மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 69
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 25
பொன்காட்டும் நிறம்காட்டிப்
பூக்காட்டும் விழிகாட்டிப்
பண்காட்டும் மொழிகாட்டிப்
பையவே நடைகாட்டி
மின்காட்டும் இடைகாட்டி
முகில்காட்டும் குழல்காட்டி
நன்பாட்டுப் பொருள் நயம்போல்
நகைக்கின்றாய் நகைக்கின்றாய்
பண்பாட்டுப் பெருமையெலாம்
பயன்காட்டி நகைக்கின்றாய்.
— அரவிந்தன்
கோடைக்கானலிலேயே அழகும், அமைதியும் நிறைந்த பகுதி குறிஞ்சி ஆண்டவர் கோயில் மலைதான். குறிஞ்சியாண்டவர் கோவிலின் பின்புறமிருந்து பார்த்தால் பழநி மலையும், ஊரும் மிகத் தெளிவாகத் தெரியும். நெடுந்தொலைவு வரை பச்சை வெல்வெட்டு துணியைத் தாறுமாறாக மடித்துக் குவித்திருப்பது போல் மலைகள் தெரியும் காட்சியே மனத்தை வளப்படுத்தும். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் மலைகளே வாய் திறந்து சிரித்துக் கொண்டிருப்பது போல் பூக்கள் பூத்திருக்கும். அந்த அழகிய சூழலில் பசும்புல் நிறைத்துப் படர்ந்த ஒரு மேட்டின் மேல் அரவிந்தனும் பூரணியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து மரத்தில் இரண்டு பச்சைக் கிளிகள் சிறிது தொலைவு இணையாகப் பறப்பதும், கிளைக்குத் திரும்புவதுமாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. எங்கோ மிக அருகிலிருந்து சற்றைக்கொருமுறை குயில் கூவியது. அந்தக் குயில் ஒலி ஒருமுறை கேட்டு இன்னொரு முறை ஒலிக்குமுன் இருந்த இடைவெளி விநாடிகள் அதன் இனிமையை உணர்வதற்கென்றே கேட்போருக்குக் கொடுத்த அவகாசம் போல் அழகாயிருந்தது. செம்பொன் மேனிச் சிறுகுழந்தைகள் அவசரமாக ஓடி வந்து கள்ளச் சிரிப்போடு முகத்தை நீட்டிவிட்டுப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு ஓடிவிடுகிற மாதிரி, பெரிய பெரிய (உ)ரோசாச் செடிகள் தத்தம் பூக்கள் காற்றில் முன்புறம் ஆடிக் கவிழ்வதும், விரைவாகப் பின்னுக்கு நகர்வதுமாகக் காட்சியளித்தன. வான விரிப்பும், மலைப்பரப்பும், திசைகளும், எங்கும், எல்லாம் அழகு மயமாயிருந்தன. ஊழியில் அழிந்து அமிழ்ந்து மீண்டும் மேலெழுந்து மலர்ந்த புது யுகத்துப் புவனம்போல் எங்கும் அழகாயிருந்தது. தனிமையின் இனிமையில் தோய்ந்த அழகு அது!
எதையோ இரண்டாம் முறையாக நினைத்துக் கொண்டு சிரிக்கிறவன் போல் அரவிந்தன் சிரித்தான். அந்தச் சிரிப்பைப் பூரணி கண்டுகொண்டாள்.
“எதற்காகச் சிரிக்கிறீர்கள் இப்போது?” என்று கேட்டாள் பூரணி.
“ஒன்றுமில்லை, பூரணி! சற்று முன் நீ சொல்லியதை மறுபடியும் நினைத்துக் கொண்டேன், சிரிப்பு வந்தது. ‘நாம் இருவரும் சேர்ந்து செல்லும்போதெல்லாம் உயரமான இடத்தை நோக்கியே ஏறிச் செல்கிறோம்’ என்று நீ என்ன அர்த்தத்தில் கூறினாய்?”
“ஏன், நீங்கள் என்ன அர்த்தத்தைப் புரிந்து கொண்டீர்கள், அரவிந்தன்?”
