ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):19
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 18. தொடர்ச்சி)
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):19
கிடங்கில்
அகழி சூழ்ந்த கோட்டையைக் கிடங்கில் என்றும் கூறுவதுண்டு. முன்னாளில் கிடங்கில் என்னும் பெயருடைய கோட்டையின் தலைவனாகவும், கொடை வள்ளலாகவும் விளங்கிய நல்லியக்கோடன் என்ற சிற்றரசனது பெருமையைச் சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது. அவன் காலத்தில் அவ்வூர், கோட்டை மதில்களாலும், அகழிகளாலும் நன்றாக அரண்செய்யப்பட்டிருந்தது. இன்றும் அங்குக் காணப்படும் சிதைந்த சுவர்களும் தூர்ந்த கிடங்குகளும் அதன் பழம் பெருமையை அறிவிக்கின்றன. கிடங்கால் என்னும் பெயர் கொண்டு வழங்கும் அவ்வூருக்கு அண்மையில் திண்டிவனம் இப்போது சிறந்து திகழ்கின்றது.
படைவீடு
அரசனுக்குரிய படைகள் அமைந்த இடம் படைவீடு எனப்படும். தமிழ் நாட்டார் வீரத்தெய்வமாக வழிபடும் முருகன் ஆறு சிறந்த படை வீடுகளில் அமர்ந்து அருள் புரிகின்றான் என்பர்.1 நெல்லை நாட்டில் பாண்டியனுக்குரிய படை வீடு ஒன்று பொருநையாற்றின் கரையில் இருந்தது. மணப்படை வீடு என்பது அதன் பெயர். இப்பொழுது மணப்படை என்று வழங்கும் அவ்வூரின் அருகேயுள்ள கொட்டாரம், செப்பறை என்னும் சிற்றூர்கள் அதன் பழம் பெருமைக்குச் சான்று பகர்கின்றன.2 பாண்டிநாட்டின் பண்டைத் துறைமுக நகரமாகிய கொற்கைக்கு மணப்படை வீடு ஒரு சிறந்த பாதுகாப்பாக அமைந்திருந்ததென்று கருதலாகும்.
வட ஆர்க்காட்டில் ஆரணி என்னும் ஊருக்கு மேற்கே ஆறு கல் தூரத்தில் படைவீடு என்ற பெயருடைய சிறந்த நகரம் ஒன்று இருந்தது. குறும்பர் குலத்தைச் சேர்ந்த அரசர்கள் அதனைத் தலைநகராகக் கொண்டு நெடுங்காலம் ஆட்சி புரிந்தனர்; அந்நாளில் அப் படைவீடு பதினாறு கல் சுற்றளவுடையதாய், கோட்டை கொத்தளங்களோடு விளங்கிற்று.3 சோழ மன்னர் குறும்பரை வென்று அவர் படைவீட்டை அழித்தனர் என்று சரித்திரம் கூறும். இன்று அந் நகரின் பண்டைப் பெருமையொன்றும் காணப்பட வில்லை. இடிந்து விழுந்த மதில்களும், எருக்கும் குருக்கும் அடர்ந்த காடுகளும் பழைய படைவீட்டின் எல்லை காட்டி நிற்கின்றன. மண் மாரியால் அவ்வூர் அழிந்து விட்டதென்று அங்குள்ளார் கூறுவர்.4
பாளையம்
படைவீரருக்குரிய ஊர் பாளையம் எனப்படும். தமிழகம் முழுமையும் பல பாளையங்கள் காணப்படினும் சிறப்பாகக் கொங்கு நாடே பாளையத்திற்குப் பேர் பெற்ற நாடாகும். பாளையத்தின் தலைவன் பாளையக்காரன் என்று அழைக்கப்படுவான். மேட்டுப்பாளையம், கோபிச்செட்டி பாளையம், உத்தமபாளையம், உடையார் பாளையம், இராசபாளையம் முதலிய பாளையங்கள் தமிழ் நாட்டில் உண்டு. திருநெல்வேலிக்கருகே பாளையங் கோட்டை என்னும் ஊர் உள்ளது. அதற்கு மேற்கே யுள்ள பாளையம் மேலப் பாளையம் என்று பெயர் பெற்றது.
வல்லம்
வல்லம் என்ற சொல்லும் அரணுடைய ஊரைக் குறிப்பதாகத் தெரிகின்றது. வட ஆர்க்காட்டிலுள்ள திருவல்லம் என்னும் ஊர் பாண மன்னர்களுக்குரிய கோட்டைகளில் ஒன்றாக விளங்கிற்று. அஃது ஒரு சிறந்த படை வீடாகப் பத்தாம் நூற்றாண்டில் விளங்கிய பான்மை சாசனங்களால் அறியப்படும்.5
தஞ்சாவூருக்குத் தென் மேற்கே ஏழு கல் தூரத்தில் மற்றொரு வல்லம் உண்டு. இக் காலத்தில் அழிந்த அகழிகளே யன்றி, அதன் பழம் பெருமையை அறிதற்குரிய அடையாளம் ஒன்றும் அங்கு இல்லை. தஞ்சை மாநகரைச் சோழ மன்னர்கள் தலை நகராகக் கொள்வதற்கு முன்னே வல்லம் என்னும் கோட்டை, கள்ளரில் ஒரு வகுப்பாருடைய தலை நகரமாகச் சிறந்திருந்தது. வல்லத்தில் அரசு புரிந்த குடியினர் வல்லத்தரசு என்னும் பட்டம் பெற்றனர். வல்லம் சீரிழந்த பின்னர் வல்லத்தரசுகள் கள்ளர் முதுகுடியில் கலந்துவிட்டார்கள்.
