Skip to main content

கல்விச் சிந்தனைகள் 1/3, தவத்திரு குன்றக்குடி அடிகளார்


(எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 5 இன் தொடர்ச்சி)

கல்விச் சிந்தனைகள் 1/3

(20-3-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)
உயிர்த் தொகுதி பரிணாம வளர்ச்சியில் புல், புழு, விலங்கு. என்று வளர்ந்து கடைசியாக ஐந்து அறிவினாலாகிய விலங்கினின்றும் ஆறறிவுடைய மனிதன் பரிணமித்தான். மனிதன், மிருகமும் அல்லன்; முழு மனிதனுமல்லன். மனிதன் மிருகத் தன்மையிலிருந்து விலகி மனிதனாக வாழ்ந்து அமர நிலை எய்த வேண்டும். இதுதான் மனிதனின் பரிணாம வளர்ச்சி. குறிக்கோள்! ஆனால் எல்லா மனிதருமே விலங்குத் தன்மையிலிருந்து அறவே விலகியதில்லை. முழு மனிதனாகவும் வாழ்ந்ததில்லை; தெய்வமாகத் திகழ்ந்தது மில்லை.
இம்மூன்றின் கலவையாகவே கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். கோடியில் ஒருவர் விலங்கியல் தன்மையைப் பூரணமாக வெற்றி கொண்டு, மனிதராக மாமனிதராக விளங்கி, இந்த மண்ணிலேயே அமரர் சிறப்பினைப் பெற்று வாழ்ந்துள்ளனர்.
இன்று நமது நிலை என்ன? நாம் விலங்கினத்திலிருந்து வேறுபட்டு நிற்கும் தடத்தில் செல்கிறோமா? மனிதத் தன்மையுடன் வாழ்கிறோமா? இங்கேயே அமரர் சிறப்புக் காணும் தடத்தில் செல்கிறோமா? சிந்தனை செய்யுங்கள்! இன்றைய மனிதன் உணர்ச்சி வசப்படுகிறான். அவன் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் விலங்குகளிலும் மோசமாகி விடுகிறான்; கலகம் செய்கிறான்; கொலை செய்கிறான்;
சுயநலமே உருக்கொண்டது போல ஆகிவிடுகிறான். இன்றைய மனிதன் தன் வீடு, தன் பெண்டு, தன் பிள்ளை என்ற கடுகுப் புத்தியிலேயே நிற்கிறான்.
மனிதப் பிறவி அருமையானது என்று உணர்ந்து, அந்த அருமைப் பாட்டினை உலகு உணரும் தடத்தில் செல்வோர் எத்தனை பேர்? வாழ்வோர் எத்தனை பேர்?
“அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது. பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது. ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான் செய்தல் அரிது. தானமும் தவமும் தான் செய்வராயின் வானவர் நாடு வழி திறந்திடுமே!”
என்று ஒளவையார் மனிதப் பிறவியைச் சிறப்பிக்கின்றார்.
“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்”
என்று அப்பரடிகள் அருளிச் செய்துள்ளார். ஆம்! மானுடப் பிறவி ஒரே ஒரு பிறவிதான்! இப்பிறவியிலேயே அறியாமையை அகற்றி ஞானம் பெறுதல் வேண்டும். மாணிக்கவாசகரும், “என்னால் அறியாப் பதந் தந்தாய்” என்றார். ஆம்! மானிடப் பிறவி ஒரு பதந்தான்! மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அறிகருவிகளுடன், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன தொடர்புச் சாதனங்களாகவும், நிறைவேற்றும் பொறிகளாகவும் விளங்குகின்றன.
அற்புதமான கருவிகள்! இந்த உடம்போடு கூடிய ஆன்மாவின் வாழ்க்கையை அறிந்து போற்றிப் பாதுகாத்து வாழ்பவன் மனிதன். திருமூலர்
“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!”
என்றார். உடம்பை வளர்த்தல் என்றால், எடை கூடுதலாக வளர்த்தல் என்பதல்ல. உடம்பின் பயன் பாட்டு ஆற்றலை வளர்த்தல்!
இன்று உடல் நலத்திற்கு எதிரான செயற்பாடுகளே மிகுதி. சமையல் தோன்றிய பிறகு மனிதன் உடலுக்கு உகந்ததை உடல் நலத்திற்கு ஏற்றதை உண்ணாமல், சுவைக்காக உண்ணத் தலைப்பட்டு விட்டான்! போதும் போதாததற்குப் புகையிலையரக்கன் பலவகைப் புனைவு களில் மனிதனை அழித்துக்கொண்டு வருகிறான்.
காற்று சுவாசிப்பதற்காக அமைந்த மூக்கினை வாணக் குழியில் வெடி மருந்து திணிப்பதுபோல மூக்குப் பொடியைத் திணிக்கிறான். அடுப்பில் புகை இருத்தல் போல இன்று பலருடைய வாயில் புகை! புகை பிடித்தல், சாராயம் குடித்தல் இன்னோரன்ன தீமைகள் நாளும் பலரின் உடல் நலத்தைக் கெடுத்து வருவதோடு அவர்களை மனிதப் பண்பி லிருந்து தடம் மாற்றி விலங்கியல் நிலைக்கு அழைத்துப் போகின்றன. இவர்களும் போய்க் கொண்டிருக்கிறார்கள்!
