மெய்யறம்
மாணவரியல்
19. பயனில் சொல் விலக்கல்
- பயனில்சொல் யார்க்கும் பயன்றராச் சொல்லே.
பயனில் சொல் என்பது யாருக்கும் பயன் தராத பேச்சு ஆகும்.
- அறியா மையினின் றச்சொல் பிறக்கும்.
பயனற்ற பேச்சு அறியாமையினாலேயே ஏற்படுகிறது.
- அறியா மையினை யச்சொல் வளர்க்கும்.
பயனற்ற பேச்சு அறியாமையை வளர்க்கும் இயல்பு உடையது.
- அறிவினர் நட்பெலா மச்சொல் குறைக்கும்.
அறிவுடையவர்களின் நட்பை பயனற்ற பேச்சு குறைக்கும் இயல்பு உடையது.
- அறிவிலார் நட்பினை யச்சொல் பெருக்கும்.
பயனற்ற பேச்சு அறிவற்றவர்களின் நட்பை அதிகரிக்கும் இயல்பு உடையது.
- பயனுள சொல்லினைச் சொலவிடா தச்சொல்.
பயனற்ற பேச்சு பயனுள்ள பேச்சினை தடுக்கும் இயல்பு உடையது.
- பயனுள செயலினைச் செயவிடா தச்சொல்.
பயனற்ற பேச்சினால் பயனுள்ள செயல்களைச் செய்ய இயலாத நிலை ஏற்படும்.
- பயனில சொல்லுவர் நயனுறா ரென்றும்.
பயனற்ற சொற்களைப் பேசுபவர்கள் ஒரு நாளும் இன்பம் அநுபவிக்க மாட்டார்கள்.
- பயனில சொல்பவர் பதடியென் றறைப.
பயனற்ற சொற்களைப் பேசுபவர்கள், மனிதர்களில் பதர் போன்றவர்கள்.(அவர்களால்
ஒரு பயனும் ஏற்படாது)(பதர்-நெல்லில் உமி மட்டும் இருக்கும். உள்ளே அரிசி
இருக்காது)
- பயனில விலக்கிப் பயனுள சொல்லுக.
அதனால் பயனற்றவற்றை நீக்கிப் ப்பயனுள்ளவற்றை மட்டும் பேச வேண்டும்.
வ.உ.சிதம்பரனார்
Comments
Post a Comment