காலத்தின் குறள் பெரியார் : 10 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்
காலத்தின் குறள் பெரியார்
அதிகாரம் 10.அரசியல்
1.அமிழ்தா பதவி பெரியார் உமிழ்ந்திட்ட
தாம்பூல மிச்சம் உணர்.
2.கெட்டவரைத் தேர்ந்தெடுத்த மக்களைத் தம்சினத்தால்
முட்டாள்கள் என்றுரைத் தார்.
3.தான்வாழத் தன்நாக்கில் தேன்தடவித் தந்தாரை
ஏன்ஆள வைத்தாயென் பார்.
4.நரம்பில்லா நாக்கு வரம்பில்லா வாக்கு
தெரிந்தளிப்பாய் நின்றனது வாக்கு.
5.கோடிப் பொருள்சேர்க்கும் நோக்குடன் உன்வாசல்
நாடி வருவார் நகர்.
6.கடவுள் மதம்சாதி எல்லாம் வணிகக்
கடையாய் இயங்கும் அரசு.
7.வென்றுவிட்டால் கொக்கரிப்பு வீறாப்(பு) எனயாவும்
நின்று நிலைக்கா நினை.
8.பதவிக்கு வந்தார் முதலாளி அல்லர்
பணியாள் என்றே உணர்.
9.உதவிசெய் யென்று பணியாளைக் கேட்காதே
உத்தரவு இட்டே உணர்த்து.
10.தன்மானம் இல்லாதான் சட்ட அவைதனில்
உன்மானம் பேணமாட் டான்.
(தொடரும்)
ச.ச.வேலரசு (எ) தமிழரசன்:
காலத்தின் குறள் பெரியார்
Comments
Post a Comment