மனிதன் வரலாற்றின் உறுப்பு. மனிதன் வரலாற்றின் கருப்பொருள். மனிதன் இந்த உலகைப் பயன்படுத்தும் வகையில் அமைப்பவன். மனிதன் படைப்பாளி! மனிதன் காலந்தோறும் இப்புவிக் கோளின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பவன். மனிதனை அளவு கோலாகக் கொண்டே இந்த உலகம் மதிப்பிடப்படுகிறது. மனிதப் படைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற, மனிதனுக்குக் கருவியாக அமைவது அறிவு!
“அறிவுடையார் எல்லாம் உடையார்”
என்பது திருக்குறள்.
மனிதகுலம் தோன்றிய நாள் தொட்டு, அறிவைத் தேடும் முயற்சி நடைபெற்று வருகிறது. மனித குலத்தினர் அனைவரும் அறிவு பெற்று விளங்கவேண்டும் என்பது நியதி. இத்திசையில் மனிதகுலம் எடுத்த முயற்சிகள் பலப் பல. ஆயினும் அறிவு பெற்றோர் கோடியில் ஒருவரே!
இன்று நாம் அறிவுடைமைபற்றிக், கொண்டிருக்கிற கருத்து, பிழையானது, தகவல்கள் நிறைய வைத்திருப்பவர்கள், நிறைய படித்தவர்கள், பட்டம் பெற்றிருப்பவர்கள், இவர்கள் எல்லாம் அறிஞர்கள் என்று பிழையாகக் கருதிக் கொண் டிருக்கிறோம். இவர்களில் அறிஞர்கள் இருக்கலாம். தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆனால் திருக்குறள் கூறும் அறிவுடைமை எது? மனிதனை – மனித குலத்தைத் துன்பத்திலிருந்து காப்பதே அறிவு. இன்று நமது வாழ்க்கையில், துறை தோறும் துன்பந்தானே சூழ்ந்திருக்கிறது. மனிதரை மனிதர் கொன்று அழிக்கும் ஆற்றல் மிக்க கொலைக் கருவிகளை மனிதன் படைத்திருக்கிறான். அப்படியானால் நாம் எங்கு போய்க் கொண்டிருக்கிறோம்?
இன்றைய உலகம் அறிவியல் உலகம் என்கிறார்கள். கூர்ந்து நோக்கின், உயர்தர அறிவியல் வளரவில்லை. அருவருக்கத்தக்க நிருவாணமான சுயநலம் வளர்ந்து வருகிறது. வீட்டிலிருந்து, உலகத்தின் பெரு வீதிகள் வரை எங்கும் பண மதிப்பீட்டுச் சமுதாய அமைப்பு: ஆதிக்கப் போட்டிகள்! மற்றவர் துன்பம் பொருத பண்பே அறிவுடைமை என்று கூறுகின்றது திருக்குறள்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை
என்பது திருக்குறள். இத்தகு அறிவைப் பெறும் கல்வி வழங்கப் பெறுகிறதா? இன்று நமது கல்வி உலகம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது? பட்டதாரிகளை உருவாக்கு வதில் கல்வி உலகம் வெற்றி பெற்றிருக்கிறது
ஆனால், படைப்பாளிகளை உருவாக்குவதில் பெற்ற வெற்றி, மிக மிகக் குறைவு! கல்வியே அறிவுடைமையல்ல. கற்றவர்கள் எல்லாம் அறிவுடையவர்களும் அல்லர். கல்வியும், கேள்வியும் அறிவு பெறுதலுக்குரிய வாயில்களே ஆகும்! –
இன்று நமது கல்வியுலகம் எங்கே சென்று கொண்டிருக் கிறது? மனிதனின் ஆன்மாவுக்கு உணவு கல்வி, ஆன்மாவை வளர்ப்பது கல்வி! இன்றைய கல்வி முறை மூளையில் தகவல்களைத் திணிப்பதாக அமைந்திருக்கிறதே ஒழிய ஆன்மாவைத் தொடவில்லையே! இன்றுள்ள கல்விப் பெருக்கத்திற்கு, இக்கல்வி உலகம், அளப்பரிய ஆற்றல் வாய்ந்த கல்வியாய் இருப்பின், இந்த உலகத்தையே மாற்றியிருக்கும்.
எங்கே மாற்றங்கள்? மனிதன் வர வரச் சூழ்நிலையின் கைதியாகிப் போகிறானே தவிர, சூழ்நிலையை அவன் மாற்ற முற்படவில்லையே! விலங்குகள் சூழ்நிலையைச் சார்ந்தவை. ஆனால், மனிதனோ சூழ்நிலைகளைத் தன்னுடைய வாழ் நிலைக்கும், இலட்சியத்துக்கும் ஏற்ப, மாற்றி அமைத்துக் கொள்ளும் ஆற்றலுடையவனாக விளங்குமாறு செய்தல் கல்வியின் விழுமிய நோக்கம். இன்றைய கல்வி உலகு, கடமை உணர்வுகளை, காலம் போற்றும் உயர் பண்பினை, கட்டுப் பாடுகளைப் போற்றி வளர்த்துக் கொள்ளக் கற்றுத் தரவில்லை. வெற்றி வாய்ப்புகளுக்குரிய கட்டுப்பாடுகளை நெகிழ்த்தி விட்டது இன்றைய கல்வி உலகம். ஏன்?
(தொடரும்)
எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்