மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 72
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 26
குயிற்குஞ்சு முட்டையைக் காக்கை தன் கூட்டிலிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின்றது போல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை
மயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.
— திருமந்திரம்
அரவிந்தனும் பூரணியும் புகைப்பட நிலையத்துக்குச் சென்றிருந்தபோது வீட்டில் மீனாட்சிசுந்தரமும் மங்களேசுவரி அம்மாளும் அவர்கள் இருவரையும் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“எனக்கு ஒன்று தோன்றுகிறது. என் பெண் வசந்தாவின் திருமணத்தை மட்டும் தனித் திருமணமாக நடத்துவதற்குப் பதிலாக அதே மண மனையில் இவர்களுக்கும் முடிபோட்டு இணைத்துவிட்டால் என்ன? இவர்களும் தான் எத்தனை நாளைக்கு இப்படியே இருந்துவிட முடியும்? ஆக வேண்டிய நல்ல காரியம் காலா காலத்தில் ஆனால் தானே நன்றாக இருக்கும்? பூரணிக்கு வயதும் கொஞ்சமா ஆகிறது?” என்று மங்களேசுவரி அம்மாள்தான் முதலில் அந்த பேச்சைத் தொடங்கினாள். சரியான நேரத்தில் பொருத்தமாக அந்த அம்மாள் அதை நினைவுபடுத்துவதாகத் தோன்றியது மீனாட்சிசுந்தரத்துக்கு. அவர் ஒப்புக் கொண்டார்.
“செய்ய வேண்டியதுதான்! எனக்குக் கூட முன்பே இப்படி ஒரு நினைப்பு உண்டு. அந்தப் பெண் பூரணிக்கு இதையெல்லாம் காலம் நேரம் பார்த்துச் செய்வதற்கு வேறு யார் இருக்கிறார்கள்? அரவிந்தன் நான் சொன்னால் கேட்பான். அவனுக்கும் தான் யார் இருக்கிறார்கள்? அவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் நாமாகப் பார்த்துச் சொல்லித் தூண்டிச் செய்து வைத்தால் தான் நல்லது. இரண்டுமே அப்பாவிகள். இலட்சியம், கொள்கை, அது, இது என்று ஒரேவிதமான மனமுடையவர்கள். வரட்டும், இருவரையும் முறைக்காக ஒரு வார்த்தை கேட்டுக் கொண்டு சேர்த்தே ஏற்பாடு செய்துவிடுவோம். . .”
“நான் அவளைக் கேட்டுக் குறிப்பறிந்து கொள்கிறேன். நீங்கள் அரவிந்தனைக் கேட்டு விடுவது நல்லது. நாம் தான் இவர்களுக்கு எல்லா உறவும். நீங்கள் அரவிந்தனின் தந்தையாகவும், நான் பூரணியின் தாயாகவும் பாவனை செய்து கொண்டு இருந்து நாமாகப் பார்த்து நடத்த வேண்டிய நல்ல காரியம் இது” என்று மங்களேசுவரி அம்மாள் கூறி வற்புறுத்தினாள்.
இந்தத் தீர்மானத்தின் தொடர்ச்சியாகத்தான் புகைப்பட நிலையத்திலிருந்து திரும்பிய அரவிந்தனையும் பூரணியையும் இதைக் கேட்டு முடிவு செய்வதற்காக அவர்கள் தனித்தனியே அழைத்துக் கொண்டு போனார்கள்.
மங்களேசுவரி அம்மாள் தன்னிடம் அதுபற்றிக் கூறிக் கேட்டபோது பூரணி மணப் பெண்ணாகவே மாறிவிட்டது போல் நாணித் தலைகுனிந்து நின்றாள். பரிபூரணமான இன்ப அனுபவத்தை மனம் அடைகிறபோது நெஞ்சுக்கும் நினைப்புக்கும் தான் வேலை. வாய்க்கும் நாவுக்கும் வேலை இல்லை. வாயும் நாவும் பேசும் ஆற்றல் இழந்து போகின்றன. பதில் சொல்லும் உணர்வு தடைப்பட்டுப் போகிறது. எதிரே நின்று கொண்டு கேட்கும் மங்களேசுவரி அம்மாளின் முகத்தை நேரே பார்க்கக் கூசிற்று பூரணிக்கு. தன்னாலும், வெல்ல முடியாத அளவற்ற நாணத்தை அப்போது உணர்ந்து ஒல்கி ஒசிந்து நின்றாள் அவள். அந்த ஒரே கணத்துக்குள் பூரணியின் முகத்தில் புதுப்புது அழகுகள் பூத்தன. ஆயிரக்கணக்கானவர்களுக்கு நடுவில் மேடையேறி நின்று ஆற்றொழுக்குப் போல் இடையறாமல் பெரிய கருத்துகளைப் பேசும் இலட்சிய நங்கை பூரணியா அப்படி நாணி நிற்கிறாள் என்று மங்களேசுவரி அம்மாளுக்குச் சந்தேகம் உண்டாகிவிட்டது. பெண் எந்த உணர்ச்சிகளைத் தனக்கே உரிமையாகப் பெற்றிருப்பதால் பெண்ணாக இருக்க முடிகிறதோ, அந்த மெல்லிய உணர்ச்சிகளை அவளால் ஒரு போதும் விடமுடியாதென்று அந்த அம்மாளுக்குத் தோன்றியது.
