Skip to main content

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 8

 அகரமுதல




(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 7 தொடர்ச்சி)

பழந்தமிழ்

3.பழந்தமிழ் தொடர்ச்சி

            4.         அம் மொழியின் எழுத்து ஓவிய ஒலியெழுத்தாகும். ஓவியமாக நின்று உருவப்பொருளையும் ஒலியடையாளமாக நின்று அருவப் பொருளையும் அவ் வெழுத்து அறிவித்தது.

            5.         எழுத்தடையாளங்கள் அசைகளை அறிவியாது முழுச் சொற்களையே அறிவித்தன.

  உலக மொழிகள் அனைத்தும் முதலில் ஓவிய எழுத்துகளைக் கொண்டிருந்தன;பின்னர் அவற்றினின்றும் ஒலி எழுத்துகள் தோன்றின. ஆங்கில அ, ஆ என்பன ஓவிய எழுத்துகளிலிருந்து தோன்றியனவே. தமிழ் எழுத்துகளும் அவ்வாறு தோன்றியிருக்க வேண்டும். எழுத்து என்ற சொல் வரிவடிவத்தையும் ஒலி வடிவத்தையும் குறிக்கப் பயன்படுவதே இக் கூற்றுக்குப் போதிய சான்றாகும்.

  அறிஞர் ஈராசு மறைந்த மாநகரங்களைக் கொண்டிருந்த சிந்து வெளிப்பகுதியில் வழங்கிய திராவிட முதல் மொழியே தமிழ்க் குடும்ப மொழிகளின் தாய் என்று குறிப்பிட்டுள்ளார். இங்கு இவர் திராவிட முதல் மொழி என்பது பழந்தமிழேயாகும்.

  சிந்து வெளிப்பகுதிக் கல்வெட்டுகளில் காணப்பட்ட சொற்களெனக் கொடுக்கப்பட்டவை தமிழிலும் தமிழ்க் குடும்ப மொழிகளிலும் இன்றும் உள்ளன.

ஐ        :  இதனை வேராகக் கொண்டு பல சொற்கள் தோன்றியுள்ளன.

அல    :  தமிழில் அலை என வழங்குகின்றது.

அலர் :  மலர்ந்த பூ.

அமா :  அம்மா என்பது இடை குறைந்துள்ளது.

ஆண்:  சிந்துவெளியில் கடவுளைக் குறித்தது; இதிலிருந்தே         ஆண்டவர் என்ற சொல் தோன்றியுள்ளது.

ஆற்   :  தமிழில் ஆறு; பழங்கன்னடத்தில் ஆற்; புதுக்கன்னடத்தில் ஆறு (எண்).

அரி    : கள் எனும்பொருள் தரும் இச் சொல் சங்கத்   தமிழில்  உண்டு.

அவி   : ஆவி என வழங்குகின்றது.

எறுபு : எறும்பு என வழங்குகின்றது.

எட்     : எட்டு=கிட்டு எண்ணுப் பெயர்.

இல்    : மகன், இல்லுக்குரியோன் இல் எனப்பட்டான் போலும். பிள்ளை எனும் சொல் இதிலிருந்தே தோன்றியிருக்கலாம்.

இல    : இலை என வழங்குகின்றது.

இர்     : இரு; இரண்டைக் குறிப்பது.

கா      : காவு = சாவு.

கட     : கடை: கடைசி

கடக் கோடி : கடைக்கோடி- கடைசி  எல்லை.

கால்வேல்   : கருவேல்

கட்     :  கட்டு

கை    :  செய்; கன்னடத்தில் கை என்பது செய் என்னும் பொருளைத் தரும்.

கொம்ப்       : கொம்பு.

குட    : குடம்

குடக :  குரங்க;  குரங்கு

குட    : குட்டம் = குளம்

குடி    : குட்டி (ஆட்டுக் குட்டி ).

