Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 84

அகரமுதல




(குறிஞ்சி மலர்  83 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்  29 தொடர்ச்சி

மணிமேகலையைப் பற்றி எண்ணியபோது உடன் வந்திருப்பவர்களையெல்லாம் எங்காவது விலக்கித் துரத்தி விட்டுத் தனியாக அந்தத் தீவின் மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு கொந்தளிப்பின்றி அடங்கிக் கிடக்கும் கடலைப் பார்த்தவாறே தன் முகமாகத் தனக்குள்ளே நினைவுகளில் ஆழ்ந்து மௌனமாக அழவேண்டும் போலப் பைத்தியக்காரத்தனமானதொரு ஆசையும் அவளுக்கு உண்டாயிற்று. விலை மதிப்பற்றனவும், மீட்டு எடுக்க முடியாதனவுமாகிய பழைய பொற்காலத்தின் அழகிய நினைவுகள் அந்தக் கடற்கரைப் பகுதிகள் எங்கும் ஒளிந்திருப்பதை அவள் உணர்ந்தாள். மாலையில் அவர்கள் அங்கிருந்து திரும்பிவிட்டார்கள். யாழ்ப்பாணத்து அன்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு திருகோணமலை, அனுராதபுரம், மட்டக்களப்பு முதலிய பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டுக் ‘கொழும்பு‘ வந்து சேர மேலும் ஐந்தாறு நாட்கள் கழிந்தன. சென்ற இடங்களில் முன் ஏற்பாடு இல்லாமல் திடீர் திடீரென்று ஏற்பாடான சொற்பொழிவு நிகழ்ச்சிகள் சிலவற்றையும் பூரணி மறுக்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது. உலகத்தின் எந்தப் பகுதிக்குப் போனாலும் அன்பைப்புறக்கணிக்க மட்டும் துணிவு வருவதில்லையே! கொழும்பில் மங்களேசுவரி அம்மாளுக்குத் தெரிந்தவர்கள் நிறைய இருந்தார்கள். கொழும்பிலிருக்கும் போதே ஒரு நாள் கதிர்காமத்துக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு வந்தார்கள். மங்களேசுவரி அம்மாளுக்குத் தெரிந்தவர்கள் யாரோ சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாக மகிழுந்து ஒன்றும் கொடுத்திருந்தார்கள். மாணிக்க கங்கையில் நீராடிய புனித உணர்வோடு கதிர்காமத்துக் கோவிலில் நின்றபோது பரவசத்தால் பூரணிக்குக் கண்களில் நீர் அரும்பிவிட்டது. கதிர்காமத்திலிருந்து திரும்பிக் கொழும்பு வந்து தங்கியிருந்த இரண்டு மூன்று நாட்களில் விவேகானந்த சபையிலும், வெள்ளவத்தையிலுள்ள சைவ மங்கையர் கழகத்திலும் சில சொற்பொழிவுகளைச் செய்தாள் பூரணி.

கண்டி, நுவரெலியா நாவலப்பிட்டி, இரத்தினபுரம் ஆகிய மலைநாட்டு நகரங்களைச் சுற்றிப் பார்க்கச் சில நாட்கள் ஆயின. நாவலப்பிட்டியில்தான் மங்களேசுவரி அம்மாளின் கணவருக்குத் தேயிலைத் தோட்டங்கள் இருந்தனவாம். மலைநாட்டில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தமிழ்நாட்டு ஏழைகளின் கூட்டங்கள் சிலவற்றிலும் பூரணி பேசினாள். கண்டிக்கு அருகில் இருந்த இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் மாணவர்கள் ஒரு சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இலங்கையின் மலைப்பகுதி ஊர்கள் பூரணிக்கு மிகவும் பிடித்திருந்தன. மலைத் தொடர்களில் முத்தாரம் நெளிவதுபோல் மாவலி கங்கை நதியும் இயற்கையின் எண்ணரிய பேரெழில்களும் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. கண்டியில் அவள் பௌத்த நாகரிகத்தின் பழமையான சின்னங்களைக் கண்டாள். சென்ற இடங்களில் எல்லாம் அங்கங்கே இருந்த தமிழர்கள் அவளைத் தம் அன்புப் பெருக்கில் திக்குமுக்காடச் செய்தார்கள். இலங்கைச் செய்தித்தாள்கள் எல்லாம் அவள் சொற்பொழிவுச் செய்திகளாலும், படங்களாலும் நிறைந்திருந்தன. மலைநாட்டு ஊர்களில் சுற்றிவிட்டு, அவர்கள் மறுபடியும் கொழும்பு திரும்பியதும், இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்புப் பகுதியில் பூரணியை அழைத்து இரண்டு சொற்பொழிவுகளை ஒலிப்பதிவு செய்து கொண்டார்கள்.

