ஒரு சவ்வூடு பரவல் – உருத்ரா இ பரமசிவன்




தலைப்பு-சவ்வூடுபரவல்-உருத்ரா ; thalaippu_orusavvuuduparaval_uruthira

ஒரு சவ்வூடு பரவல்

உன் இதயம் இங்கே
வந்து விட்டது.
உன் சிரிப்புக்கொத்தைக்கூட‌
உருவிக் கோர்த்து
கழுத்தில் மாட்டியிருக்கிறேன்.
சுண்டியிழுக்கும்
உன் கண் தூண்டில்கள் கூட‌
என் உள்ளங்கைக்கடலில்
என் கண்ணாடி மீன்களைத்தான்
சுழற்றிக்கொண்டிருக்கின்றன.
உன் இனிய சொற்கூட்டம் எல்லாம்
என்னை மொய்த்த‌
தேன்சிட்டுகளின்
ஒலிப்புகளாய் என்
கண் மூக்கு காது வாய் தொண்டை
என்று
இன்பக் க‌மறல்களில்
என்னை திணறடித்துக்கொண்டிருக்கிறது.
எந்தக் கணவாய் வழியாய்
இங்கே ஆக்கிரமிப்பு செய்தாய்?
தெரியவில்லை.
அங்கே இருந்து இங்கே
ஊடுருவி வர‌
என்ன “சவ்வூடு பரவல் முறையை”
தேர்ந்தெடுத்தாய்?
ஆம்
இப்போது புரிகிறது
ஒரு கள்ளப்பார்வை ஒன்று
அனிச்சமலர்கள் கொண்டு
பின்னி வைத்திருப்பாயே!
அந்த அமுதச்சல்லடை வழியே
என் உயிர் அங்கு உன்னிடம்
நிரவி விட்டதே!
மீண்டும் அந்த சல்லடைப்பார்வையை
வீசி விடு!
நம் இரு உயிர்களும்
குழைந்து ஒன்றாய்க்
கசியட்டும் நம் உள்ளத்தில்!
    –உருத்ரா இ பரமசிவன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்