பற்றிச் சொல்லிவிட்டுப் போனதிலிருந்து அவன் அதைப் பற்றிய நினைவுகளிலேயே மூழ்கி விட்டான்.

முருகானந்தம் மீண்டும் வற்புறுத்திக் கேட்டதின் பேரில் மீனாட்சிசுந்தரம் தன்னிடம் கூறியவற்றைச் சுருக்கமாக அவனுக்குச் சொன்னான் அரவிந்தன். அவன் நினைத்தது போல் முருகானந்தம் வருத்தமோ, திகைப்போ அடையவில்லை.

“பூ! இதற்குத்தானா இப்படிக் கவலைப்படுகிறாய்? மகிழ்ச்சிப்பட வேண்டிய செய்தி இது! பூரணியக்கா அரசியலில் புகுந்தால் அரசியலில் இருக்கிற களங்கங்கள் அழிந்து அரசியலுக்கே நல்ல பேர் ஏற்பட்டுவிடும். உன் முதலாளி மீனாட்சிசுந்தரம் நன்றாகச் சிந்தித்துக் காரணத்தோடு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். எனக்குப் பிடித்திருக்கிறது இந்த முடிவு” என்று உற்சாகம் பொங்க மறுமொழி தந்தான் முருகானந்தம். உடனே அரவிந்தன் சினமடைந்து பேசலுற்றான்.

“நீங்கள் எல்லோரும் அரசியல் இயக்கம் வளரவேண்டுமென்று மட்டும் ஆசைப்படுகிறீர்கள். நானோ ஒழுக்கமும் பண்பாடும் வளர்வதற்கு ஓர் இயக்கம் வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இந்த இரண்டாவது இயக்கத்தை வேரூன்றி வளர்க்க இன்று இந்தத் தேசத்தில் ஆளே கிடைக்கமாட்டார்கள் போலிருக்கிறது. நீ என்றுமே அரசியல்வாதி என்பது எனக்குத் தெரியும் முருகானந்தம். உன்னிடமிருந்து இந்தப் பதிலைத்தான் நான் எதிர்பார்த்தேன்.”

“இரண்டையும் வேறு வேறு இயக்கங்களாக நீ நினைப்பதால் தான் உனக்கு இந்தக் குழப்பம் உண்டாகிறது அரவிந்தன். முதல் இயக்கம் சரியாக இருந்தால் இரண்டாவது இயக்கமும் சரியாயிருக்கும். பூரணி அக்காவிடம் இந்த இரண்டு இயக்கங்களுக்குமே பாடுபடத் தகுதி இருக்கிறது. இதை நான் உறுதியாய் நம்புகிறேன்.”

“தகுதி இருக்கிறது என்பதற்காக அவளுடைய நிம்மதியையும், சுகத்தையும் பாழாக்கலாமா? அவளுக்கு எப்போதுமே தன் சுகத்தைக் கவனித்துக் கொள்ளத் தெரியாது. அன்றைக்குத் திரையரங்கில் உணர்ச்சிவசப்பட்டுக் கொதித்துப் பேசியதன் விளைவை நீயே பார்த்தாயே! அப்படி இருந்தும் இந்த ஆறு மாத ஓய்வு முடிந்து வந்தவுடன் அவளைத் தேர்தல் போர்க்களத்தில் குதிக்கச் செய்ய திட்டமிடுகிறீர்களே!” இதைச் சொல்லும்போது அரவிந்தனின் குரலில் பூரணியிடம் அவனுக்குள்ள பாசம் முழுவதும் கனிந்து ஒலித்தது. பூரணியின் மேல் இவ்வளவு அதிகமாக அனுதாபப்படுகிற உரிமைகூட அவனுக்குத்தான் உண்டு. அவன், அவள் உள்ளத்தோடு இரண்டறக் கலந்தவன். வேறொருவருக்கும் இனி என்றும் கிடைக்க முடியாத இனிய உறவு அது. அந்த உறவை வெளிக்காட்டி விளம்பரப்படுத்திக் கொள்ள அவன் எப்போதும் விரும்புவதில்லை. ஆனால் அனுதாபத்தை மறைக்க முடியாமல் தவித்தான்.

