கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 68 : 14. சுவடியின் மரபு தெரிவுறு காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 67 : கயவர் தாக்குதல்-தொடர்ச்சி)
பூங்கொடி,
- சுவடியின் மரபு தெரிவுறு காதை
கூடலில் மீனவன் பணி
ஆங்கவன் றனக்குப் பூங்கொடி நல்லாய்!
தீங்கொன் றுற்றது செப்புவென் கேண்மோ!
கேட்குநர் உள்ளம் கிளர்ந்தெழும் பாடல்,
நோக்குநர் மயக்கும் நுண்கலை ஓவியம்,
கள்ளின் சுவைதரு காவியம் முதலன 5
வள்ளலின் வழங்கினன் வருவோர்க் கெல்லாம்;
அவ்வவர் திறனும் அறிவும் விழைவும்
செவ்விதின் ஆய்ந்துணர்ந் தவ்வவர்க் குரியன
பயிற்றினன், பயில்வோர் பல்கினர் நாடொறும்;
மாணவன் ஐயம்
செயல்திறம் நற்பயன் செய்துவரு காலை 10
`இசையும் கூத்தும் இயம்பும் தமிழ்நூல்
நசையுறும் ஓவியம் நவில்நூல் உளவோ?
ஒருநூ லாயினும் உருவொடு காண்கிலேம்;
எனஓர் ஐயம் எழுப்பினன் ஒருவன்;
தமிழின் பகைகள்
மனநலி வுற்று மற்றவற் குரைப்போன்
15
`பலப்பல அந்நூல் படைத்தது தமிழ்மொழி
நிலைத்திடு சான்றுகள் நிறைதலும் காண்குவை;
நெருப்பும் நீரும் செருத்தொழில் புரிந்தன;
உருக்குலைந் தொழிந்தன ஓங்குயர் நூல்பல;
ஆடிப் பெருக்கில் ஆற்றொடு விடுத்தனம்; 20
தேடிச் சுவைத்தன செல்லுப் பூச்சிகள்
எஞ்சின ஒருசில! நஞ்சினுங் கொடியர்
வஞ்சினங் கொண்டென அழித்தனர் மாய்த்தனர்;
++++++++++++++++++++++++
கேட்குநர் – கேட்பவர், நோக்குநர் – காண்பவர். செரு – போர்,
+++++++++++++++++++++++
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment