Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 83

 அகரமுதல




(குறிஞ்சி மலர்  82 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்  அத்தியாயம் 29 தொடர்ச்சி


“நீங்களும் உடன் வந்தது எங்களுக்கு மெத்த மகிழ்ச்சியாயிருக்கிறது” என்று மங்களேசுவரி அம்மாவிடம் அன்பொழுகக் கூறினாள் கனகம்மாள் இராசநாயகம். விமான நிலையத்தில் சுங்கப் பரிசோதனை முடிந்து வெளியேற அரை மணி நேரம் பிடித்தது. கனகம்மாள் இராசநாயகமும் வேறு சில பெண்களும் மாலை மேல் மாலையாக அணிவித்துப் பூரணியைக் கழுத்து நிமிர முடியாமல் திணறச் செய்துவிட்டார்கள். யாழ்ப்பாணத்தாரின் முகங்களிலும், கனிவான பேச்சுக்களிலும், பழகுகிறவர்களைக் கவரும் ஒருவித இனிமையும் குழைவும் இருப்பதைப் பூரணி கண்டாள். யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பெண்களின் முகங்களில் எல்லாம் ஒருமுறை பார்த்தாலும் மறக்க முடியாதது போல் ஏதோ ஒரு மங்கலமான சாயல் இருப்பதையும் அவள் கூர்ந்து பார்த்து உணர்ந்தாள். தமிழ்த்தாயின் தனிப்புதல்வியைக் கண்டது போல பூரணியைச் சூழ்ந்து கூட்டம் கூடி மொய்த்துக் கொண்டார்கள் அவர்கள். இலங்கையிலிருந்து வெளியாகும் தமிழ்ச்செய்தித்தாளின் நிருபர்கள் சிலர் புகைப்படக் கருவிகளோடு வந்து அவளைப் புகைப்படம் பிடித்துக் கொண்டு சென்றனர். திரும்புகிற பக்கமெல்லாம் அன்பும் ஆர்வமும் பொங்கும் முகங்களும், கூப்பிய கரங்களுமாகத் தோன்றி அவளை மகிழ வைத்தன. விமான நிலையத்திலிருந்து மங்களேசுவரி அம்மாளையும், பூரணியையும் இராசநாயகம் தம்பதிகள் தம் காரில் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அவர்கள் வீட்டில் தங்களுக்கு நடந்த உபசாரங்களையும் விருந்தோம்பலையும் பார்த்தபோதுதான் யாழ்ப்பாணத்தவரின் விருந்தோம்பல் பற்றி மங்களேசுவரி அம்மாள் சொல்லியிருந்ததில் மிகைப்படக் கூறல் சிறிதும் இல்லையென்று பூரணிக்குப் புரிந்தது.

மறுநாள் காலை முதல் தொடங்கி தமிழ் இலக்கிய விழா மூன்று நாட்கள் தொடர்ந்து நிகழ இருந்தது. பெரியதொரு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது போலத் தமிழ் விழாவுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதுபெருந்தமிழ்ப் புலவர் ஒருவர் விழாவைத் தொடங்கி வைத்தார். மேடையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்துத் தேவாரம் பாடி விழாவைத் தொடங்கிய அழகே பூரணிக்கு மிகவும் பிடித்திருந்தது. விழாப்பந்தல் காணாமல் நெருக்கி அடித்துக்கொண்டு ஆடவரும், பெண்டிரும் கூடியிருந்தனர். சொற்பொழிவுகளுக்குப் பெண்களும் அதிக ஆர்வத்தோடு விரும்பி வருவதைப் பூரணி அங்கே கண்டாள். விழாவைத் தொடங்கி வைத்த புலவர், பூரணியைக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்துகிற தொடர்பில் பேராசிரியர் அழகியசிற்றம்பலம் அவர்களைப் பற்றிக் கூறினார். பேராசிரியரின் நூல்களையும், ஆராய்ச்சித் திறனையும், பாராட்டிப் பேசினார். கடல் கடந்து வந்து தந்தையின் புகழைச் செவிகளில் கேட்டபோது அவளுக்குக் கருவமே ஏற்படுவது போலிருந்தது. முதல் நாள் விழாவில் ‘இலக்கிய உணர்ச்சிகள்’ என்ற பொருளைப் பற்றி அழகாகப் பேசினாள் பூரணி.

