Skip to main content

அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் – 24-26

 




(அறிவுக் கதைகள் நூறு 21-23 தொடர்ச்சி)

மேலைநாட்டுப் பேராசிரியர் ஒருவர், பட்டப் பகலில் 12 மணி உச்சி வேளையில், கையில் மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு நடைபாதையில் போவோர் வருவோரை அன்புடன் அழைத்து வாருங்கள் என்று கூறி, அவர்கள் முகத்திற்கு நேரே விளக்கைக் காட்டி நன்றாக அவர்களைப் பார்த்துவிட்டு, பிறகு அவரைப் போகச் சொல்லிக் கொண்டேயிருந்தார்.

அவர்களில் ஒருவன் வியப்படைந்து, “ஏன் ஐயா பட்டப்பகலிலே மெழுகுவர்த்தி விளக்கு ஏற்றிக்கொண்டு ஒவ்வொருவர் முகத்திலும் காட்டி அனுப்புகிறீர்களே, என்ன காரணம்?” என்று கேட்டான்.

அதற்கு அப்பேராசிரியர் அவரைக் கைகூப்பி வணங்கி, “இந்தச் சாலையிலே எவனாவது மனிதன் போகிறானா?” என்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன், என்றார். “இந்த உலகத்தில் மக்களாய்ப்பிறந்தவர் எல்லாரும் மக்கள் அல்லர் : மக்களைப் போல உண்டு உடுத்துத் திரிபவர் எல்லாரும் மக்கள் அல்லர்; மக்களாகப் பிறந்து மக்களாக வாழ்பவர்களே மக்கள்” என்பதை இது தெரிவிக்கிறது.

“மனிதனாகப் பிறந்தவன் பறவையைப் போல ஆகாயத்தில் பறக்கக் கற்றுக் கொண்டிருக்கிறான். மீனைப் போல நீரிலே நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால் மனிதன் மனிதனாகப் பிறந்தும் மனிதனைப் போல வாழக் கற்றுக் கொள்வதில்லையே!” என்று அவர் கருதுகிறார். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
————-

‘வேதாந்தம் பெரிதா? சித்தாந்தம் பெரிதா?’ என்று வாதிட்டு வேதாந்திகளும், சித்தாந்திகளும் போரிட்டுக் கொண்டிருந்தனர் இறுதியில் பகவான் இராம. கிருட்டிணரை அணுகி, இருதிறத்தாரும் தத்தம் கருத்துகளை எடுத்துச் சொல்லி, அவர் சொல்லும் முடிக்குக் கட்டுப்படுவதாகத் தெரிவித்தனர்.

அவர் மேற்கொண்டு வேறு எதையும் விசாரிக்காமல், “நான் ஒரு கதை சொல்கிறேன்,
உங்கள் கேள்விகளுக்கு விடையும் அதில் வெளிப்படும” என்று கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

“சருவம் பிரம்ம மயம்” என்ற கொள்கையுடைய ஒரு வேதாந்த மடத்தில் பலவிதமான செடிகொடிகளை வளர்த்து, நந்தவனம் அமைத்து, ஆசிரமத்தை அழகு படுத்தியிருந்தனர்.

ஒருநாள் எப்படியோ ஒரு கன்றுக்குட்டி உள்ளே புகுந்து ஓர் அழகிய செடியைக் கடித்து நாசப்படுத்தி விட்டது. அந்தக் காட்சியைக் கண்ட குரு, ஆத்திரம் தாளாமல், தடியை எடுத்து கன்றுக்குட்டியின் மேல் ஓங்கிப் போட, அடி தலையில் விழுந்து அந்த இடத்திலேயே அந்தக் கன்றுக்குட்டி இறந்துவிட்டது. அதை இழுத்து வெளியே குப்பைத் தொட்டியில் போட்டு விட்டனர்.

கன்றுக்குட்டியைத் தேடி வந்த அதன் சொந்தக் காரன், அது அடிபட்டு இறந்திருப்பது கண்டு, நடந்ததை அறிந்து மனம் கொதித்து, நாலு பேரை அழைத்து வந்து குருவிடம் கேட்டான், “ஏன் என் கன்றுக் குட்டியை அடித்தீர்கள்? இப்போது அது இறந்து விட்டதே” என்று.

