விதைக்க மறந்த மனித நேயம் – கு. நா. கவின்முருகு
விதைக்க மறந்த மனித நேயம்
-
எந்தேசம் எங்கேபோ கிறது சொல்லு
இழிநோக்கி நகரத்தான் மனிதம் என்றா
சந்தையெனக் கல்வியாகித் திருட்டுக் கொள்ளை
சாதிமதச் சண்டைகளும் மனிதம் கொல்ல
எந்தத்திசை போகிறது மக்கள் கூட்டம்
ஏனிந்த மிருகத்தோல் மனிதன் போட்டான்
வந்துதிக்கும் சூரியனும் மதங்கள் சாதி
மனிதனிலே பார்த்துத்தானோ இனியும் தோன்றும்? -
உடன்பிறந்து வாழ்ந்துவரும் உனது இரத்தம்
ஊன்தின்னி யென்றான வேங்கை யர்கள்
தடம்பதிக்க அறிவுகொள்ள கல்வி உண்டு
சாக்கடையில் கரைத்துவிட்டான் கற்ற யெல்லாம்
வடம்பிடித்து இழுப்பாரோ இனியும் நாட்டை
வளங்காண மனிதநேயம் பெருகி யோட
குடங்குடமாய் அழுதாலும் தீர்ப்பார் யாரோ
குறைகளைய யார்தானோ உதயம் இங்கே. -
பிறப்பிற்கு வேதனைகள் அளவில் லாமல்
பிய்த்திறிந்து உயிர்ப்பிக்கக் கடவுள் இல்லை!
இறப்பிற்கு போராடும் உயிரில் கூட
இலாபத்தை ஈட்டிடவே திருட்டு வேலை!
உறவாகி யிருந்திருந்தால் உயிரும் வேகும்
ஊராரின் மேலேது நலனும் காக்க
சிறகுக்கு இறகுகளே மூலம் என்ப
சிறக்கத்தான் மனிதனுக்கு என்ன உண்டு. -
பிணத்தோடும் சுகந்தேடும் ஈன னானாய்
பேய்க்குணத்தால் மகளைகூடத் தார மென்றாய்
பணத்திற்குப் பின்னாலே ஓடும் நீயோ
பாவங்கள் செய்திடவே பாவி யானாய்
குணங்கொன்றார்க் கிவ்வுலகில் இடமும் உண்டோ
குற்றத்தால் அவ்வுலகில் தீர்ப்பும் உண்டே
வணங்காத மனங்கூட வளையும் பாராய்
வருவதெல்லாம் தன்சதைக்கென் றபோது வாடும் -
தானங்கள் தருமங்கள்செய்யும் கைகள்
சாட்சியங்க ளில்லாதே செய்யும் காணாய்
வானம்போல் உயர்ந்துநிற்பர் மானங் காத்து
மாட்சிமையில் செறிந்தவரே நல்லார் என்பர்
போனவர்கள் போக்கற்றுப் போவார் எல்லாம்
பூமிக்குப் பாரமென்றார் நல்லோர் அன்று
மாக்களாகிப் போனவர்கள் நீங்கள் என்பேன்.
Comments
Post a Comment