“உணர்ச்சிகளை வெறும் அனுபவங்களாக நுகர்ந்து மறந்து விடுகிறார்கள் மனிதர்கள். உணர்ச்சிகளைக் காவியம் செய்கிறார்கள் கவிகள். இன்பமும் துன்பமும், ஏக்கமும் வாழ்க்கையில் வரும்போது வெறும் உணர்ச்சிகளாக இருக்கின்றன. இலக்கியத்தில் வரும்போது, அழகும் அழிவற்ற நன்மையும் பெற்ற பேருணர்ச்சிகளாகின்றன. வாழ்க்கையில் காணும் உணர்ச்சிகள் காய்ச்சின பால்போல் சிறிது நேரம் அதிகமாக நீடித்தாலும் திரிந்து போகின்றன. இலக்கிய உணர்ச்சிகள் திரட்டுப் பால்போல் உருவாகி நின்று சுவை தருகின்றன. உணர்ச்சிகள் தாம் கவிகளின் வியாபாரத்துக்கு முதல்” என்று தொடங்கி எழிலுற வளர்ந்தது அவள் பேச்சு. உதாரணங்களும், நகைச்சுவைக் கதைகளும் தத்துவக் கருத்துக்களுமாக ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் பேசியும் அவர்கள் விடவில்லை. “முடித்து விடாதீர்கள். இன்னும் அரைமணித் தியாலம் (அரைமணி நேரம்) பேசுங்கள்” என்று முன் வரிசையில் உட்கார்ந்திருந்த கனகம்மாள் இராசநாயகம் எழுந்து கூறினாள். அவர்கள் அன்பை பூரணியால் மறுக்க முடியவில்லை. இரண்டாம் நாள் விழாவில் ‘சங்க இலக்கியச்சாறு’ என்பது பற்றியும் மூன்றாம் நாள் விழாவில் ‘ஐம்பெருங்காப்பியங்கள்‘ என்பது பற்றியும் பேசினாள் அவள். கனவுகளில் மிதக்கச் செய்வது போல் தான் பேசுகிற நேரத்தில் கூட்டத்தினரைப் பழைய தமிழ்நாட்டுக்கே அழைத்துச் சென்றுவிட்டாள் பூரணி. மூன்றாம் நாள் விழா முடிவில் நன்றி கூறும் போது இராசநாயகம் கூறினார்: “நாமெல்லாம் ஔவையாரைப் பார்க்கவில்லை. ஆனால் இவர் ஔவையாராகி, ஔவையார் இப்படித்தான் தமிழ் வழங்குமிடமெல்லாம் சென்று அறிவும், அன்பும் வளர்த்தார் என்று நமக்கு வாழ்ந்து காட்டிவிடுவார் போலிருக்கிறது” என்று இராசநாயகம் கூறியபோது கூட்டத்தில் கைத்தட்டல் ஒலி திசைகளை அதிரச் செய்தது. அந்தக் கூட்டத்தில் பூரணிக்குத் ‘தமிழ்ச் செல்வி’ என்று ஒரு சிறப்புப் பட்டம் எழுதிய பொற் பதக்கத்தை அளித்தார்கள். அந்தப் பட்டம் எழுதிய பொற் பதக்கத்தை முதிய புலவர் ஒருவர் மேடையேறி அளித்தபோது மனத்தில் தந்தையை நினைத்துத் தியானம் செய்துகொண்டு அதை அவள் வாங்கிக் கொண்டாள். மாபெரும் கூட்டத்துக்கு முன் ஒளி நிறைந்த மேடையில் பூக்களும், ஊதுவத்தியும் மணக்கும் பொன்னான சூழலில் அந்தப் பொற் பதக்கத்தைக் கையில் வாங்கிக் கொண்டபோது ஒரே ஒரு கணம் ‘அந்தப் பொற்பதக்கமே கலியிருள் நீக்கும் ஞானக் கைவிளக்காக மாறுகிறாற் போலவும், அந்தக் கைவிளக்கைத் தாங்கிக் கொண்டு அவலக் கவலைகளால் இருண்டு போன மனிதக் கும்பலுக்கு நடுவே தான் சோதிப் பிழம்பாக நடந்து செல்வது போலவும்’ அவளுக்கு ஒரு தோற்றம் உண்டாயிற்று. அன்று இரவு மங்களேசுவரி அம்மாள் பூரணிக்குக் கண்ணேறு கழித்தாள். கனகம்மாள் இராசநாயகத்தின் வீட்டில் பூரணியை ஒரு மூலையில் நிறுத்தி உப்பு மிளகாயை எடுத்து மூன்று முறை அவள் தலையைச் சுற்றி அடுப்பில் கொண்டுபோய்ப் போட்டாள் மங்களேசுவரி அம்மாள்.

“இதெல்லாம் என்ன அம்மா!” என்று சிரித்துக் கொண்டே அந்த அம்மாளைக் கேட்டாள் பூரணி.

“இந்த மூன்று நாட்களாக நீ பேசியிருக்கிற பேச்சுக்குக் கண்ணேறு பட்டுவிடக் கூடாதடி பெண்ணே! உடம்புக்கு ஒன்றும் வந்துவிடாமல் சுகமாக ஊருக்குப் போய் சேர வேண்டும்! அடுப்பில் எவ்வளவு மிளகாயைப் போட்டேன்? கொஞ்சமாவது நெடி ஏறுகிறதா பாரேன். நிறையக் கண்பட்டிருக்கிறதடி அம்மா?” என்று ஆதரவோடு அருகில் வந்து பூரணியின் கூந்தலைக் கோதிவிட்டாள் அந்த அம்மாள்.

