சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” நூல் 1/3 – புதேரி தானப்பன்
“சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு
ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள், “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” என்னும் நூலொன்றை வெளியிட்டுள்ளார். இது கலைச் சொற்கள் தொடர்பான ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பு நூலாகும்.
இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் என்ன சொல்லுகிறது என்பதைச் சொல்லும் கட்டுரையாக ‘முன்னுரை’ என்னும் முதற் கட்டுரை அமைந்துள்ளது.
இக் கட்டுரைகள் யாவும் கலைச் சொற்கள் தொடர்பானவையே. எனினும் இந்நூல் கலைச் சொற்கள் குறித்து எழுதப்பட்ட தனி நூல் அல்ல. ஆயினும் கலைச் சொற்கள் குறித்த நல்ல புரிதலை அளிக்கக் கூடியதாக இந்நூல் விளங்குகிறது. எனவே சொல்லாக்க ஆர்வலர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும். இந்நூலின் முன்னுரையே ஒரு கட்டுரை போலப் பரிணமிக்கிறது. முதற் கட்டுரையாகவும் அமைந்துள்ளது.
“கலைச் சொல் விளக்கம்” என்னும் இரண்டாம் கட்டுரை, காலந்தோறும் கலைச் சொல் குறித்த இலக்கியப் பதிவுகள், கலைச் சொற்கள் அமையும் முறை, பிற சொல் கலப்பின்றி இருக்க வேண்டியதன் இன்றியமையாமை, கலைச் சொற்கள் வழக்காற்றில் நிலைக்க வேண்டிய பண்புகள் முதலியன விளக்கப்பட்டுள்ளன.”
கலைச் சொல் என்றால் என்ன?
ஒரு சொல்லின் பொருள் வெளிப்படையாகக் குறித்தால் அது இயல்பான சொல்.
அச் சொல் வேறு பொருளை உணர்த்தினால் அது கலைச் சொல்.
காலந்தோறும் கலைச் சொற்கள் பற்றிய ஆழ்ந்த சிந்தனை தமிழறிஞர்களுக்கு இருந்துள்ளது. இதற்குத் தொல்காப்பியர், நன்னூலார், இளம்பூரணர், சேனாவரையர் போன்றோர் சான்றாவர். விடுதலைப்புலிகள் கலைச் சொற்களைப் பல தளங்களிலும் எடுத்துச் சென்றனர்.
கலைச் சொற்கள்,
1) விகுதி சேர்த்தல்.
2) தொகையாக்கல்.
3) கூட்டுச் சொல் அமைத்தல்.
4) பிற மொழிச் சொற்களைக் கையாளுதல்.
5) ஒலி பெயர்ப்புச் சொற்களைக் கையாளுதல்.
போன்ற வகைமைப்பாடுகளைக் கொண்டு அமைகின்றன.
இவற்றுள் பிறமொழிச் சொற்களைக் கையாளும் முறையையும் ஒலி பெயர்ப்பு முறையையும் அடியோடு தவிர்க்க வேண்டும் என்று இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் கூறுகிறார். ஒருக்கால் தவிர்க்க இயலாமல் பயன்படுத்த நேரிட்டால், பெயர்ச் சொற்களில் அமைந்த கலைச்சொற்கள் தவிர பிறவற்றை நாம் தமிழிலேயே குறிப்பிட வேண்டும் என்கிறார்.
சில காரணங்களால் சில தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும்போது அடைப்புக் குறிக்குள் அயற் சொல்லைக் குறிக்க வேண்டும். மாறாக, அயற் சொற்களை அப்படியே கையாளுதல் கூடாது. அப்படிக் கையாள நேரிட்டால் அயல் எழுத்துகளை நீக்கி தமிழ் வரி வடிவங்களிலேயே குறிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
கலைச் சொற்கள் வழக்காற்றில் நிலைக்க வேண்டுமானால் அவற்றுக்கு,
1) செறிவு, 2) பொருள் விளக்கம், 3) தெளிவு, 4) பாகுபாடு உடைமை, 5) தமிழ் நிலமெங்கும் பயன்படும் பொதுமை ஆகிய பண்புகள் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
இவ்வாறெல்லாம் இருந்தால்தான் கலைச் சொற்கள் பெருகும் என்றும் கூறுகிறார். தமிழ்க் கலைச்சொல்லாக்க வல்லுநர்கள் இவற்றையெல்லாம் மனத்தில் நிறுத்தி கலைச் சொல்லாக்கப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
மூன்றாவதாக உள்ள, “கலைச் சொல்லாக்க நெறிமுறைகள்” என்னும் கட்டுரையில், தமிழ் மொழியில் உருவாக்கப்படும் கலைச் சொற்கள் எவ்வாறு அமைந்துள்ளன? எவ்வாறு அமையவேண்டும்? என்பதுபற்றி சொல்லப்படுகிறது. மொழி பெயர்ப்பாளர்களுக்கு இது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
தமிழ் நாட்டில் தமிழ்மொழி, கல்வி மொழியாக இல்லை. எனவே கலைச் சொற்களின் தேவை குறைந்துள்ளது. கலைச் சொற்கள் என்பவை ஒரு பொருளை விளக்குவனவாக இல்லாமல் சுருங்கிய சொல்லாக அமைய வேண்டும் என இக் கட்டுரை எடுத்துச் செல்லுகிறது.
