Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 56 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 55 : பூங்கொடியின் பூரிப்பு – தொடர்ச்சி)

தாயும் தோழியும் தன்னுடன் தொடர

ஆயும் அறிவினர் நரைமுதிர் யாக்கையர்

சாயா நாவினர் தங்கிடன் குறுகிக்

காயாப் பூங்கொடி கண்ணீர் மல்க        

          மலையுறை யடிகள் மலரடி வணங்கிக்  5

          காற்றலை வீசும் கடல்நகர்ப் புக்கதூஉம்,

ஆங்கவள் சிலரால் அருந்துயர் பெற்றதூஉம்,

தீங்கினை எதிர்த்துத் திருத்தி வென்றதூஉம்,

அழுக்கிலா வாழ்க்கை ஆசான் றன்பால்        

          திருக்குறள் கற்றுத் தெளிந்து நின்றதூஉம்,     10

          பொருள்நூல் முழுதும் திரிபற உணர்ந்ததூஉம்,

அருள்விழி நாவலூர் அமுதத் தம்மை

விறலுறு தமிழன் மீனவன் கையன

பெறலருஞ் சுவடிகள் பெட்புடன் ஈந்ததூஉம்,  

          ஏந்தல் மீனவன் இயல்பினை மலையுறை        15

          அடிகள் தம்பால் அறிகஎன் றறைந்ததூஉம்

முடிய வுரைத்து முகிழ்த்தசெங் கையினள்

படிமிசை நின்றனள் பழுதறு பூங்கொடி;         

          மலையுறை யடிகள் மனங்களி கூர்ந்து,

          `கலைபயில் செல்வி! கல்லா மாந்தர்      20

          நாட்டிடை மிகுதலின் நலிவுகள் மல்கின,        

—————————————————————

          யாக்கையர் – உடலினர், திரிபற – மயக்கம் அகல, விறலுறு – வலிமையுறும், பெட்புடன் – விருப்புடன், ஏந்தல் – சிறந்தோன், முகிழ்த்த – கூப்பிய, படிமிசை – நிலத்தின்மீது,

———————————————————-

          ஆட்டினம் ஆயினர் ஆதலின் அவர்பால்

கல்வித் தொண்டே கடவுள் தொண்டெனச்

சொல்லுதல் வேண்டும் மெல்லியற் பூங்கொடி!        

          ஓதிய கல்வி உயர்வினை நல்கும்,  25

          சாதியில் உயர்வு தாழ்வுகள் சாய்க்கும்

குடிக்குயர் வாக்கும், கொடுமைகள் போக்கும்,

பிடித்துள பேதமைப் பிணியினைத் தொலைக்கும்,

அடிமைத் தளைகளை அறுக்கும், உலகில்      

          படிறு செய்திடப் பார்ப்பார் தமக்கிடம்  30

          இல்லா தொழிக்கும், இன்பம் பயக்கும்

பொல்லா வினைகளைப் புதைக்கும், நாளும்

மான வுணர்வினை வளம்பெற வளர்க்கும்

ஆன கல்வி, அவலக் கவலை

          கடத்தற் கொருமரக் கலமும் ஆகும்;        35

          மடக்கொடி நல்லாய்! மாநிலத் திந்நாள்

கல்விப் பணியே காத்திடல் வேண்டும்;

நல்லஇச் செயலால் நம்மனோர் அறிவொளி

எய்திடப் பெறுவர்; எய்திய காலை         

          உய்வகை அறிவர்; உணர்வும் பெறுவர்;  40

          எப்பொருள் ஆயினும் மெய்ப்பொருள் காண்பர்;

தப்பெதும் புரியார்; தாய்மொழி அன்பும்

இயல்பினில் வாய்க்கும்; இந்தநல் லன்பால்

மயலறி வொழித்து மாண்புகள் ஆக்குவர்;      

          பிறமொழி தமிழிற் பெருகுதல் காணின் 45

          அறவே ஒதுக்குதற் காவன இயற்றுவர்;  

—————————————————————

          ஆட்டினம் – ஆடுகள், படிறு – வஞ்சனை, உய்வகை – முன்னேறும் வழி.

—————————————————-

          செம்பொன் தன்னொடு செம்பு கலந்தால்

அம்பொன் அணிகள் அமைத்திடல் ஒல்லும்;

கலவா விடினோர் கலன்செய இயலாது;

          அதுபோற் பிறமொழி அகற்றுதல் கருதின்      50

          தமிழ்வள ராதெனச் சாற்றுவர் சிலர்தாம்;

அமிழ்தம் இனிக்க அச்சு வெல்லம்

கலப்போர் உலகிற் கண்டோ மில்லை;

உலப்பிலாத் தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி 

          கலப்பிலா தியங்கும், கற்றவர் அறிவர்;  55

          செம்பு கலந்தணி செய்வதும் இயற்கை,

செம்பும் மிகவே சேர்த்திடப் பெறுமேல்

கலன்செய அப்பொன் பலன்படா தொழியும்; 

          நலமிகு நல்லாய்! நற்றமிழ் வளரப்         

          புலம்புலஞ் சென்று புரிகநற் றிருப்பணி;          60

          மங்கை! கேளினி மற்றொன் றறைகுவென்

துய்ப்போர்ப் பிணிக்கும் தொன்மைசேர் இசைநூல்,

மெய்ப்பா டனைத்தும் மேவிய கூத்துநூல்

எத்துணை எத்துணை இருந்தன தமிழில்!       

          அத்துணை நூலும் அழிந்தன கடலால்    65

          எனநாம் இரங்கி அயருங் காலைக்        

          கனவெனக் கட்டுக் கதையெனக் கழறியும்

புலவோர் தம்மைப் பொல்லாங் குரைத்தும்

அலறுவோர் சிலருளர் அருகிய அறிவினர்      

          அவருரை பொய்யென ஆக்குக நங்காய்!        70

          சுவடியின் துணையாற் சொல்லுக மெய்ம்மை;        

—————————————————————

          உலப்பிலா – அழிவில்லாத, பிணிக்கும் – தன்வயமாக்கும், அருகிய – சுருங்கிய.

——————————————————————

(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்