என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 20. நொச்சியும் உழிஞையும்
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 19, சொல்லின் எவனோ? – தொடர்ச்சி)
என் தமிழ்ப்பணி
17. நொச்சியும் உழிஞையும்
மண்ணாசை கொண்டு, அண்டை நாட்டு அரசனோடு போரிடப் போன ஓர் அரசன், போரை விரும்பி மேற்கொண்டவனாதலின், அப்போரை மேற்கொள்வதன் முன்னர், தன்வலி, மாற்றான் வலி, தனக்கு ஆகும் காலம், மாற்றானுக்கு ஆகும் காலம், தனக்கு வாய்ப்புடைய இடம் மாற்றானுக்கு வாய்ப்புடைய இடம், ஆகியவற்றைப் பலமுறை ஆராய்ந்து, ஆராய்ந்து, தன் வலிமிக்க நிலையில், தனக்கு ஏற்புடைய காலத்தில், வாய்ப்புடைய இடமாக நோக்கிப் போர் தொடங்கியிருப்பன்.
ஆனால், அவன் பகைவனாகிய, மண்ணுக்குரிய மன்னவனோ எனில், அத்தகைய முன்னேற்பாடுகளோடு போர்க்களம் புகுந்தவனல்லன்; பகையரசன் படை தன் நாட்டுக்குள் புகுந்து, தன் நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது என்பதை அறிந்தவுடனே, அப்படையை விரட்டித் தன் நாட்டை வாழ்விக்க வேண்டும் என்ற எண்ணமே முன் நிற்க, விரைந்து களம் புகுந்தவனாதலின் அந்நிலையில், தன் படைபலம் யாது? பகைப் படையின் பலம் யாது? தனக்கு ஏற்புடைய காலந்தானா? தனக்கு வெற்றியளிக்க வாய்ப்புடைய இடந்தானா என்பனவற்றினை எண்ணிப் பார்த்து அவையெல்லாம் தனக்கு நல்லவாதல் கண்ட பிறகே களம் புகுந்திருத்தல் இயலாது. உள்ளது ஒரு சில படையே எனினும், அது கொண்டே களம் புகுந்திருப்பன்; தனக்குத் துணை புரிவாரைக் கண்டு. அவர் துணையினை நாடிப் பெறுதல் வேண்டும் என்ற நினைவு தானும் அவனுக்கு எழுந்திராது. ஆக இந்நிலைகளால், வந்தவன் கை வலுக்க, இவன் கை வலுவிழக்க, வந்தானை வெல்ல மாட்டாது தோற்றுப் போவது, மண்ணுக்கு உரியானுக்கு ஒரோ வழி உண்டாதலும் கூடும்.
தோல்வியுற்றது தன் படை என்பதினாலேயே, மண்ணுக்குரிய மன்னவன், பகைவனுக்குப் பணிந்து போக வேண்டும் என்பது தேவையில்லை. சிறிது காலம் கழியின் வந்தவனை வென்று ஓட்டுவது இயலும். அதற்குள், அவனுக்கு ஏற்புடைய காலமும் வந்து வாய்க்கும். அவனோடு நட்புடையராகிய அரசர் சிலர், அவனுக்குத் துணையாகத் தம் படைகளை அளிப்பதும் செய்வர். ஆகவே, அக்காலத்தை எதிர்நோக்கியிருப்பது அரசமுறையாகும். ஆகவே அக்காலம் வரும் வரை பகைவனுக்குப் பணியாமலும், அவனால் பற்றப்பட்டுப் பாழுற்றுப் போகாமலும், தன்னையும், தன் படையையும் காத்துக் கொள்ள வேண்டுவது அவன் தலையாய கடமையாகும்.
அக்கடமையைக் குறைவற நிறைவேற்றும் கருத்துடையராகவே நம் கன்னித் தமிழ் நாட்டுக் காவலர்கள், தங்கள் தலைநகர்களைத் தலைசிறந்த அரண்களாக அமைத்து இருந்தார்கள். பேரூர்கள் ஒவ்வொன்றும் பெரிய பெரிய கோட்டைகளாகவே அமைய வேண்டுவது, அக்காலத் தமிழகத்தின், இன்றியமையாத் தேவையாக அமைந்து விட்டது.
