காட்சிப்பொருளல்ல நீ!- முனைவர்.கிருட்டிணதிலகா
காட்சிப்பொருளல்ல நீ!
ஆவலாய்ச் சுற்றி
வரும் வண்டுகள்.
பெண்ணே!
காவலாய் உரோசாவைச்
சுற்றியெழும் முட்களாய்
பாவையே! பார்த்திடு!
பதம் பார்த்திடு!
ஆவியில் வீரம் விளையப் பூத்திரு!
பாதகம் செய்பவரை
மோதி மிதித்து விடு!
காதகர் பேசிடும்
சாதகப் பேச்சுகளைத் தீயிலிடு!
மாதர்தம்மை இழிவுசெய்யும்
மடமையைக் கொளுத்தி விடு!
ஆதவனாய் ஆர்த்தெழு!
வேதனையை ஒதுக்கிவிடு!
பாரதம் கொண்டதொரு
பாரம்பரியம் போற்றிவிடு!
வேரதாய் விளங்கும்
வேலியாம் அடக்கம் காத்திடு!
போடுகின்ற உடைகண்டு
போற்றவேண்டும் யாவரும்!
பீடுநடை தான்கொண்டால்
போற்றிடுவார் புலவரும்!
நல்லவர்யார் தீயவர்யார்
நன்குணர வேண்டும்!
நம்மைநாமே பாதுகாக்கத்
தெரிந்து கொள்ளவேண்டும்!
உள்ளத்திலே கள்ளம்கொண்டு
வலைவிரிப்பார் சிலபேர்!
கண்களாலே கவர்ச்சிதேடி
கடைவிரிப்பார் பலபேர்!
உடையழகு நடையழகு என
உளறிக்கொண்டே பலரும்
உனை வீழ்த்த காத்திருக்கும்
வல்லூறாய்ச் சிலரும். . .
மடை மாற்றும் மடையர்கள்
அடையாளம் கண்டு. . .
தடை உடைத்து எழுவாய்!
படை கொண்டு அழிப்பாய்.
உறுதிகொண்ட நெஞ்சம்கொண்டு
உலகை வெல்ல வாராய்!
அறுதியிட்டுப் பேசவேண்டும்!
ஆணவத்தை அழித்திடவே வாராய்!
வஞ்சனையைத் தானறிந்து
வஞ்சிமகள் வாழவேண்டும்!
கொஞ்சிப்பேசும் வஞ்சகரும்
அஞ்சியோட வேண்டும்!
அந்நியரை வறுத்தெடுத்த
ஆரணங்கு வேலுநாச்சி நீயே!
அகண்ட வானில் ஆர்த்தெழுந்த
கல்பனாசாவுலாவும் நீயே!
அரசியலில் அரிமாவாம்
அன்னை இந்திரா நீயே!
அரவணைக்கும் கருணையில்
அன்னை தெரசாவும் நீயே!
ஆற்றலில் அடலேறு நீயே!
அச்சம் கொள்ளலாகாது!
கற்றிடும் கலைகள்
காத்திடும் உன்னை!
அஞ்சா நெஞ்சமே
அனைவருக்கும் வேண்டும்!
பஞ்சாய்ப் பறக்கும்
பாதகச் சோதனைகள்!
பெண்ணே! நீயும்
பெருமைகொள்!
அன்னமாய்ப் பாலுண்ணும்
அறிவைக் கற்றுக்கொள்!
சாதிக்கும் வல்லமை
கொண்டவள் நீயே!
பாதிக்கும் காரணிகள்
சோதிக்காதுனை தொடர்ந்து செல்!
பெண்ணே பெருமையின் தாயகம் நீ
பேருழைப்பில் நாயகம் நீ!
காட்சிப்பொருளல்ல நீ!
ஆட்சி செய்யும் ஆளுமை நீ!
மாட்சிமை காத்திட
முன்வந்திடு நீ!
Comments
Post a Comment