கோட்டை
கோட்டை என்பது அரணைக் குறிப்பதற்கு பெரும்பான்மையாக எங்கும் வழங்கும் சொல்லாகும். முற்காலத்தில் மண்ணால் அமைந்திருந்த கோட்டைகளும், பிற்காலத்தில் கல்லாற் கட்டப்பட்ட கோட்டைகளும் இன்றும் பல இடங்களிற் காணப்படுகின்றன. பாண்டி நாட்டில் நிலக்கோட்டை என்பது ஓர் ஊரின் பெயர். அங்குப் பாளையக்காரன் ஒருவன் கட்டிய மட்கோட்டை இன்றும் உள்ளது. நிலக்கோட்டையின் அருகே சிறு மலையின் சாரலில் குலசேகரன் கோட்டை என்னும் ஊர் உண்டு. பாண்டி மன்னனாகிய குலசேகரன் பெயரை அக்கோட்டை தாங்கி நிற்கின்றது. இன்னும், நிலக் கோட்டைக்கு அண்மையிலுள்ள மற்றொரு கோட்டை தொடியன் கோட்டை என்று பெயர் பெற்றுள்ளது. வடுகர் இனத்தைச் சேர்ந்த தொட்டியத்தலைவன் ஒருவன் அக் கோட்டையைக் கட்டுவித்தான் என்பர்.
மதுரையைச் சேர்ந்த திருமங்கலத்துக்கு அண்மையில் கீழக் கோட்டை, மேலக் கோட்டை, நடுக் கோட்டை என மூன்று கோட்டைகள் அமைந்துள்ளன. தொண்டைமான் குலத்தினர் ஆளும் நாடு புதுக்கோட்டை என்று அழைக்கப்படுகின்றது. தொண்டைமான் ஆட்சியைத் தோற்றுவித்த இரகுநாதன் என்பவர் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், புதிதாக ஒரு கோட்டை கட்டி,அதற்குப் புதுக்கோட்டை என்று பெயரிட்டார். அவர் காலத்தில் அது தலைநகரமாகச் சிறந்திருந்தமையால், அக்கோட்டையின் பெயரே நாட்டின் பெயராயிற்று. இன்னும், பட்டுக் கோட்டை, தலைவன் கோட்டை, உக்கிரன் கோட்டை முதலிய ஊர்ப் பெயர்களில் கோட்டை என்னும் சொல் அமைந்திருக்கக் காணலாம்.
துர்க்கம்
மலைகளில் அமைந்த கோட்டை, துருக்கம் என்று பெயர் பெறும். தமிழ் நாட்டில் சில துருக்கங்கள் உண்டு. வட ஆர்க்காட்டு வள்ளிமலைக்கருகேயுள்ள நெடிய குன்றத்தில் அமைந்த கோட்டை மகிமண்டல துருக்கம் என்று குறிக்கப்படுகின்றது. அம் மலை மூன்று திசைகளில் செங்குத்தாக ஓங்கி நிற்கின்றது. மற்றைய திசையும் மதிற் சுவர்களால் செப்பமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.
காவல்
இன்னும், பெருங் கோட்டைகளைப் பாதுகாப்பதற்கும், பகைவர் வருகையை அறிந்து தெரிவித்தற்கும் சில அமைப்புகள் முற்காலத்தில் இருந்தன. அவை கோட்டையின் பாதுகாப்புக்காக ஏற்பட்டமையால் காவல் என்று பெயர் பெற்றன. கோயம்புத்தூரைச் சேர்ந்த நடுக் காவல் என்னும் ஊரும் செங்கற்பட்டிலுள்ள கோட்டைக் காவலும், உத்தர கெடிக்காவலும் இத் தன்மை வாய்ந்தன என்பது தெரிகின்றது.
வட ஆர்க்காட்டு வேலூர் வட்டத்திலுள்ள ஆம்பூர் என்பது சாசனங்களில் ஆண்மையூர் என்று பெயர் பெற்றுள்ளது.6 அங்குள்ள நடு கல்லில், வில்லும் வாளும் தாங்கிய வீரன் ஒருவன், மாற்றார் அம்புகள் உடலிற் பாய்ந்தும் முனைந்து நிற்கும் நிலை காட்டப்படுகின்றது.பகைவர்க்குப் புறங்கொடாது விழுப்புண் பட்டு வீழ்ந்த அவ் வீரனது பெருமைக்கு அறிகுறியாக ஆண்மையூர் என்று அதற்குப் பெயரிட்டனர் போலும்!
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை)
ஊரும் பேரும்
அடிக்குறிப்பு
1. திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றம் முதலாகக் குன்றுதோறாடல் ஈறாகக்கூறப்படும் தலங்கள் முருகன் படைவீடுகள் எனப்படும்.
2. இப்போது அது மணப்படையென்று வழங்கும். அதனருகேயுள்ள கொட்டாரம், செப்பறை என்னும் ஊர்கள் அரசனுக்குரிய சிறந்த படைவீடாக அஃது இருந்ததற்கு அறிகுறியாகும். சாசனங்களில் அம்பலத்தாடி நல்லூர் என்ற மறு பெயரும் அதற்குரியதாகக் கூறப்படுகின்றது. 442 / 1909.
3. Padavedu – 18 miles south of Vellore; a deserted and ruined city of great size; it was 16 miles in circumference and full of temples, choultries and fine private ference and full of temples, choultries and fine private residences – Sewell’s Antiquities. P – 169.
4. I.M.P.pp.72-76.
5. 7 / 1896.
6. 7 / 1896
Comments
Post a Comment