பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 1
(புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 5 – தொடர்ச்சி)
புதிய புரட்சிக்கவி
களம் : 2 காட்சி : 1
அரண்மனை வளாகத்தில் அழகிய பூஞ்சோலை. அமைவான மேடையில் இரண்டிருக்கை – இரண்டிற்கும் நடுவில் எழிலான திரை – கவிஞன் ஒரு புறம் காத்திருக்க – இளவரசியை மறுபுறம் அமரச் செய்து, இப்பாலிருக்கும் உதாரனையணுகி –
அகவல்
அல்லி: சங்கத்தமிழ் மிக்கோய் சாற்றினோம் வணக்கம்
எங்கள் தலைவி இருக்கையில் அமர்ந்துளான்
பொங்குந் தமிழால் புகல்கநும் பாடம்
பங்கமிலாத் தமிழ்ப்பணி தொடர்க வாழ்க
உதாரன்: மானுடந் தாயே மன்னும் இளையாய்
தமிழே அமுதே உயிரே உணர்வே
கணமுஞ் சலியாக் களிப்பே வாழி!
காவலன் மகளே கவிதை யாப்பை
முறையுறக் கற்க முனையுஞ் செல்வி
நவையற நீயும் நலமுடன் வாழி
கருத்தில் கொண்டதென் கழறுக நங்காய்
இளவரசி: செந்தமிழ்ப் பரப்பை நெஞ்சிலே தேக்கிய
மக்கள் போற்றும் மாத்தமிழ்ப் புலவீர்
தீத்திறந் தள்ளி செந்தமிழ் வளர்க்கும்
மீத்திறம் வாய்ந்த மேன்மையீர் உமக்கும்
இளமையும் வளமையும் என்றுங் குன்றா
என்னுயிர்த் தமிழ்க்கும் இணைந்த வணக்கம்
எண்ணத் துளிகளை வண்ணமிலா திறைத்து
கோடுகள் இல்லாக் கோலப் புள்ளியாய்
கலப்புச் சொற்களைக் கரையிலா தடுக்கிப்
பாடலெனப் பேரிடும் பழியெனக் கிசைவிலை
கருத்திலே புதுமையும் திறத்திலே பழைமையும்
திருத்தமாய்க் கவிதைதீந் தமிழிலே புனைந்திட
வகுக்கும் உமது வழிநான் தொடர்வேன்
செல்வழி யாகும் நல்வழி காட்டுக
உதாரன்: காவலன் மகளே பாவகை வல்ல
கன்னித் தமிழின் கவிஞராம் முன்னோர்
நாவசை யாக நம்மிடைத் தோன்றும்
சீரசை நுண்மை தெளிந்தவ ராவார்
அலையாய்ப் பொங்கும் ஆயிரம் நினைவுகள்
அனைத்தும் பிணித்தே அசையா தொன்றில்
நிலையாய் நெஞ்சை நிறுத்தும் வலிமை
நெறியோ டிணையும் ஒலிக்குண் டுணர்வீர்
ஒலியின் வலிமை உணர்ந்த முன்னோர்
உரைத்தார் அதன்வழி உரிய இலக்கணம்
வலிந்தே சொற்களை வரையிலா தடுக்காது
மெலிதாய் அசைதான் மேவிடும் வகையில்
ஒன்றிரண் டளவில் அல்லதோர் மூன்றாய்
அசையை இணைத்தே அளவாய்ச் சொற்களை
முன்னும் பின்னும் மோனை எதுகையாய்
எண்ணிய பாங்கில் எழிலுற அமைத்தால்
வண்ணம் மிகுந்த வண்டமிழ்ப் பாடலாய்
எண்ணந் தேக்கும் இனிய கவிதை
நுண்ணிய கருத்துடன் திண்ணமாய்ப் பிறக்கும்
பண்ணொடு சேர்ந்தநற் பாடலாய் இனிக்கும்
அரசன் மகளே! அமுத வல்லியே
பிழையாய் நினையேல் நாளும் நெஞ்சில்
நீண்டு புரளும் நினைவைக் கொஞ்சம்
அமைவுறப் பாடலாய் அமைத்துக் காண்போம்
வஞ்சியீர் உடலை வாட்டும் பிணிபற்றி
உரைப்பீர் முதலில் உமது சொற்களால்
இளவரசி உடலைக் கொடுத்தே உள்ளம் வதைக்கும்
ஆயிரம் பிணிகள் அவனியில் உளவாம்
உள்ளங் கலக்கி உடலை மெலிக்கும்
மடமைப் பிணிபல மாந்தர்க் குண்டு
காசைப் பெற்றுக் காயமாம் உடலைக்
காக்கும் நல்லோர் கணக்கிலர் காண்கிறோம்
பேதைமை போக்கிப் பெரும்புவி திருத்தும்
அறிஞராம் வல்லோர் அவனியில் சிலரே
உடற்பிணிக் குள்ளம் கவல்வார் பல்லோர்
மனப்பினி யெண்ணா மாந்தர் பல்லோர்.
