பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 12– ஆ.வெ.முல்லை நிலவழகன்
அங்கம் : பூங்குயில், அருண் மொழி
இடம் : அருண்மொழி இல்லம்
நிலைமை : (துயிலும் கணவனின் பாதங்களைத்தொட்டுவணங்கி எழுப்பிய பின்)
உயிரே! அவனென அவள் எண்ணி
உணர்வுப் பொங்க அழைக்கின்றாள்
பூங்: காலைக் கதிரவனே!
சோலைக் குழல் வண்டே!
நாளை முடிப்பதென
வேளை வோட்டாமல்
தூயவண்ணனென
நீயே எழுந்துவிடு!
அருண்: காலை அலர் மலரே
சோலை மலர்த்தேனே!
காலைநான் எழவோ
காலைத் தட்டுகின்றாய்?
கனியின் சுவையாகக்
கனிந்தே அழைக்கின்றாய்!
மணியின் ஒலியாக
இனிதே மொழிகின்றாய்!
கட்டாய் வரும் சொற்கள்
மெட்டாய் கேட்குதடி
தட்டும் மெல்லோசைக்
கொட்டாய் ஒலிக்குதடி
இரவின் நிகழ்வெல்லாம்
மறைவாய்த் தொடருதடி!
அனைத்தும் உன்னால்தான்
அன்பே கேட்டுவிடு!
துயிலாள் அணைத்து விட
மயிலாள் துணை நின்றாள்!
மயிலாள் அழைத்தாலும்
துயிலாள் மறுக்கின்றாள்,
பூங் கண்ணன் குழல் ஊதி
மன்னன் நான் என்க!
பணிந்தேன் பாதமதில்
பாதை வேறுண்டோ?
யாவும் நீ என்று
பாவும் நான் படிப்பேன்!
கூவும் குயிலுக்கு
நாவும் நீயன்றோ?
அருண்: கிள்ளை மொழி பேசும்
பிள்ளை நீயன்றோ?
வெள்ளை மனமிங்கே
துள்ளக் காண்கின்றேன்!
பூங் : போதும் என்னத்தான்!
சாதும் நீயில்லை!
சேவல் சங்கெடுத்து
கூவல் பண்ணெழுப்ப
விழித்தே வெளிவந்தேன்!
பழித்தாள் வெண்ணிலவு!
காலைக் கடன் முடித்து
கோலம் பலபோட்டு
நாதம் நீ என்று
பாதம் நான் தொட்டு
தொழுதே நிற்கின்றேன்
பழுதே இல்லாமல்!
அருண்: அன்பே! உயிர் மூச்சாய்
பண்பில் பிறந்தவளே!
பிறந்த உன் நாடு
அருந்தமிழ் நாடன்றோ?
பூங் : கையில் நீருண்டு!
கையைப் பிடிக்காமல்
பைய எழுந்துவிடு! நீ
பைய எழுந்து விடு!
அருண் :எழுந்தே முகம் கழுவ
வெளியே செல்கின்றேன்!
எழிலாய் வருகின்றேன்
காலைக் கடன் முடித்தே!
வேம்பால் துலக்கிய பின்
பிளந்து இரண்டாக்கி!
கூம்பாய் வளைத்தவனோ
நாக்கை வழித்த பின்னே!
நனிநீர் ஆடியபின்
அணிந்தே இடைமீதில்
புன்னகை மன்னனென
வந்தான் குடில்நோக்கி
வாழைஇலை போட்டாள்
வளையல் கலகலக்க!
தாழை மலர் மணக்கத்
தழைந்தே அமுதிட்டாள்
அவியல் பொரியலெனக்
குவியல் இல்லாமல்
கொஞ்சம் கொஞ்சமெனகொஞ்சி அமுதிட்டாள்!
அமுதை அவன் உண்டு
அமுதே! அவள் என்றான்!
அதுவே போதுமென
அதுவாய் அவள் சிரித்தாள்!
உணவே உண்டதுபோல்
உணர்ந்தே அவள் சிரித்தாள்!
அவனே அமுதென்று
அவளே அமுதானாள்!!
(பாடும்)
Comments
Post a Comment