அதற்குக் குரு, “நான் அதை அடிக்கவில்லையே…… அது (பிரமம்) வந்தது. அதைத் தின்றது. அது அடித்தது. அது இறந்தது. அவ்வளவுதான். எனக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது” என்றார்,

இந்த பதில் இறைவனுக்கே பொறுக்காமல், முதுகிழவராகத் தோன்றி, கன்றை இழந்தவனைச் சமாதானப்படுத்திவிட்டு, குருவைப் பார்த்து ‘மடாதிபதி அவர்களே! நந்தவனம் மிகப் பொலிவாக இருக்கிறது. இதை யார் உண்டாக்கினார்?’ என்று கேட்டார். அதற்கு அவர், “நான்தான் இதை மிகக் கடினப்பட்டு உண்டாக்கினேன்” என்றார். “இவ்வளவு அழகான செடி எங்கிருந்து கிடைத்தது?” என்றார். அதற்கும் குரு “இந்தச் செடியைக் காசுமீரத்திலிருந்து கொண்டு வந்தேன்” என்றார்.

உடனே இறைவன், “தம்பி, இந்த நந்தவனத்தை உண்டாக்கியது நீ. செடி கொடிகளைக் கொண்டு வந்து வளர்த்தது நீ. கன்றுக்குட்டியை அடித்தது மட்டும் பிரம்மமா?” என்று கேட்டுவிட்டு மறைந்தார்.

வேதாந்தி திடுக்கிட்டு இங்கு வந்து கேட்டு மறைந்தது இறைவனே என்று அறிந்து அஞ்சி நடுங்கினார். இப்படிப் பகவான் இராமகிருட்டிணர் கதையை முடித்ததும், தங்களுக்கு நல்ல விடை கிடைத்தது என்று இருசாராரும் தத்தம் இருப்பிடத்தை நோக்கி நடந்தனர்.
————-

என் கடையில் பலபேர் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில், ஒருநாள் அபுதுல் கரீம் என்பவர் வேலைக்கு வரவில்லை. அவரைத் தேடி அவர் வீட்டுக்கே நான் சென்றேன்.

அப்போது அவர், தன் மகனை ஒரு பிரம்பால் “இனி மேல் பீடி குடிப்பாயா? பீடி குடிக்காதே, பீடியைத் தொடாதே” என்று சொல்லிச்சொல்லி அடித்துக கொண்டிருக்கும் போதே. அவரது இடதுகையால் பீடியை அடிக்கு ஒருதரம் இழுத்து, வாயில் புகையை விட்டுக் கொண்டே அடித்துக் கொண்டிருந்தார்.

நான் அவர் அடிப்பதைத் தடுத்து, ‘பிள்ளையை அடிக்கவேண்டா’ என்று கூறினேன். அதற்கு அவர் ‘நீங்கள் பேசாமல் இருங்கள் முதலாளி. இப்படியே விட்டால் அவன் கெட்டுப்போய் விடுவான்’ என்று கூறினார்.

தனது இடதுகையில் பீடியை வைத்து இழுத்துச் சுவைத்துக் கொண்டே வலது கையால் பீடி குடிக்காதே என்று அடித்தால் பிள்ளை எப்படி உருப்படும்?

இப்படித்தான் பல பெற்றோர்கள் தம், பிள்ளைகளை வளர்க்கிறார்கள். சிறுவயதிலேயே குழந்தைகள் பொய் பேசவும், திருடவும், பிறரை வஞ்சிக்கவும், குடிக்கவும் பள்ளியிலா கற்றுக்கொள்கிறார்கள். ஆகவே பிள்ளைகளைத் திருத்துவதற்குமுன் பெற்றோர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளவேண்டும்.

ஏனெனில் பெற்றோர்களின் கண்டிப்பு, காரமான பேச்சு இவை எதுவும் பிள்ளைகள் மனத்தில் படாது. நடைமுறைக்கும் வராது. இவற்றைவிட அவர்களின் பழக்க வழக்கங்கள்தான் பசுமரத்தாணிபோல் பதிந்து நிற்கும். ஆகவே, பொடிபோடும் பழக்கத்தைக் கூடப் பிள்ளைகள் அறியாமல் செய்வது நல்லது.

வீட்டு நிலைமை இப்படி இருந்தால், நாட்டுநிலைமை என்ன ஆகும்? எங்கே போகும்?
———–

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்