எழுக தமிழா! – கருங்கல் கி. கண்ணன்
அகரமுதல
எழுக தமிழா!
எங்கே தமிழா!
உன் தமிழ் எங்கே!
உன் முன்னெழுத்து எங்கே!
உன் வீரம் எங்கே!
உன் விவேகம் எங்கே!
உன் பண்பாடு எங்கே!
உன் பழக்கவழக்கம் எங்கே!
இனிக்கும் தமிழ் வார்த்தை எங்கே!
மயக்கும் தமிழ் எழுத்துகள் எங்கே!
தமிழனின் இலக்கணப் பெட்டகங்கள் எங்கே!
அங்கிருந்த எம் தாத்தன் நூல்கள் எங்கே!
கலாச்சாரத்தைச் சாற்றும் உடை எங்கே!
காதலைக் கூறும் முறை எங்கே!…
கழனியில் உழவுசெய்யும் வேளாண்மை எங்கே?
காற்றை அறிந்து கலம் செலுத்திய உத்தி எங்கே?
மங்கையரை வணங்கிய பாங்கு எங்கே?
மணம் முடித்த வீரம் எங்கே?
பெற்றவரை, ஆசானை வணங்கிய பக்தி எங்கே?
இயற்கையைத் தொழுத இறைமை எங்கே?
சிற்பத்தை வடித்த கலை எங்கே?
சித்தர்கள் தந்த மருத்துவம் எங்கே?
தேடிப்பார்!
உனக்குள் நீ கேட்டுப்பார்!
உன் இதயத்தைத் தட்டிப்பார்!…
அடிமையானாய்
அதனால் மடமையானாய்!
வீரத்தை மறந்தாய்
அனைத்தும் துறந்தாய்!
உன் நிலத்தையும் கொடுத்தாய்!
இது மட்டுமா?
இசையைக் கொடுத்தாய்!
கர்நாடக சங்கீதம் என்றாய்!
தெலுங்கு கீர்த்தனை என்றாய்!
வேங்கடம் இழந்தாய்!
சுந்தர தெலுங்கென்றாய்!
காவிரியை இழந்தாய்!கவின் கன்னடமென்றாய்!
சேரத்தைச் சேரளம் என்றான்!
சேரளத்தைக் கேரளம் என்றான்!
சேரத்தமிழை மகிழ் மலையாளமென மகிழ்ந்தாய்!
தமிழகம் சிதைந்தது!
எல்லை குறைந்தது!
இராவணன் தேசமெங்கே?
இனி இருக்கும் தேசமும்?
குனிந்தே வணங்கிக் கூனலாகி
முணுமுணுக்கும் தங்கிலீசு கூட்டமா னது!
கூத்தாடிக் கூட்டத்திற்கு
சாமரம் வீச நாட்டமானது.!
வந்தன் சவாரி கழுதைக் கூட்டமானது.!
மொத்தத்தில் மன்றாடும் ஆட்டமா னது!
மானத் தமிழன் எங்கே?
மணம் நிறைந்த தமிழ் எங்கே?
இமயம் வென்ற கொடி எங்கே?
கடாரம் வென்ற வரலாறு எங்கே?
தமிழன் முருகனை
தமிழைத் துறந்து வடமொழியில் பூசை!
அவனைப் பெற்றவர் ஈசனை ,சக்தியை?
தமிழ் நீச மொழியாம்!
குனிந்தோம்!
வடமொழி ஏற்றோம்!
இழக்கின்றோம்….!
தாய்த் தமிழை! தமிழா!
இழக்கின்றோம்!
எப்படி மீட்பது??
என்று தான் மீட்பது??
கூறு தமிழா!
கூறு!….
எங்கே தமிழா?
எங்கே?
உன் அடையாளத் தமிழ்
எங்கே?
உன் அடங்காத திண் தோள் எங்கே?
உன் தோள் சாயும் தமிழச்சி எங்கே?
மரபணு மாற்றம்….!
கவனம் கொள்
மொழி மட்டுமா? தங்கிலீசு!
உன்……..?
கவனம் கொள் தமிழா!
உன் மரபைக் காப்பாற்ற
எழுக தமிழா!
எழுக!
–
Comments
Post a Comment