“வந்து நாளாகிவிட்டது அம்மா! ஊர் திரும்ப வேண்டும். தேர்தல் வேலைகளுக்காக அவரும் உங்கள் மாப்பிள்ளையும் தனியாக அலைந்து கொண்டிருப்பார்கள். நாம் விரைவில் ஊருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டால் அவர்களுக்கு உதவியாக இருக்கலாம். அடுத்தாற்போல் கிழக்கு ஆசியப் பெண்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் கல்கத்தாவுக்கு வேறு போயாக வேண்டும் எனக்கு” என்று பூரணி மங்களேசுவரி அம்மாவிடம் ஊர் திரும்ப அவசரப்படுத்தினாள்.

“ஏன் தான் இந்தத் தேர்தல் வம்பை இழுத்துக் கொண்டு திணறுகிறாயோ? அரவிந்தன் எவ்வளவோ நல்ல பிள்ளை. இதில் மட்டும் ஏன் பிடிவாதமாக இருக்கிறாரென்று எனக்கே விளங்கவில்லை, பூரணி! மீனாட்சிசுந்தரம் போன பின் தேர்தல், அரசியல் வம்புகளிலிருந்து உனக்கு விடுதலை கிடைத்திருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நீ என்னவோ அரவிந்தன் வற்புறுத்துகிறதாகச் சொல்கிறாய்?”

“இல்லை, அம்மா! அவருக்கும் இதெல்லாம் பிடிக்காது. ‘என்னைத் தேர்தலில் நிறுத்துவதற்கு இணங்கச் செய்ய வேண்டும்’ என்று முதன் முதலாக மீனாட்சிசுந்தரம் அவரிடம் வேண்டிக் கொண்டபோது அவர் கடுமையாக அதை எதிர்த்திருக்கிறார். ஆனால் இப்போதோ சூழ்நிலை வேறு மாதிரி ஆகிவிட்டது. அவரே இந்தத் தேர்தல் முயற்சியைக் கைவிட முடியாத இன்றியமையாத நிலை ஏற்பட்டுவிட்டது” என்று தொடங்கிப் பருமாக்காரரும் புது மண்டபத்து மனிதரும் செய்கிற சூழ்ச்சிகளைப் பற்றியும் சொன்னாள் பூரணி. மறுநாள் கொழும்பிலிருந்தே அவர்கள் விமானம் மூலம் ஊர் திரும்பிவிடத் தீர்மானம் செய்து கொண்டார்கள். புறப்படுவதற்கு முதல் நாள் மங்களேசுவரி அம்மாளும் பூரணியும் சில பொருட்கள் வாங்கிக் கொள்வதற்காக கடைத் தெருவுக்குப் போயிருந்தார்கள். பூரணிக்கும், அவள் தம்பி, தங்கைகளுக்கும், தன் பெண்களுக்குமாக இலங்கையில் கிடைக்கும் உயர்தரத் துணிமணிகள் நிறைய வாங்கிக் கொண்டாள் மங்களேசுவரி அம்மாள். கொழும்பு – செட்டியார் தெருவில் ஒரு நல்ல கடையில் துணிகள் வாங்கிக் கொண்டு திரும்பும்போது, பக்கத்தில் இருந்த கடிகாரக்கடை ஒன்றின் வாயிலில் பூரணி தயங்கி நின்றாள்.

“அம்மா! இலங்கையில் மிகவும் தரமான நல்ல கைக்கடிகாரங்கள் எல்லாம் கிடைக்கும் என்று சொல்வார்களே?”

“ஏன்? உனக்கு வேண்டுமானால் பார்க்கலாம் வாயேன்! சிறிதாக அழகாக உன் கையில் ஒரு கடிகாரம் கட்டிக் கொண்டாயானால் நன்றாகத்தான் இருக்கும். வா! நல்லதாக உனக்கு வாங்கித் தருகிறேன்.”

“கடிகாரம் எனக்கு இல்லையம்மா…”

“பின்னே யாருக்கு?” இப்படிக் கேட்டு விட்டு மங்களேசுவரி அம்மாள் வியப்புடன் பூரணியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். பூரணியின் முகத்தில் நாணமும் இளநகையும் மலர்ந்தன.