“எனக்கு என்னவோ இப்படித் தோன்றுகிறது பூரணி! உயரத்தில் ஏறி மேற்செல்லும் இந்தப் போட்டியில் நீதான் வெற்றி பெறுவாய். நான் என்றாவது ஒருநாள் களைப்படைந்து கீழேயே நின்று விடும்படி நேரிடலாம். அப்படி நேரிட்டால் அதற்காக நீ வருத்தப்படக்கூடாது” என்று அவன் சிரித்தபடியே இந்தச் சொற்களைக் கூற முயன்றாலும், கூறும்போது ஏதோ ஒரு விதமான உணர்வின் அழுத்தம் அவனையறியாமலே, அவன் உணர்வு இல்லாமலே அந்த சொற்களில் கலந்து விட்டது. எப்படிக் கலந்தது, ஏன் கலந்தது, எதற்காகக் கலந்தது என்பதை அவனே விளங்கிக் கொள்ள இயலாமல் தவித்தான். பூரணி அவனுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். இமையாமல் பார்த்தாள். மெல்லச் சிரித்துக் கொண்டே பார்த்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவன் தன் சட்டைப் பையிலிருந்து சிறிய நோட்டுப் புத்தகம் ஒன்றை எடுத்து ஏதோ எழுதத் தொடங்கினான்.
“ஏன் இப்படித் தோன்றக் கூடாதோ? உயரத்தில் ஏறி மேற்செல்லும் இந்தப் போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள். நான் தான் என்றாவது ஒருநாள் களைப்படைந்து கீழேயே நின்று விடுவேன்” என்று கூறிக் கொண்டே அவன் எழுதிக் கொண்டிருந்த நோட்டுப் புத்தகத்தைச் செல்லமாக இழுத்துப் பறித்தாள் பூரணி. அதை அவள் பிரித்துப் படித்து விடாமல் திரும்பப் பறிக்க முயன்றான் அரவிந்தன். முடியவில்லை. மான் துள்ளி எழுந்து பாய்வது போல் எழுந்து ஓடி விட்டாள் பூரணி. சிறிது நேரத்துக்கு முன் அவள் தன்னை நோக்கிச் சிரித்த சிரிப்பின் அழகை ஒரு கவிதையாக உருவாக்கி அந்த நோட்டுப் புத்தகத்தில் அவசரமாய் எழுதியிருந்தான் அரவிந்தன். அதை அவளே படித்து விடலாகாதே என்பதுதான் அவன் கூச்சத்துக்குக் காரணம். ஆனால் அவள் அதைப் பிரித்துப் படித்தே விட்டாள். ‘பொன் காட்டும் நிறம் காட்டிப் பூக்காட்டும் வழிகாட்டி நகைக்கின்றாய்’ என்ற அந்தக் கவிதை அவள் உள்ளத்தைக் கவர்ந்தது. கற்கண்டை வாயிலிட்டுக் கொண்டு சுவைக்கிற மாதிரி வாய் இனிக்க, நெஞ்சு இனிக்க அவள் அந்த வரிகளைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள். குறும்பு நகையோடு அவனை நோக்கிக் கேட்டாள்.
“உங்களோடு பழகுவதே பெரிய ஆபத்தான காரியமாக இருக்கும் போலிருக்கிறதே! பேசினால், சிரித்தால், நின்றால் நடந்தால் எல்லாவற்றையும் கவிதையாக எழுதி விடுகிறீர்களே?”
“என்ன செய்வது? நீயே ஒரு நடமாடும் கவிதையாக இருக்கிறாயே பூரணி!” என்றான் அவன்.
“அது சரி, ‘பண்பாட்டுப் பெருமையெல்லாம் பயன்காட்டி நகைக்கின்றாய்’ என்று எழுதியிருக்கிறீர்களே, அதற்கு என்ன பொருள்?” – தலையைச் சற்றே சாய்த்து விழிகளை அகலத் திறந்து நோக்கி மெல்லிய நாணம் திகழ அவனைப் பார்த்தும் பாராமலும் கேட்டாள் பூரணி. அவனும் புன்னகையோடு மறுமொழி கூறினான். “உன்னுடைய சிரிப்பிலும் பார்வையிலும் மிகப் பெரிதாக, மிகத் தூய்மையாக ஏதோ ஓர் ஆற்றல் தென்படுகிறது. அந்த ஆற்றலின் உன்னதத் தன்மையை எப்படிச் சொல்லால் வெளியிடுவதென்பது எனக்குத் தெரியவில்லை. அதைத்தான் அப்படிக் கூற முயன்றிருக்கிறேன்.”