பண்டைத் தமிழகம் ஒரு நாடு செல்வத்தில் சிறந்து வாழ வேண்டுமாயின், அது நீர்வள, நில வளங்கள் தரும் வற்றாப் பெருவளங்களோடு, வாணிகத் துறையின் வளம் பெற்ற நாடாகவும் திகழ்தல் வேண்டும்; வாணிகத்திலும், நில வாணிகத்தைக் காட்டிலும், கடல் வாணிகத்தையே பெரிவாரியாக மேற்கொள்ளுதல் வேண்டும்; விலையுயர்ந்த பொருள்களை வெளிநாடுகளிலிருந்து தான் வாங்குவதை விடுத்து, அப்பொருள்களை அப்புறநாடுகளுக்குக் கடன் வழங்குதல் வேண்டும்; பொருள்களை விற்றுப் பொற்காசுகளைப் பெற வேண்டுமேயல்லது, பொற்காசுகளைக் கொடுத்துப் பொருள்களை வாங்குதல் கூடாது: அத்தகைய வாணிகத்திற்குத் துணை செய்யும் வகையில், நாட்டை வகைவகையான தொழில்களை வளர்த்து வளம் பெருக்கும் நாடாக ஆக்குதல் வேண்டும்; தன் நாட்டுத் தொழில் துறை பிற நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து, அவர்கள் விரும்பி வாங்கும் வகையில், பொருள்களை வனப்புடையவாக ஆக்கித் தருதல் வேண்டும், என்பன போலும் வாணிகத் துறை உண்மைகளை உணர்ந்திருந்தமையாக, தமிழகத்துப் பேரூர்கள் பெரும் பொருட்களஞ்சியங்களாகக் காட்சி அளித்தன.
இவ்வாறு, தமிழகத்துப் பேரூர்களில் வளம் கொழிக்கவே, அப்பேரூர்களை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்ட அரசர்கள், வளங்கொழிக்கும் நாடுகளுள் புகுந்து, அவ்வளங்களைக் கொள்ளை கொண்டு செல்வதையே வாழ்வுத் தொழிலாகக் கொண்டு திரியும் ஆறலைக் கள்வர்களாலும், மண்ணாசை மிக்க மன்னர்களாலும், பொன்னாசை மிக்க, பெரு வீரர்களாலும், அழிவு நேராவாறு அந்நகர்களைக் காக்க வேண்டும் என்பதில் கருத்துடையராயினர்.
அதனால், அப்பேரூர்களைச் சூழவலிய பெரிய அரண்களை அமைக்க வேண்டுவது இன்றியமையாததாகி விட்டது. ஒப்பற்ற பேரரசு அமைத்து ஆண்டு வந்தசோழர் குலக் காவலர்கள், தங்கள் நாடு தந்த பெருநிதியை ஈட்டி வைத்திருந்த குடந்தை மாநகரைச் சூழ அமைத்திருந்த அரிய காவற் சிறப்பும், தமிழகத்தின் பேரரசுகளுக்கு எவ்வகையிலும் குறைவுறாத வகையில் அவ்வரசுகளை அடுத்து அரசமைத்து வாழ்ந்திருந்த வேளிர் குலக் குறுநிலத் தலைவர்கள், தங்கள் செல்வத்தைத் குவித்து வைத்திருந்த கொண்கான நாட்டுப்பாழி நகரைச் சூழ அழைத்திருந்த அரிய காவற் சிறப்பும் புலவர் பாராட்டும் பெருமை புடையவாயின
“கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடு தரு நிதியிலும் செறிய
அருங்கடிப் படுக்குவள் அறங்இல் யாயே”
அகம்-60
“நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்
தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்”
அகம்-258
என்ற அகநானூற்றுத் தொடர்களைக் காண்க.
தமிழகத்துப் பேரூர்களின் அமைப்பு முறையினைப் பழந்தமிழ் இலக்கியங்களின் கண் கொண்டு நோக்குவார்ககு, அவை ஒவ்வொன்றும், அரண் அமைப்பின். இன்றியமையாமையினை உணர்ந்து அமைக்கப் பெற்றுள்ளன என்பது புலனாகும்.