“இத்தனை வயதான பின்பு தேவையும் வசதியும் இருந்தும் கூடக் கைக்கடிகாரம் இல்லாமல் வெறுங்கையோடு இருக்கிறாரம்மா அவர்…”

“ஓ! அரவிந்தனுக்குக் கைக்கடிகாரம் வாங்கிக் கொண்டு போக வேண்டுமென்கிறாயா? அதைச் சொல்வதற்கு இத்தனை கூச்சப்படுவானேன், பூரணி? அரவிந்தனுக்கு வாங்கிக் கொண்டு போவதோடு உனக்கும் ஒன்று வாங்கித் தருகிறேன், கட்டிக்கொள்.”

இருவரும் கடிகாரக் கடைக்குள் நுழைந்தார்கள். தனக்குக் கைக்கடிகாரம் தேவையில்லை, அரவிந்தனுக்குக் கொடுப்பதற்கு மட்டும் ஒன்று வாங்கிக் கொண்டால் போதுமென்று பூரணி எவ்வளவோ பிடிவாதமாக மறுத்துப் பார்த்தாள். ஆனால் மங்களேசுவரி அம்மாள் அவளை வெறுங்கையோடு விடவில்லை. அரவிந்தனுக்கும் வாங்கிக் கொண்டு அவளுக்கும் சிறிய ‘லேடீஸ் வாட்ச்‘ ஒன்றை வாங்கி அங்கேயே கையில் கட்டி அழகு பார்த்த பின்புதான் திருப்தி ஏற்பட்டது. அந்த அம்மாளுக்கு அவர்கள் ஊருக்குப் புறப்படும் தினத்துக்கு முதல் நாள் மாலை கொழும்புத் தமிழன்பர்கள் ஒரு பெரிய விருந்து வைத்து வழியனுப்புதலை விழாவாகவே நடத்திவிட்டார்கள். அந்த விழாவிற்கு யாழ்ப்பாணத்திலிருந்து இராசநாயகம் தம்பதிகளும் வந்திருந்தார்கள். அவர்கள் புறப்படும்போது கொழும்பு இரத்துமலானை விமான நிலையத்தில் ஏராளமான தமிழன்பர்கள் வழியனுப்ப வந்திருந்தார்கள். அந்த அன்புப் பிணைப்பிலிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டு அவர்கள் பிரிந்தார்கள். சேய் தமிழகத்திலிருந்து தாய்த் தமிழகத்துக்குப் பறந்தார்கள்.

சென்னை திரும்புகிற விமானத்தில் உடன் பயணம் செய்து கொண்டிருந்த தமிழர் ஒருவரிடமிருந்து தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றைப் படிப்பதற்காக வாங்கினாள் மங்களேசுவரி அம்மாள். அது மதுரையிலிருந்து வெளியாகிற செய்தித்தாள். நாலு நாட்களுக்கு முந்திய தேதியில் வெளியானது. இலங்கைக்கு வர நாலு நாட்களாயிருந்ததோ என்னவோ. ஆனாலும் இலங்கை வந்தபின் தமிழகத்துச் செய்தித்தாளே பார்க்காததினால் அதில் இருக்கிற செய்திகள் தனக்குப் புதியனவாக இருக்குமென்று மங்களேசுவரி அம்மாள் படிக்கலானாள். ‘மதுரை நகரத்துச் செய்திகள்’ என்ற தலைப்பின் கீழ் வரிசையாகப் படித்துக் கொண்டு வந்தவள், ‘தேர்தல் பகையினால் இளைஞர் கடத்தப்பட்டார். அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. நண்பர் போலீசில் புகார் செய்திருக்கிறார்’ என்ற தலைப்பு வாக்கியங்களின் கீழே காணப்பட்ட செய்தியைப் படிக்கத் தொடங்கியதும் முகம் வெளிறியது. கண்கள் மருண்டு விரிந்தன. “அடி பூரணி இந்தக் கூத்தைப் பார்த்தாயோ? இப்படியும் அநியாயம் நடக்குமா?” என்று திகைப்பான குரலில் கூறிக்கொண்டே செய்தித்தாளின் அந்தப் பகுதியை மடித்துப் பூரணியிடம் நீட்டினாள் மங்களேசுவரி அம்மாள். அந்தச் செய்தியைப் படித்ததும் பூரணியின் முகம் இருண்டது.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி, குறிஞ்சி மலர்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்