சுருங்கிய சொல்லாக இல்லாத கலைச் சொற்கள் அதன் பயன்பாட்டை இழக்கின்றன. இவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் தரப்படும் பொருள் விளக்கத்தைத் தமிழில் சொல்வதாக அமைந்துள்ளதே தவிர அப் பொருளை உணர்த்தும் சொல் வடிவை அவை பெறுவதில்லை. அதனால் அச் சொற்களின் பயன்பாடு குறைந்து ஆங்கிலச் சொற்களின் பயன்பாடே மிகுதியாகிறது. ஆகையால் கலைச் சொற்கள் ஏற்றதாகவும் எளிமையானதாகவும் இருக்க வேண்டும் என்றும் இக் கட்டுரை வலியுறுத்துகிறது.
தமிழ் மொழியில் ஏராளமான கலைச் சொற்கள் இருக்கின்றன. அவற்றை உணராமல் அயற் சொற்களுக்கான கலைச் சொற்களைத் தேடி நேரத்தை வீணாக்குகிறோம். அதனைத் தவிர்க்க வேண்டும். அந் நேரங்களில் பின்வரும் கருத்துகளை நாம் நமது சிந்தையில் நிறுத்த வேண்டும்.
1) அறிவியல் வளர்ச்சிக்கு மீளாக்கச் சொற்கள் மிகுதியும் வேண்டப்படுகின்றன.
2) ஒரு சொல் நமக்குப் பிடித்துள்ளதா இல்லையா என்பது முதன்மையானதல்ல. அச்சொல் ஏற்றவாறு பயன்படுத்தக் கூடியதாக உள்ளதா என்பதுதான் முதன்மையானது.
3) எந்தக் கலைச் சொல் பயன்பாட்டில் நிலைத்துவிட்டதோ அந்தக் கலைச் சொல்லையே எல்லோரும் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.
4) சில சொற்கள் காலப் போக்கில் மாறிக் கொண்டே வரும். சான்றாக, பொருளியல் என்னும் சொல் முதலில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுப் பின்னர் செல்வ நூல் என்று சொல்லப்பட்டது. பின்னர் பொருளாதாரம் எனப்பட்டது. இப்போது அது பொருளியல் என அழைக்கப்படுகிறது.
5) அறியாமையால் சில சொற்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று தானி என்பது. ஆட்டோ என்பதற்கு தானி என்பது பொருள் அல்ல. ஆகவே இது தவறு.
6) பயன்பாட்டுக்கு வராத எந்த ஒரு கலைச் சொல்லும் நிலைத்து நிற்காது. சொல்லைப் புரிந்து கொண்டு படைக்காமல் சொல்லுக்குச் சொல் என்ற நேர் முறையில் ஆக்கப்படும் கலைச் சொற்களும் தமிழ்ச் சொற்களைக் கையாளாமல் ஒலி பெயர்ப்புச் சொற்களாக மூலச் சொற்களைக் கையாளுவதும் கலைச் சொல் பெருக்கத்திற்குத் தடையாக உள்ளன.
7) ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்க் கலைச் சொற்களைத் தேடாமல் தமிழ்ச் சொற்களுக்கு ஏற்ற கலைச் சொற்களை ஆங்கிலத்தில் தேட வேண்டும்.
8) கலைச் சொற்கள் நீண்ட தொடராக இல்லாமல் சுருக்கமான சொல்லாக அமைய வேண்டும்.
9) சொல், இடத்திற்கு ஏற்ற பொருளைத் தரும் என்பதை அறிந்துப் பயன்படுத்த வேண்டும்.
10) தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கும் அயற் சொற்களின் மீது நாட்டம் செல்லுகிறது. இது கூடாது.
11) நமக்குச் சொற் களஞ்சியமும் வேண்டும், அதே நேரம் சொற்றொடர் பொருள் தொடர் களஞ்சியமும் வேண்டும்.
12) ஒரு சொல் ஒரு பொருள் என்ற முறையில் கலைச் சொற்கள் அமைய வேண்டும். அப்போதுதான் பொருள் குழப்பம், பொருள் மயக்கம், பொருள் ஐயம் ஆகியவை ஏற்படாது.
கலைச் சொல்லாக்கத்தில் ஈடுபடுபவர்கள் இந்தக் கட்டுரையாளர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் சொல்லுவதை நெஞ்சில் நிறுத்த வேண்டும்:
மூலச் சொல்லுக்கு நேரான மொழிபெயர்ப்புச் சொல்லை ஆக்கக் கூடாது. மாறாக, மூலப் பொருளுக்கு ஏற்ற மொழிபெயர்ப்புச் சொல்லையே ஆக்க வேண்டும்.
அச்சொல் செறிவாயும் செவ்விதாயும் இருத்தல் வேண்டும்.
பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு ஆக்க வேண்டும்.
நன்னூலார் கூறும் பத்துக் குற்றங்கள் இல்லாதிருத்தலும்,
பத்து அழகுகளில் ஒன்றாய் அமைவதும் நலம்.
அயற் சொல் கலப்பை அறவே நீக்க வேண்டும்.
இலக்கியங்களில் இருந்தே கலைச் சொற்களைத் தெரிவு செய்ய வேண்டும். இலக்கியங்களில் இருந்து கலைச் சொற்களை மீளாக்கம் செய்ய வேண்டும்.
சிறந்த கலைச் சொற்களே சிறந்த நூலுக்கு அடிப்படை.
(தொடரும்)
நன்றி : தமிழணங்கு, மலர் 1: இதழ் 3, பக்கங்கள் 39-49
திறனாய்வாளர்: முனைவர் புதேரி தானப்பன், புது தில்லி
நூற்பெயர்: “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்“
ஆசிரியர்: ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன். பேச: 9884481652.
வெளியீடு: மலர்க்கொடி வெளியீட்டகம், சென்னை. பேச: 7401292612.
பக்கங்கள்: 124; விலை உரூ. 120/-
Comments
Post a Comment