“என்னடி பெண்ணே! நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நீயானால் பதில் சொல்லாமல் நாணிக் கொண்டே நிற்கிறாய்? என்னிடம் சொல்வதற்கு என்ன வெட்கம் வேண்டிக் கிடக்கிறது. நீயும் பச்சைக் குழந்தை இல்லை, அரவிந்தனும் பச்சைக் குழந்தை இல்லை. எங்களை அதிகம் சோதனை செய்யாமல் ‘சரி’ என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டீர்களானால் திருமணங்களைச் சேர்த்தே நடத்திவிட வசதியாக இருக்கும்.”
மேலும் மௌனம் சாதித்தாள் பூரணி. அவளுடைய கண்களும் முகமும் நாணம் சுரந்து, நகை சுரந்தது. உணர்வுகள் சுரந்து தோன்றின.
“என்னை உன் தாய் போல் நினைத்துக் கொண்டு சொல் பூரணி! நான் உனக்கு அந்நியமானவள் இல்லை.”
நீண்ட நேர மௌனத்துக்குப் பின் உள்ளத்து உணர்வுகளின் இனிமையெல்லாம் கலந்த கோமளமான மெல்லிய குரலில் தயங்கித் தயங்கிச் சொன்னாள் பூரணி. “அவருக்கு எப்படி விருப்பமோ அப்படியே செய்யுங்கள். அவருக்குச் சம்மதமானால் எனக்கும் சம்மதம்தான்.”
“அவருக்கு என்றால் எவருக்கு?”
“அவருக்குத்தான்.” ஈடில்லா அழகும், இணையில்லாப் புன்னகையுமாகச் சிவந்து சிரித்தது பூரணியின் முகம். சொல்லிவிட்டு அவள் அம்மாளின் முன்னாலிருந்து நழுவி ஓடிவிட்டாள். அவளுடைய உள்ளம் துள்ளியது, பொங்கியது, பூரித்தது. மென்மையும் நுணுக்கமும் பொருந்திய கனவுகளும் நினைவுகளும் அவளுடைய மனப் பரப்பெல்லாம் எழுந்தன.
பூரணியை ஒருவாறு சம்மதிக்கச் செய்துவிட்ட மன நிறைவோடு நின்ற மங்களேசுவரி அம்மாள், மீனாட்சிசுந்தரம் தொங்கிய முகத்தோடு திரும்பி வருவது கண்டு திகைத்தாள்.
“என்ன காயா, பழமா?”
“காய்தான், அவன் சம்மதிக்கவில்லை.”
“காரணம் என்னவாம்?”
“காரணமெல்லாம் சொல்லிக் கொண்டு நின்று நிதானமாய்ப் பேசவே இல்லை. ‘இப்போது இதற்கு அவசரமில்லை’ என்று ஒரே வாக்கியத்தில் அவன் பேச்சை முடித்துக் கொண்டு போய்விட்டான்.”
“நீங்கள் விவரமாக அவனுக்கு எடுத்துச் சொல்லக் கூடாதோ?”
“கேட்டால்தானே சொல்லலாம்.”
“அந்தப் பெண்ணே சம்மதித்த மாதிரிச் சொல்லிவிட்டது. அரவிந்தனுக்கு மட்டும் என்ன தடை? இப்போது அரவிந்தன் எங்கே? நான் சொல்லிப் பார்க்கிறேன்.”
(தொடரும்)
தீபம் நா.பார்த்தசாரதி
குறிஞ்சி மலர்
Comments
Post a Comment