“இன்று இந்த நாட்டில் அரசியல் என்று தனியாக ஒன்றுமில்லை. ஆனால் ஒவ்வொன்றிலும் அரசியல் கலந்திருக்கிறது. பெரிய வலையில் ஒரு நூல் அறுந்தாலும் வலை முழுவதும் தொய்ந்து பின்னல் விட்டுப் போகிற மாதிரி அரசியலில் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலும் மற்றவற்றிலும் மாறுதலை உண்டாக்குகிறது. பூரணியக்காவைப் போல் பண்பும் ஞானமும் உள்ள ஒருவர் அதில் ஈடுபடுவது எல்லாத் துறைகளுக்கும் நல்லது தான் அரவிந்தன்” இப்படி நீண்ட நேரம் ஏதேதோ பல நியாயங்களை எடுத்துச் சொன்னான் முருகானந்தன். அரவிந்தன் பேசி அவன் மாணவ நிலையிலிருந்து கேட்பது தான் வழக்கம். அன்று அவ்வழக்கம் மாறியமைந்து விட்டது.

“இதில் எனக்கென்ன வந்ததப்பா? அவரும் சொல்கிறார். நீயும் அதையே ஒத்துப் பாடுகிறாய். அவளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு செய்யுங்கள்” என்று மறுப்பின் வேகம் குறைந்து தளர்ந்தாற்போல் பட்டுக்கொள்ளாமல் சொன்னான் அரவிந்தன்.

மறுநாள் மீனாட்சிசுந்தரம் வந்த கேட்டபோதும் இதே மாதிரி மனம் தழுவாமல், பட்டுக் கொள்ளாத விதத்தில்தான் பதில் சொன்னான் அவன். ஆனால் அவர் அவனை அப்படியே விட்டுவிடவில்லை. மீண்டும் கடுமையாக வற்புறுத்தினார்.

“யாருக்கு வந்த விருந்தோ என்கிறாற் போல் நீ இப்படி ஒட்டுதல் இல்லாமல் பேசுவதாயிருந்தால் நான் இப்போதே இந்த ஏற்பாட்டைக் கைவிட்டு விடுவேன். ஒன்றும் தலைக்குக் கத்தி வந்து விடாது. நாலு பெரிய மனிதர்களுக்கு நடுவில் என் மானம் போகும். போனால் போகட்டும். உங்களுக்கெல்லாம் இல்லாதது எனக்கு மட்டும் என்ன. நீ இதற்கு ஒத்துக் கொண்டு எனக்கு உதவி செய்வதாயிருந்தால் இரண்டு நாட்கள் கழித்துக் கோடைக்கானல் போய்க் கேட்டுச் சம்மதம் வாங்கிக் கொண்டு வா. முடியாவிட்டால் முடியாதென்று இப்போதே சொல்லிவிடு.”

அரவிந்தன் அரைமனத்தோடு கோடைக்கானல் போய்ப் பூரணியைக் கேட்டுக் கொண்டு வர இணங்கினான். இணங்காவிட்டால் அவர் ஆளை விட மாட்டார் போல் இருந்தது.

மீனாட்சி அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரத்தின் சொந்த ஊர் மதுரைக்கு அருகில் வையைக் கரைமேல் உள்ள ‘திருவேடகம்’ என்ற அழகிய ஊராகும். அது தேவாரப் பாடல் பெற்ற தலம். மதுரையில் குடியேறி விட்டாலும், நிலங்கரைகள், தோப்புத்துரவு, ஒரு வீடு எல்லாம் அங்கு அவருக்கு இருந்தன. வீட்டைத் தேவாரப் பாடசாலைக்கு விட்டிருந்தார். பத்து பிள்ளைகளுக்கு இலவச சாப்பாடு போட்டுத் தேவாரம் கற்றுக் கொடுத்து வரும் பாடசாலை ஒன்றைத் தம் பொறுப்பில் அங்கு நடத்தி வந்தார் மீனாட்சிசுந்தரம். குடும்பத்தில் பரம்பரைக் கட்டளை போல் அந்தப் பாடசாலைக்காகக் கொஞ்சம் நிலம் ஒதுக்கப் பெற்றிருந்தது. அவருடைய முப்பாட்டனார் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட தேவாரப் பாடசாலை அது. இன்னும் ஒழுங்காக நடந்து கொண்டு வருகிறது.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்