உதாரன் நன்று நங்கையீர் நவின்ற சொற்களைக்
கொஞ்சந் திருத்திக் குலவு தமிழில்
ஒன்றிய பாடலாய் உரைப்பேன் கேட்பீர்
அறுசீர் விருத்தம்
உடலுறு பிணியைப் போக்கி
உறுபொருள் மிகவாய்ச் சேர்த்தல்
கடனெனக் கொள்ளும் வல்லோர்
கணக்கிலர் என்றும் உண்டு
மடமையாம் பிணியை நீக்கி
மன்பதை திருத்தஞ் செய்தல்
கடனெனக் கொண்ட சான்றோர்
கணக்கிடின் சிலரே யன்றோ
உடலைப் பற்றும் பிணிகண்டே
உலைவோம் நாமும் மருந்துண்டு
கெடலாம் சமூகப் பிணிகண்டு
கிளர்ச்சி செய்வோர் எவருண்டு
திடமாய்க் கொள்கை உளங்கொண்டு
திருத்தங் காண்போர் யாருண்டு
விடமாம் சமூகப் பிணிகண்டு
வேர்அறுத் தாலே வாழ்வுண்டு
உடலைப் பற்றும் பிணிதாமும்
உடையோர் தமக்கே தீங்காகும்
மடமை யென்னும் பிணியாலே
மன்பதை முற்றுங் கேடாகும்
உடமை யென்னும் பிணியாலே
உளதாம் உலகின் துயரெல்லாம்
திடமாய் அதனை யழித்திடவே
சேர்ந்தே உழைத்தல் கடனாமே
ஏட்டில் சிலர்தாம் எழுதிவைத்தார்
எல்லா உயிரும் ஒன்றென்றே
பாட்டாய்ச் சிலர்தாம் பாடிச்சென்றார்
பாவஞ் செய்தல் தீங்கென்றே
வாட்டம் முற்றுந் தீரவில்லை
வஞ்ச மின்னுந் தொலையவிலை
கூட்டங் கூடி நனியுழைப்போம்
கொள்கை வகுத்துப் போரிடுவோம்
அகவல்
சிலசொல் இணைத்திட நலமிகு பாடல்
எதுகை மோனையாய் எழுதல் கண்டீர்
அறுசீர் விருத்தம் அணங்கே யிதுவே
கவிதைப் பயிற்சிக் கெளிதாம் உணர்வீர்
அறுசீர் விருத்தம்
ஒழுங்குறும் ஒலியே மொழியென்றார்
ஒவ்வோர் ஒலியும் அளவிட்டார்
பழகுறும் நாவின் முறைகொண்டு
பயிலுஞ் சுவையின் திறங்கண்டு
விழைவுக் கேற்ற இசையின்பம்
விளைக்கும் ஒலியின் மரபெண்ணி
நுழைபுலச் சான்றோர் வகுத்தளித்தார்
நுண்ணிய ஒலியின் அளவெல்லாம்
குறிலும் நெடிலும் ஒற்றோடு
கூடியும் தனித்தும் நிற்குங்கால்
குறித்தார் நேரென் றோரசையாய்
குறில்தாம் இரண்டாய் இணைந்தாலும்
குறிலும் நெடிலும் சேர்ந்தாலும்
குறித்தார் இணையை நிரையென்றே
குறிக்கோள் நொடிதாம் மூன்றின்மேல்
கொள்ளேல் அசையாய் என்பதுவே
கூவிளம் புளிமா கருவிளமும்
தேமா வுடனே நான்காக
கூவி யளந்தே ஈரசையும் ;
கொஞ்சும் மேன்மை மூவசையாய்த்
