புதை நூல் – தமிழரசி இளங்கோவன்
அகரமுதல
புதை நூல்
“மங்களத்து நாயகனே, மண்ணாளும்..”, என்ற அம்மாவின் பக்திக் குரல் தூபம் காட்டியவாறே வீட்டை வலம் வந்தது. வீடே புகை சூழ இருந்தது.
‘டப்,டப்,டப்..’, என்று கோழித் தீனியைக் கொத்துவது போல் கமலாவின் அறையிலிருந்து ஒலி எழும்ப, அம்மா, கமலா அறையின் கதவைத் திறந்து தூபம் காட்டும் பெயரில் அறையையும் விட்டு வைக்காமல் ஒரு வலம் வந்தார். கண்கள் கமலாவின் கணினியை வலம் வந்தது.
செய்தி கமலா அப்பாவின் காதுக்கு எட்ட, “கமலா, கமலா!”, என்று அழைத்தார். தோழியோடு முகநூலில் அளவளாளவுவதாக இருந்த கமலா அப்பாவின் குரல் கேட்டு வெளியேறும்போது ‘சதக்’ என்று தனது காலின் சுண்டுவிரலை இடித்துக் கொண்டாள். வலியோடு வரவேற்பறையின் வழிக்கு வந்து நின்றாள், “சொல்லுங்க, அப்பா”, என்று கூறியவாறே!
“உட்காருமா’, என்று அப்பா கூற, “பரவாயில்லை அப்பா. சொல்லுங்கள் அப்பா”, என்று மிகவும் பணிவாக வலியுடனே கேட்டாள்.
“முகநூலில் சற்று கவனமம்மா. முகம் தெரியாத”, என்று கூறி முடிப்பதற்குள், “முகம் தெரியாத நிறைய பேர் முகநூலில் இருக்கின்றனர். பல மோசடிகள். இது அது என பல. அப்பா. இதுதானே கூறவிருந்தீர்கள், கவலை வேண்டா, அப்பா. என் பள்ளி தோழியுடன்தான் அளவளாவிக் கொண்டிருக்கிறேன்”, என்று சமத்தாகக் கூறினாள் கமலா. அப்பாவோ பிள்ளையின் அறிவைக் கண்டு பூரிப்படைந்தார். அப்படியே பள்ளி விடுமுறை முடியும் காலம் வந்தது.
ஒரு நாள்,..
மீண்டும், “மங்களத்து நாயகனே”, என்ற பாட்டைப் பாடிவர அம்மா கமலாவின் அறையைத் திறந்தார். திறந்த அம்மாவுக்குக் கமலாவின் கண்ணீர் வடிந்த முகம் தென்பட்டது. அம்மா பதறிக், கமலாவைக் கட்டி அணைக்கப் புழுவாய்ச் சுருண்டு அம்மாவின் அணைப்பில் தளர்ந்தாள். கதையைக் கூற, அப்பாவும் அதைச் செவிமடுத்துவிட்டதால், மூவரும் காவல் நிலையத்திற்கு விரைந்தனர்.
காவல் அதிகாரி விசாரிக்க, மீன் முள் தொண்டையில் சிக்கியதுபோல் மெல்ல ஆரம்பித்தாள். “என் பள்ளி தோழியிடம்தான் முகநூலில் அளவளாவினேன். திடீரென்று பணவுதவி கேட்டாள். என் அப்பா எனக்காகக் கொடுத்து வைத்திருந்த வங்கியின் கடவுச்சொல்லைக் கொடுத்துப் பணம் பரிமாற்றம் செய்துகொள் என்றேன். இன்று பார்த்தால், வங்கியில் மொத்தமும் காணவில்லை; அவளையும் காணவில்லை”, என்று கூறுவதற்குள் மற்றொரு அதிகாரி காவல் அதிகாரியின் காதில் முணுமுணுத்தார்.
“சிறுமியே, முகநூலில் நீ அளவளாவியது உன் தோழி அல்ல, பண மோசடி செய்பவர்கள் உன் தோழியின் பெயரில் உனக்கு விரித்த வலை”, என்று கூறி முடிக்க, கமலாவும் அவளது தந்தையும் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர் செய்வதறியாது.
Comments
Post a Comment