பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 5
(புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 4 – தொடர்ச்சி)
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி
களம் : 1 காட்சி : 5
அரண்மனைப் பகுதி, அரசனும், அமைச்சனும் இருக்க, உதாரன் வருகிறான்
கலி விருத்தம்
அரசன் பண்பாடும் தமிழில்
பழகுதமிழ்ப் பாடல்
விண்ணோடும் முகிலாய்
விளைக்குங்கவி மன்னா
என்னினிய வணக்கம்
எற்றருள்க ஈங்கே
பொன்னினிய இருக்கை
பொலிவுபெறச் செய்க
உதாரன் என்னாடு வாழ்க
இனியதமிழ் போற்றிப்
பொன்னாடு காக்கும்
புவியரசு வாழ்க
மின்னாடும் மங்கை
மெலிவில்தமிழ்ப் பாடல்
என்னோடு கற்க
இயம்பினார்நும் மமைச்சர்
அறுசீர் விருத்தம்
அரசன் கன்னியைக் காணும் இன்பம்
கணப்போது சலித்தல் கூடும்
சின்னதோர் நேரந் தன்னில்
திகட்டிடும் தேன்சு வைதான்
பண்ணினைக் கேட்கும் போதும்
பசிக்கென உணவு வேண்டும்
தண்ணெனத் தவழுங் காற்றும்
தடுக்குறும் குளிரென் றாக
ஒண்டொடி மலரின் வாசம்
ஒப்புமோ முதுமைக் காலம்
எண்டிசை முதன்மை யான
என்னருந் தமிழ்சு வைத்தல்
மண்டிடுங் களிப்பே யல்லால்
மனத்தினில் சலிப்பென் றாமோ
உண்டிடும் உணவுக் கன்றோ
உண்டென அளவு சொன்னார்
கலிவிருத்தம்
எண்ணறியார் கண்ணிரண்டும்
இழிவே யன்றோ
பண்ணறியார் பாட்டிசைத்தல்
பழிப்பே யன்றோ
கண்ணிமையாய்த் தம்முணர்வைக்
காத்து நிற்கும்
அன்னைமொழி யறியாதார்
ஆளல் தீதே
நானிறந்தால் இந்நாட்டை
ஆளு தற்கு
வானிலவாய் வாய்த்ததொரு
மங்கை நல்லாள்
தேனினிய செந்தமிழைத்
தேக்கும் பாடல்
மேனிலையாய் ஆக்குதற்கு
விருப்பங் கொண்டாள்
அறுசீர் விருத்தம்
உதாரன் இழிந்திடும் அருவி யோரம்
இயற்கையே பூத்து நிற்க
வழிந்திடும் ஓடைத் தேனில்
வழுக்கியே தும்பி சாய
அழிந்திடும் நாணத் தாலே
அணங்கனார் மயங்கி நிற்க
கழிந்திடும் ஊழி யெல்லாம்
காதலர் மகிழும் நாட
ஆளலாம் வண்ண முன்றன்
அருந்தவச் செல்வி யாட்கு
நீளலாம் அளவு மட்டும்
நெஞ்சினில் தமிழைத் தேக்கி
கேளெலாம் மகிழும் வண்ணம்
கிளத்துவேன் தமிழின் யாப்பை
நாளெலாம் தமிழ்வ ளர்த்தல்
நற்பணி என்று கொண்டேன்
அரசன் மன்னன் மரபில் பிறந்தார்க்கும்
மண்டும் வறுமை கொண்டார்க்கும்
பின்னுந் தொடரும் விதிப்பயனைப்
பிறிதாய் மாற்ற யார்வல்லார்
என்னின் வினையோ என்மகளாம்
தன்னின் வினையோ நானறியேன்
பொன்னின் உருக்குக் கரையானால்
பொலிவி ழந்த தன்மையதாய்
குமுதம் மலர்த்துங் குளிர்மதியுள்
குறையா யிருக்கும் இருளாக
அமுத வல்லி உடலளவில்
அழகு குலைந்தாள் பெருநோயால்
உமது மனமுங் கோணாமல்
உடையாள் நெஞ்சும் நோகாமல்
அமுதத் தமிழில் கவிபாட
ஆற்ற லவட்குத் தோற்றுவிப்பீர்
உதாரன் இமிழ்கடல் ஞாலம் முற்றும்
இணையொன் றில்லை என்றே
தமிழ்க்குடை தாங்கி நிற்கத்
தரணியை ஆளும் வேந்தே
சிமிழதில் முத்தைப் போலச்
செல்வியாள் ஒளிநீண் டோங்க
அமிழதில் கவிதை யாக்கும்
அருங்கலைத் தேர்ச்சி கொள்வாள்
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி
Comments
Post a Comment