அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: பதிப்புரையும் என்னுரையும்
அறிவுக் கதைகள் நூறு
பதிப்புரை
கதைகள் மலிந்த காலம் இது. கதை சொல்வோரும் பெருகியுள்ளனர். ஆனால் வெளிவரும் கதைகள் பெரும்பாலும் பொழுதுபோக்குக் கதைகளாகவும், அழிவுக் கதைகளாகவுமே விளங்குகின்றன. இது நாட்டிற்கு நன்மை தராத போக்கு என்று கருதுபவர் பலர்.
கதைகளை இனிமையாகச் சொல்லவும் வேண்டும்; அந்தக் கதைகளைக் கற்கும் பிஞ்சு நெஞ்சங்களிலே நல்லறிவுச் சுடர்களையும் ஏற்றவேண்டும். நல்லறிவு பெற்ற மக்களே நல்லவர்களாக விளங்குவார்கள் நல்லவர்கள் வாழும் நாடே நல்ல நாடாகவும் விளங்கும்; அந்த நல்லறிவின் வளர்ச்சிக்குக் கதைகள் பெரிதும் உதவும்.
தமிழர்கள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் நெறியோடு வாழவேண்டும் என்று கருதுபவர் முனைவர் முத்தமிழ்க் காவலர், கி. ஆ. பெ. விசுவாதம் அவர்கள். இந்த நோக்கில் அவர்கள் அரிய பல கருத்துச் செல்வங்களை வழங்கி வருகின்றார்கள். இப்போது, ‘”அறிவுக் கதைகள் நூறு’’ என்னும் இந்த நூலையும், அருளோடும் அன்போடும் ஆக்கித் தந்துள்ளார்கள்.
இத்தகைய அருமையான கதைகளைச் சுவையாகவும் இனிமையாகவும் அமைத்து, அவற்றை நூல்வடிவில் வெளியிட்டு மகிழ எங்களுக்கு வாய்ப்பளித்த முத்தமிழ்க் காவலர் அவர்களுக்கு எங்கள் நன்றியும் வணக்கமும் உரியன.
— பாரி நிலையத்தார்
—————–
என்னுரை
“அறிவுக் கதைகள் நூறு” இன்று வெளிவருகிறது. சில படித்தவை; சில பார்த்தவை; சில கேட்டவை; சில கற்பனை.
இவை அனைத்தும் தமிழில், தமிழரின், தமிழகத்தின் சொத்துக்ள். இவை அழிந்து போகும்படி விட்டுவிட முடியாதவை.
சிறியோரும், பெரியோரும் கதைகளை விரும்பிப் படிக்கும் காலம் இது. ஆகவே, கதைகளைப் படிப்பதன் மூலம் அறிவை வளர்த்துக்கொண்டு நல்வழியில் நடக்க இக் கதைகள் துணை புரியும் என நம்புகிறேன். தமிழக மக்கள் படித்துப் பயன் பெறுவது நல்லது.
என் நூல்கள் பலவற்றையும் வெளியிட்டு உதவுகிற பாரி நிலையத்தாருக்கும், அச்சிட்டு உதவுகிற மாருதி அச்சகத்தினர்க்கும் என் நன்றியும், வணக்கமும்.
தங்களன்பிற்குரிய,
கி. ஆ. பெ. விசுவாதம்
திருச்சிராப்பள்ளி -81 ; 12 – 8 – 1984
Comments
Post a Comment