ஒரு நாட்டையும், அந்நாட்டின் தலை நகரையும் சூழ, நீரரண், நிலவரண் மலையரன், காட்டரன் என்ற அரண்கள் நான்கும் இயற்கையாகவே அமைந்திருப்பது சாலவும் நன்று என்பதே பழந்தமிழ்ப் பெரியார்கள் கண்ட அரண் அமைப்பு முறையாகும்.
மணி நீரும், மண்ணும், மலையும்,
அணிநிழல் காடும் உடையது அரண்”
என்ற வள்ளுவர் வாய் மொழியினைக் காண்க.
“கான் அரனும், மலையரணும், கடல் அரணும் சூழ் கிடந்த கலிங்க பூமி” என அவ்வியற்கையரண்களே எடுத்துப் பாராட்டப் பெறுதலும் காண்க. இவ்வரண் முறையினைக் கருத்தில் கொண்டு, எளிதில் கடந்து செல்லலாகாவாறு, எக்காலத்தும் கரை புரண்டு ஓடும் வெள்ளம் உடையவாகிய பேராற்றங்கரைகளிலேயே தங்கள் தலைநகர்களைக் கண்ட தமிழ் நாட்டுப் பேரரசர்கள், அவ்யாறுகள் ஒவ்வொன்றும், ஓரிடத்தே இரண்டாகப் பிரிந்து சிறிது தூரம் ஓடி மீண்டும் ஒன்று கலந்து ஓட. உண்டாகும்; திருவரங்கம் போலும் ஆற்றிடைக் குறைகள் எல்லா ஆறுகளிலும் உண்டாதல் இயலாது போவதால், ஆறுகள், நகர்களுக்கு ஒரு சார் அரணாகவே அமைதல் கூடும் என்பதை அறிந்து பிற அரண்களையும் பொருந்தும் வகையால் அமைத்து வைத்தனர்.
அவ்வாறு அமைக்க முனைந்த அவர்கள், அந்நால் வகை அரண்களுள், மலையரண் இயற்கையாக அமைதல் இயலுமே அல்லது, அதைத் தாமே ஆக்குதல் இயலாது என்பதை உணர்ந்து, அதை விடுத்து, ஏனைய அரண்களைத் தாமாகவே படைத்துக் கொண்டனர். நகரத்தின் நாற்புறங்களிலும் காடுகளை வளர்த்தனர்.
காட்டரணை அடுத்து ஆழ்ந்து அகன்ற அகழிகளைத் தோண்டினர். நகரைக் கைப்பற்றும் கருத்தோடு வந்து வளைந்துக் கொள்ளும் பகைப்படை, காவற்காட்டை அழிப்பதிலும், அகழியைத் தூர்ப்பதிலும் முனையும் ஆதலின், அவ்வழிவு நிலை இடம் பெறாதவாறு, அப்பகைப் படையைத் தலைநகர்ப் புறத்திலேயே போராடி அழிக்க வேண்டும் என்பதே போர் முறையின் தலையாய நெறியாகும் என்பதை உணர்ந்து, புறக்காவல் வீரர்கள் இருந்து பணிபுரியத்தக்க பெருநிலப் பரப்பினை, அகழிக்கும்: மதிலுக்கும் இடையே அமைத்தார்கள்.
புறநகர் எனும் பெயருடையதாகிய அப்பெரு நிலப்பரப்பினை அடுத்து, வானளாவ உயர்ந்து மலையெனக் காட்சி அளிக்கும் மதில்களை எழுப்பினார்கள். அம்மதில் அகத்தேன் தான், அரசன் பெருங்கோயில் முதலாம் மாட மாளிகைகள் நிறைந்த அக நகரை அமைத்தார்கள்.
+++
7. பரியல்-விரைந்து பாயும்.
8. யாழ்-அசை
9. தொடலை-மாலை; நுடங்கி-அசைய;
10. கிள்ளைத் தெள்விளி-ஆலோலம் என்பது போலும்
கிளி ஓட்டும் ஓசை; பயிற்றி; பல கால் ஒலித்து,
12. சிறுகிளி-சிலவே வரும் கிளிகள் கடிதல்-ஓட்டுதல்; தேற்றாள் -அறியாள்.
14. உறற்கு-அடைதற்கு,
(தொடரும்)
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்
Comments
Post a Comment