Skip to main content

அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 4. கண்டதும்கேட்டதும், 5. கொள்ளும் குத்துவெட்டும், 6. தூங்கு மூஞ்சிகள்



(அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 3. கருமித்தனமும் சிக்கனமும்-தொடர்ச்சி)

மேலை நாட்டிலே எழுத்தாளன் ஒருவன் – அவன் நூல்கள் மிக வேகமாகப் பரவின. எல்லாரும் படிக்க விரும்பினர். அவனுக்குப் புகழ் மேலும் மேலும் ஓங்கியது.

இத்தனைக்கும் அவன் ஒரு படிப்பாளியும் அல்லன்: பட்டதாரியும் அல்லன்; எழுத்தாளனுமல்லன்; பேச்சாளலுமல்லன்; ஒரு குதிரை வண்டி ஒட்டுபவன்.

பத்திரிகை நிருபர்கள் அவனிடம் நெருங்கி – ‘உனக்குத்தான் படிக்கத்தெரியாதே? நீ படித்ததில்லையே? எப்படி நூலாசிரியன் ஆனாய்? இவ்வளவு பெருமை, புகழ்ச்சி எங்கும் பரவி வருகிறது. பெரிய பட்டதாரிகளும் எழுத்தாளர்களும் உன்னைக் காணப் பொறாமைப் படுகிறார்களே! நீ எழுதிய முதல் நூல் எது? – என்று கேட்டார்கள்.

அதற்கு அவன் –

நான் எழுதிய முதல் நூலின் பெயர் – ‘கண்டதும் கேட்டதும்’ – என்று சொன்னான்.

பத்திரிகை நிருபர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.

இதிலிருந்து தெரிவது என்ன?

அவன் வெற்றி யடைந்த வழி :

அவன் ஒரு வண்டியோட்டி. பலரும் வண்டியில் பயணம் செய்வார்கள். எல்லாரும் பேசிய (அவரவர் குடும்பச்) சங்கதிகளை எல்லாம் கேட்டு, அதையே ஒரு நூலாக எழுதியிருக்கிறான்.

வண்டியில் பயணம் செய்யும் போது – பெரும்பான்மையோர் வண்டியோட்டி – அவன் ஒரு மனிதன் வண்டிக்குள் இருப்பதாகவே நினைப்பதில்லை. தாங்கள் மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டு, எந்த நிகழ்ச்சிகளையும் – இரகசியங்களையும் பேசி விடுகிறார்கள். ஏழை முதல் பணக்காரர் வரையுள்ள பலரது வாழ்க்கை – நடைமுறை – சிக்கல் – அல்லது – துயரம் எல்லாம் எப்படி எப்படி வாழ்கிறார்களோ – அவையெல்லாம் கேட்டுள்ளதனால் – அப்படியே நூலாக எழுதவே – எல்லாருடைய உள்ளத்திலும் நன்கு தைத்தது.

“தங்கள் வாழ்க்கையோடு அது மிகவும் ஒட்டியிருக்கிறது. தெரியாத செய்திகள் பல தெரிய வைக்கப்படுகின்றன. புரியாத செய்திகள் புரிய வைக்கப்படுகின்றன.”

ஆகவே, அவன் எழுதிய முதல் நூல் பல இலட்சக்கணக் கான (படிகள் பிரதிகள்) விற்பனை யாயின.

அவன் பெரிய எழுத்தாளன் ஆனான்.

அடுத்த பதிப்புகள் பல இலட்சக்கணக்கில் விற்பனை யாகாமல் என்ன செய்யும்?

நல்ல எழுத்தாளனாக, நூலாசிரியனாக விளங்க ஒருவன் படிப்பாளியாக பட்டதாரியாக வேண்டுமென்பதில்லை; அனுபவம் ஒன்றே போதும் எனத் தெரிகிறது.
————-

அழுக்கு மூட்டைகளை இறக்கியபின் கழுதைகளை முன்னங்கால்களை மட்டும் கட்டி மேயவிட்டான் சலவைத் தொழிலாளி. அவை வெளியில் போய் மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது அவ்விடத்தில் குதிரைப்படை ஒன்று வந்திறங்க, குதிரைகளின் சேணத்தை இறக்கி, கொள்ளும் புல்லும் கொடுத்து, அவற்றின் அலுப்புத்தீர உடல்களைத் தேய்த்தும் விட்டனர் போர்வீரர்கள்.

