கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 65 : மீனவனைப் பழித்தல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 64 : கலை பயில் தெளிவு-தொடர்ச்சி)
பூங்கொடி
மீனவனைப் பழித்தல்
என்றனன்; அவ்விடை இருந்தவர் ஒருவர்
`நன்று நன்றடா! மரபினை நவிலக்
கூசினை யல்லை! குலவுநின் மரபோ 125
ஏசலுக் குரியது! வேசியின் பிள்ளை!
சாதி கெடுத்தவள் தந்தைசொல் விடுத்தவள்
வீதியில் நின்றவள் விடுமகன் நீயோ
எம்பெரு மரபை இகழ்ந்துரை கூறினை?
வம்பினை விலைக்கு வாங்கினை சிறியோய்!’ 130
என்றிவை கூறி ஏளனம் செய்தனர்;
மீனவன் வெஞ்சினம்
`பெரியீர்! ஏளனப் பேச்சினை விடுமின்!
சிறியேன் தீங்கு செய்ததும் உண்டோ?
அன்னையைப் பழித்தீர் ஆணவப் போக்கால்,
என்னைப் பிணித்தீர் இலையேல் நும்முடல் 135
துண்டு துண்டாத் துணிப்பென், பிழைத்தீர்!
காதல் ஒரு குற்றமா?
கண்ட தவறென் காரிகை கற்பில்?
ஒருவனை உளத்தால் உன்னினள், எதற்கும்
வெருவிலள், அவனே விழைமண வாளன்
என்றவன் துணையை ஏற்றனள் காதலில் 140
++++
உருவு – உருவம், எள்ளேல் – இகழாதீர், கோட்பகை – கொள்பகை, பிணித்தீர் – கட்டினீர்.
++++
வென்றனள், பொன்னி, வீரத் தாயென
நின்றவள் கற்பின் நிறைதனை இகழ்ந்தீர்!
குணமிழந்தாள் நும் மகள்
கணவனை இழந்த காரிகை நும்மகள்
குணமிழந் தாளிதைக் குவலயம் அறியும்
கருவுற் றாளெனக் கண்டதும் நெஞ்சம் 145
வெருவுற் றிழைத்த வினையெலாம் மறந்தீர்!
கிணறே உரைக்கும்நும் கீழ்மைக் குணமெலாம்,
உணரா தும்மை உயர்வா நினைத்தீர்!
கொடும்பழி யஞ்சாக் குலத்தினில் தோன்றி
மிகும்பொருள் ஒன்றால் மேலவர் போல 150
நாடகம் நடித்தீர்! நல்லவள் கற்பில்
கேடுரை கிளந்தீர்! கிளறேல் என்சினம்!
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment