ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 8
அகரமுதல * * * இலக்குவனார் திருவள்ளுவன் 01 October 2022 No Comment (ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 7 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 8 மருத நிலம் தொடர்ச்சி சமுத்திரம் சில ஊர்ப் பெயர்களில் சமுத்திரம் என்ற வடசொல் இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டு மன்னரும் செல்வரும் உண்டாக்கிய பெரிய ஏரிகள், கடல் என்றும், சமுத்திரம் என்றும், வாரிதி என்றும் புனைந்துரைக்கப் பெற்றன. 77 இராசராச சோழன் வெட்டிய பெருங்குளம் ஒன்று சோழ சமுத்திரம் என்று சாசனத்திற் குறிக்கப் படுகின்றது. 78 எனவே, தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களில் உள்ள சமுத்திரம் என்னும் சொல், பெரும்பாலும் ஏரியின் பெயரென்று கொள்ளலாகும். நெல்லை நாட்டில் அம்பா சமுத்திரம் முதலிய பல ஊர்கள் உள்ளன. அம்பாசமுத்திரத்தின் ஆதிப்பெயர் இளங்கோக்குடி என்பது. 79 அவ்வூரின் அருகே எழுந்த குளம் அம்பாள் சமுத்திரம் என்று பெயர் பெற்றது. அப்பெயர் சிதைந்து அம்பாசமுத்திரம் ஆயிற்று. ...