இதுகண்ட கழுதைகள், இவையும் நம்மைப் போல் தான் இருக்கின்றன. இவற்றுக்கு மட்டும் என்ன கொள்ளு, புல்லு, தேய்ப்பு, சிறப்பு! நமக்கும் இம்மாதிரி எல்லாம் செய்ய வேண்டும் என நம் எசமானரிடம் நாம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தன.

சற்று நேரத்திலேயே வேறொரு குதிரைப்படை அங்கே வந்தது; போர் மூண்டது.

பல குதிரைகளுக்குக் குத்தும் வெட்டும் விழுந்தன. தலை, கால்கள் முறிந்தன.

இதையும் பார்த்த கழுதைகள் –

நமக்குக் கொள்ளும் வேண்டா, இந்தக் குத்து வெட்டும் வேண்டா என்று, உடனே தமக்குள் முடிவு செய்து கொண்டன.

நாம் எவ்வளவுக்கெவ்வளவு இன்பங்களை எதிர்பார்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு துன்பங்களும் ஏற்படும் என்பதை இதனால் அறிய முடிகிறது.
———-

அடுத்த ஊரில் நிகழும் தம் உறவினர் திருமணத்துக்கு அவசியம் போக வேண்டியிருந்தது முதலாளிக்கு. வேலைக்காரனிடம் வண்டியைக் கட்டச் சொன்னார். இரவு 10 மணிக்கு வண்டியும் புறப்பட்டது. வண்டியோட்டியும் உறங்கிவிட்டான். முதலாளியும் வண்டியில் ஏறி அமர்ந்ததும் உறங்கிவிட்டார். வண்டி ஒடிக்கொண்டே இருந்தது வெகு நேரம் ஆனபின்பு முதலாளி விழித்துக் கொண்டு வண்டி ஒட்டியைப் பார்த்து “ஊர் வந்து விட்டதா?” என்று கேட்டார். அதற்கு அவன், “எசமான்! வண்டி நமது வீட்டைச் சுற்றித்தான் ஒடிக் கொண்டிருக்கிறது” என்றான். “ஏண்டா இப்படி?” என்றார். வருத்தத்தோடு. “சாமி தூக்கத்தில் செக்கு மாட்டைப் பூட்டிவிட்டேன், அது வீட்டிலே சுற்றிச் சுற்றி வருகிறது” என்றான் வண்டியோட்டி.

உடனே முதலாளி கோபமாக “வேறு மாட்டைப் பூட்டி வண்டியைச் சீக்கிரம் ஒட்டு” என்று சொல்லிவிட்டு மறுபடியும் உறங்கிவிட்டார். வண்டியோட்டியும் அதை அவிழ்த்துவிட்டு வேறு மாட்டைக் கொண்டு வந்து பூட்டி விட்டு, அவனும் உறங்கிவிட்டான். வண்டியும் ஒடிக் கொண்டிருந்தது.

பொழுது விடியும் நேரத்தில் முதலாளி விழித்து, ‘எங்கே ஊர் வந்துவிட்டதா?’ என்று கேட்டார். உடனே வண்டி ஒட்டி விழித்துக் கொண்டு “சாமி வண்டி நமது வீட்டண்டையேதான் ஒடிக்கிட்டிருக்கு, மன்னிக்கணும். நான் தூக்கக் கலக்கத்திலே ஏத்து (ஏற்றம் இறைக்கிற) மாட்டைக் கட்டிவிட்டேன். அது முன்னே போகவும் பின்னே வருவதுமாகவே இருக்கிறது. என்ன செய்வேன்?” என்றான்.

என்ன செய்வான் எசமானன்? முன்பு தூங்கினான்; இப்போது விழிக்கிறான்?

எப்படி? தூங்குமூஞ்சி முதலாளியும், தூங்குமூஞ்சி வேலையாளும். இப்படியும் நாட்டில் சிலருடைய வாழ்க்கைகள் நடைபெற்று வருகின்றன.


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்