அருகில் நெருங்கிவந்து நோட்டுப் புத்தகத்தை அவனிடம் கொடுத்தாள். அவன் அதை வாங்கிக் கொள்ளாமல் தனக்கு மிக அருகில் நீண்டிருக்கும் அவளுடைய வலக் கையைச் சிரித்துக் கொண்டே பார்த்தான் அரவிந்தன். பவழ மல்லிகைப் பூவின் காம்பு போல் மருதாணிச் சிவப்பேறிய உள்ளங்கையையும் நகங்களையும், நீண்ட நளின மெல்லிய விரல்களையும் புதுமையாய் அப்போதுதான் பார்க்கிறவனைப் போல் பார்த்தான் அவன்.
“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?”
“பெண்ணின் விரல்களில் நளினம் இருக்கிறது. அதை மின்னலில் செய்திருக்கிறார்கள்” – என்று கூறிக் கொண்டே அவளிடமிருந்து நோட்டுப் புத்தகத்தை வாங்கிக் கொண்டான் அரவிந்தன்.
“ஆண்களின் மனத்தில் கொடுமை இருக்கிறது. அதைக் கொடுமையால் செய்திருக்கிறார்கள். அப்படியில்லாவிட்டால் என்னைக் கேட்காமல், என் கருத்தைத் தெரிந்து கொள்ளாமல், ‘என்னைத் தேர்தலில் நிற்பதற்குச் சம்மதிக்கச் செய்வதாக’ நீங்கள் மீனாட்சிசுந்தரத்தினிடம் வாக்குக் கொடுப்பீர்களா?”
“நேற்று வரை அவருக்கு அப்படி வாக்களித்ததை எண்ணி நானே நொந்து கொண்டிருந்தேன் பூரணி! ஆனால் நேற்று மாலையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என் மனத்தையே வேறு விதமாக நினைக்கச் செய்துவிட்டது. பிடிவாதமாக நீ தேர்தலில் நிற்கவேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.”
“நேற்று மாலையில் என்ன நடந்தது?” என்று கேட்டாள் பூரணி.
பருமாக்காரரோடு கிராமத்திலிருந்து புறப்பட்டது தொடங்கி அவருடைய மாளிகையில் தான் அடைந்த அனுபவங்கள் வரை எல்லாவற்றையும் பூரணிக்குச் சொன்னான் அரவிந்தன். வியப்போடு எல்லாவற்றையும் கேட்டாள் பூரணி.
“மனிதர்கள் ஏழைமையின் காரணமாகத்தான் தீயவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருப்பதாகச் சொல்லுகிறார்களே! இந்தப் பருமாக்காரர் ஏன் இப்படிச் சூழ்ச்சியும், கெடுதலுமாக வாழ்கிறார்? இவருக்கு என்ன ஏழைமை? இன்று இந்தத் தேசத்தைச் சூழ்ந்து நிற்கும் அத்தனை பிரச்சனைகளையும் வசதியுள்ளவர்கள்தாம் உண்டாக்கி வளர்த்திருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது பூரணி! ஏழைகள் அப்பாவிகள், வயிற்றுக்குப் போராடுவதற்கே அவர்களுக்கு நேரமில்லை. சூழ்ச்சிகளையும், துரோகங்களையும் நினைக்க அவர்களுக்கு நேரம் ஏது?”
“கீழான மனமும், கீழான எண்ணங்களும் கொண்டவர்கள் எத்தனை உயர்ந்த மேலான சூழ்நிலைகளிலிருந்தாலும் பழைய கீழ்மை வாசனைதான் இருக்கும். இராமகிருட்டிண பரமகம்சரின் அற்புதமான உபகதை ஒன்று உண்டு. அதை நீங்கள் படித்திருக்கிறீர்களோ, இல்லையோ சொல்லட்டுமா அரவிந்தன்?”
“சொல்லேன்! கேட்கிறேன்.”
(தொடரும்)
தீபம் நா.பார்த்தசாரதி
குறிஞ்சி மலர்
Comments
Post a Comment