தமிழ் விழா முடிந்து மறுநாள் உள்ளூர் ரோட்டரி சங்கத்தில் ‘பழைய அற நூல்களும், புதிய வாழ்க்கை நெறிகளும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு சொற்பொழிவு செய்தாள் பூரணி. செல்வமும் அறிவும் நிறைந்த ரோட்டரி உறுப்பினர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றது அந்தச் சொற்பொழிவு. மூன்று நாள் விழாவில் அவளுடைய நாவன்மை தமிழை அழகு செய்ததைக் கண்டவர்கள் அன்று ஆங்கிலத்தையும் அழகுற ஆட்சி புரிந்ததைக் கண்டு போற்றினார்கள். “ஏதோ ஒரு பேனாவுக்கு அதைவிடச் சிறிதாகவோ, பெரிதாகவோ வேறு ஏதோ ஒரு பேனாவின் மூடியைப் பொறுத்த முயல்வது போல் நமது பழைய அற நூல்களின் முடிவுகள் புதிய வாழ்க்கை நெறிகளோடு நன்றாகப் பொருந்துவதில்லை. கிழக்கு நாடுகள் எளிமையில் தூய்மை கண்டவை. கீழ்நாட்டு வாழ்வின் வசதிக்குறைகளை வைத்துக் கொண்டு மேல்நாட்டு ஆடம்பரங்களை விரும்பும் புதிய வாழ்க்கை நெறியைப் பழகிக் கொண்டு விட்டோம். பழைய அற நூல்கள் ‘அறமும் ஒழுக்கமும் தான் வாழ்க்கையை நன்றாக நடத்த ஏற்ற கருவிகள்’ என்கின்றன. பணமும் சூழ்ச்சித் துணிவும் தான் வாழும் நெறிகள், என்பது புதிய வாழ்வில் தெரிகிறது.” இப்படி எடுப்பாகத் தொடங்கிய சரளமான ஆங்கிலச் சொற்பொழிவு மிக தரமாகவும் புதுமையாகவும் இருந்தது. மங்களேசுவரி அம்மாள் பேச்சுக்களைப் பதிவு செய்யும் ‘டேப் ரிக்கார்டர்‘ கருவியைக் கொண்டு வந்திருந்ததினால் பூரணி பேசுகிற இடங்களில் எல்லாம் அதைப் பதிவு செய்து கொண்டாள். பூரணி இலங்கையில் பல பகுதிகளில் செய்யும் சொற்பொழிவுகளை ஊருக்குத் திரும்பியதும், மங்கையர் கழகத்துப் பெண்களும், மற்றவர்களும் கேட்கச் செய்ய வசதியாயிருக்கும் என்றே ‘டேப் ரிக்கார்டர்‘ கொண்டு வந்திருந்தாள் அந்த அம்மாள்.

அடுத்தாற்போல் யாழ்ப்பாணத்துப் பெண்கள் கல்லூரியில் மாணவிகளுக்காக ஒரு சொற்பொழிவு. இராமகிருட்டிணா மடத்திற்காக வைத்தீசுவர வித்தியாலயத்தில் ஒரு சொற்பொழிவும் செய்தாள் பூரணி. திருக்கேதீச்சுரத்துக்கும் நல்லூருக்கும் சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தார்கள். யாழ்ப்பாணப் பகுதியில் அக்கம் பக்கத்திலிருந்த சிறு ஊர்களுக்கும் தீவுகளுக்கும் சென்று வருவதில் இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன. இராசநாயகம் தம்பதிகள் பயணங்களுக்கான எல்லா ஏற்பாடுகளையும் நன்றாகச் செய்திருந்தார்கள். யாழ்ப்பாணத்துக்கு அருகில் ஊர்க்காவல்துறை என்ற இடத்திலிருந்து எந்திரப் படகு மூலம் ‘நயினார் தீவு‘ என்ற தீவுக்கும் அவர்கள் போயிருந்தார்கள். அந்தத் தீவுப்பகுதிதான் பழங்காலத்தில் மணிபல்லவமாக இருந்ததென்று சில தமிழ் அறிஞர்கள் ஆராய்ந்து சொல்லியிருப்பதாக இராசநாயகம் கூறினார். அந்தத் தீவின் தனிமையான சூழ்நிலையும் சூழ்ந்திருந்த கடற்பரப்பும் பூரணியைக் கவர்ந்தன. கால வெள்ளத்தின் அளந்தரிய முடியாத ஆழத்துக்கடியில் எப்போதோ பழம் பிறவியில் துறவுக் கோலத்தோடு சடைமுடி சுமந்து அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டும், அந்தத் தீவின் மணற்பரப்பில் தானே மணிமேகலையாகச் சுற்றித் திரிந்திருப்பது போல் பூரணிக்குப் பொய்ம்மாயப் புத்துணர்ச்சி ஒன்று உண்டாயிற்று.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி, குறிஞ்சி மலர்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்