தாவில் கனிகாய் சேர்த்துரைத்தார்
தக்க அசைதான் மூன்றின்மேல்
பாவின் சீரில் பயின்றுவரல்
பயனின் றென்றே தெளிவித்தார்
ஒலியின் அளவை அசையென்றார்
ஒழுங்குறு அசையைச் சீரென்றார்
மெலிவில் வகையாய்ச் சீரிணையின்
மேன்மைப் பாவின் தளையென்றார்
நலிவில் வனப்பாய்ப் பாவினிமை
நன்கு விளங்க அடிவகுத்தார்
ஒலியில் இயைபும் முரணுமாய்
ஒழுகுறு இசையைப் பாவென்றார்
அகவல்
இளவரசி: மண்ணின் வனப்பும் மற்றவர் வடிவும்
கண்ணாற் காணல் தடைபடும் நெஞ்சம்
என்படும் என்றே என்மனம் நடுங்கும்
விண்படும் புகழால் விலகுமோ துயரம்
தடையிலை யாயின் தங்கள் கருத்தை
நெஞ்சம் பதிக்க நினைக்கின் றேன்நான்
பதின்சீர் விருத்தம்
கவிஞன்: கழுத்தின்மேல் நிற்குந்தலை
கண்ணின்றேல் பயனே யில்லை
கண்ணுக்கா யிரக்கமின்றேல்
கடுகளவும் பயனே யில்லை
விழுமிய நற் புகழ் கொண்ட
வித்தகனாம் வள்ளுவ வன்தான்
வித்தைதான் கண்கள்பிற
விளைக்குந்துயர் புண்ணே யென்றான்
பழுதறவே கற்றாலும்
பகுத்தறிவும் இல்லை யாயின்
பரந்துபடும் உவர்நீராய்
பயனென்ன அவர்தாம் காண்பார்
பழகியதன் நண்பர்க்குப்
பாதகமே நினைப்ப வன்தான்
பண்பென்னுங் கண்ணிழந்து
பாரிலுறும் குருடென் றாவான்
எண்சீர் விருத்தம்
கண்டுவைத்துங் கண்ணோட்டம்
இல்லா தாரும்
கனியிருக்கக் காய்பறித்துப்
புலம்பு வாரும்
உண்டிறையென் றுளம்பொய்த்து
வாழ்வார் தாமும்
உயர்தமிழை ஒருநாளும்
கல்லா தாரும்
விண்டுரைக்கும் பகுத்தறிவை
விரும்பா தாரும்
விழலுக்கு நீர்பாய்ச்சி
வெதும்பு வாரும்
விண்டுரைக்கின் குருடென்று
சொல்ல லாகும்
வித்தகரே கண்ணற்ற
உடம்பு பெற்றார்
சிந்து கண்ணி
இளவரசி: தமிழைத்தான் அமுதெனச் சொல்லுவார் – அந்த
அமுதச் சுவையின்று கூட்டினீர்
சிமிழுக்குள் முத்தான கருத்தினை – சில
சொல்லாலே விளக்கியே காட்டினீர்
நவையின்றி இலக்கணஞ் சேர்த்துமே – இன்பத்
தமிழ்ப்பாடல் எளிமையாய் ஆக்கிட
எவையுண்டு தடையென் றுணர்த்தினீர் – நான்
எந்நாளும் மறவேனிப் பெற்றியை
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி
Comments
Post a Comment