Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 60 : மீனவன் வரலாறுணர்ந்த காதை

      01 August 2024      கரமுதல



(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 59 : இசைப்பணிக்கு எழுக எனல்-தொடர்ச்சி)

 இசையியல் இயம்பும் ஏட்டுச் சுவடி

வசையிலா நினக்கு வழங்கிய மீனவன்

தன்றிறம் கூறுவென் தயங்கிழை! கேளாய்,

நின்பெரும் பணிக்கும் நீள்பயன் விளைக்கும்;        

          நெல்லூர் என்னும் நல்லூர் ஆங்கண்       5

          கழனி வினைபுரி களமர் குடிதனில்

எழில்நிறை செல்வி இடுபெயர்ப் பொன்னி

நல்லவள் ஒருத்தி, கொல்லுலைத் தொழில்புரி

வில்லவன் என்னும் விடலை தன்னொடு

          அறியாக் காதல் வாழ்வின ளாகிக்          10

          குறியிடம் ஒருநாள் கூடினள் நிற்க;         

          நெறியிடை ஏகும் நெடுமகன் ஒருவன்

கண்டனன் அவர்நிலை காதல் அறியான்,

அண்டையர் மறைசெயல் அறிவதும் தீமை    

          அதனைப் பலர்க்கும் அறைவதும் தீமை;          15

          இதனை உணரான் எதிர்ப்படுவோர்க்கெலாம்

புதுமை கண்டவன் போலதை விளம்ப

மனைதொறும் அம்மறை வாயிடம் பெற்றது

நினையா வகையிற் பனையாய் வளர்ந்தது;  

          பாரோர் அறிய ஒருபொருள் பரப்ப         20

—————————————————————

          தயங்கிழை – பூங்கொடி, கழனி – வயல், களமர் – உழவர், விடலை – சிறந்த ஆடவன், நெறியிடை – வழியில், நெடுமகன் – மூடன், மறை – இரகசியம்.

          ++++++++

ஊரார் வாய்போல் ஒன்றிலை உலகில்

உற்றொரு மறையை மற்றவர்க் குரைக்க

முற்படும் மாந்தர் கற்பனை என்னே!

கேட்டிடும் ஒன்றைக் கண்கால் படைத்து        

          நாட்டிடை நடமிட நற்பணி புரிகுவர்;      25

(தொடரும்)


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்