மக     :  மகன்

மல    :  மலை

மழ     :  மழை

முசில்           :  முகில் = மேகம்

மூன்  :  மூன்று

நாட்   :  நாடு

நால்  :  நாலு

நண்ட்           :  நண்டு

நந்தல்          :  நந்தல் (அறுவடை விருந்து:பொங்கல்)

நடல்  :  நடல்(நாற்றுநடல்)

ஒர்      :  ஒரு (ஓர்)

பகல் :  பகல்

பக்     :  பகு (பங்கிடு)

பளி   :  பள்ளி (ஊர்)

படி     :  பட்டி (ஊர்)

பாவ்  :  பாவு = பாம்பு (கன்னடத்தில் பாவு)

பெர்  :  பெரிய

பெர்பெர்: மிகப் பெரிய

புக்     :  புகை

ரா       :  வெளிச்சம்; தமிழில் இரா-இருளுடைய பகுதி.

சித்    :  சிந்து

தல     :  தலை

தென்கது: தெற்கு

திர்     :  திரு : உயர்வு குறிப்பது

திர     : திரை:தலை

திற    :  திறை = கப்பம்

துக்    :  தூக்கு = நிறை

உட    :  உடை = உடைத்தல், ஆடை, ஆறாம் வேற்றுமைச்   சொல்லுருபு.

வலவு            : வல்லவன்

வெல் : அரசன்= வெற்றிக்குரிய அரசன் வெல் எனப்  பட்டுள்ளான்.

வெளி           : வெள்ளி.

  இங்குக் காட்டப்பட்டுள்ள சொற்கள் சங்கத் தமிழை ஒட்டியனவாகக் காணப்படுகின்றன. ஆனால் சங்கத் தமிழ் அன்று என்று அறிஞர் ஈராசு குறிப்பிட்டுள்ளார். அவர் தம்மைத் திராவிடர் என்று கூறிக்கொண்டனரேனும், நற்றமிழ்த் தொடர்பு அற்றவர் ஆதலின் அவ்வாறு கூறிவிட்டார். இச் சொற்கள் இற்றைய தமிழிலும் அவ்வாறே வழங்குகின்றன என்பதை அறிந்திலர் போலும். சிந்து வெளிப் பழந்தமிழும் இற்றை  நம் தமிழும் ஒன்றேதான் என்பதில் ஐயமில்லை. சில சொற்களில் பொருள் மாற்றமுற்றிருக்கலாம். எல்லா மொழிகளிலும் இயல்பாக உண்டாகும் நிகழ்ச்சிகளே இவை. சொல் வடிவ மாற்றம், பொருள் மாற்றம் கொண்டு தொடர்ந்து வழங்கிவரும் மொழியைத் தொடக்கத்தில் ஒரு மொழியெனவும், பின்னர் வேறு ஒரு மொழியெனவும் கூறுதல் பொருந்தாது. இன்றைய இளைஞனே நாளைய முதியன், இளைஞன் வேறு, முதியன் வேறு என்று கூறுதல் பொருந்துமா? பொருந்தாதன்றோ. அங்ஙனமே சிந்துவெளிப் பழந்தமிழும் இன்று நாம் வழங்கும் தமிழும் வேறு வேறு மொழிகளல்ல.

  சிந்துவெளி நாடுகள் மறைந்த பின்னர் ஆரியர்கள் இந் நாட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வந்த காலம் கி.மு. 2000-1500 என்பர். அக்காலத்தில் வட  இந்தியா முழுவதிலும் வாழ்ந்தவர்கள் திராவிடர்களே. (It is regarded as certain that Dravidian speakers were at one time spread over the whole of Northern India as well from Balochistan to Bengal – S.K. Chatterji – Origin and Growth of Bengali Language-Page 28) ஆரியர்கள் திராவிடர்கள் மொழியினையறிந்து அதன் போக்கை ஒட்டித் தம் மொழியையும் எளிமையாக்கிக் கொண்டனர். (The whole system of Vedic has been simplified to that of the modern Vernaculars and this simplification has been carried out to a great extent along the line of Dravidian-ibid-Pages 38-39)ஆரியம் தமிழையொட்டி எளிமையாக்கப்பட்டதோடு, அதன் ஒலியமைப்பு, தொடர் அமைப்பு முதலியனவும் தமிழையொட்டி அமைக்கப்பட்டன. தமிழிலிருந்து பல சொற்களையும் ஆரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதுபற்றி அறிஞர் காலுடுவல் கூறுவதாவது:

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்