அகல் விளக்கு – மு.வரதராசனார்: 58
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 57. தொடர்ச்சி)
அகல் விளக்கு
அத்தியாயம் 24
ஏதாவது ஒரு வேலை வேண்டும் வேண்டும் என்று மாலன் அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். நண்பராகிய நகர்மன்றத் தலைவரிடம் அவனுடைய நிலையை எடுத்துரைத்தேன். உள்ளூரிலே ஒன்றும் இல்லையே என்று அவர் வருந்தினார். அவருடைய பொதுத் தொண்டு காரணமாகச் சென்னையில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்த காரணத்தால் அங்காவது ஒரு வேலை தேடித் தருமாறு வேண்டிக் கொண்டேன்.
அவ்வாறே அவர் அடுத்த முறை சென்னைக்குச் சென்றபோது இதே கூட்டுறவுத் துறையில் நூறு ரூபாய் வருவாயில் ஆய்வாளர் தொழில் பெற்றுத் தந்தார். மாலனுக்கு அதுவும் பெரிய மனக்குறையாக இருந்தது. நான் முந்நூறு ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற, என்னுடன் என்னைப்போல் படித்த ஒருவன் நூறு ரூபாயளவில் நின்றது யாருக்குத்தான் வருத்தமாக இருக்காது? ஆனாலும் என்ன செய்வது? வேறு வழி இல்லையே என்று அத்தொழிலில் கொஞ்ச காலம் மனம் பொருந்தி இருக்குமாறு மாலனுக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.
சென்னைக்குப் போகவேண்டிய வாய்ப்பு எனக்கு ஒரு முறை நேர்ந்தது. தொழில் துறையின் தொடர்பாகவே போயிருந்தேன். முன்னதாகவே மாலனுக்கு எழுதியிருந்தேன். அவனுடைய வீட்டுக்கே போயிருந்தேன். திருமணத்துக்குப் பிறகு கற்பகத்தைப் பார்த்தது அப்போதுதான். “வாங்க” என்று அவள் வரவேற்றாள். அவளுடைய முகத்தில் மலர்ச்சி இருந்தபோதிலும் சிறுமியாக இருந்தபோது கண்ட துடிதுடிப்பு இல்லை. மாலன் தன் குழந்தையைக் கொண்டு வந்து என் கையில் தந்தான்.
அன்போடு பெற்றுத் தோள்மேல் ஏந்திக்கொண்டு “என்ன பெயர்?” என்றேன்.
“எழுதியிருந்தேனே! மறந்துவிட்டாயா! நீ பெரிய உத்தியோகத்தில் இருக்கிறாய். என்னைப் போன்ற ஆட்களை எல்லாம் நினைவில் வைத்திருப்பாயா?” என்றான்.
“அப்படி என்னிடம் சொல்லக்கூடாது. நான் என்றைக்கும் உன் நண்பன். ஏதோ வாய்ப்பு என்று சொல்கிறார்களே! அதன்படி எனக்குப் பெரிய வேலை கிடைத்தது. உனக்குக் கிடைக்கவில்லை. அதற்காக வருத்தப்படாதே.”
“சும்மா சொன்னேன்.”
அவன் அவ்வாறு சொன்னபோதிலும், அந்தச் சொல் அவனுடைய உதட்டிலிருந்து வந்த விளையாட்டுப் பேச்சு அல்ல என்றும், உள்ளத்தில் ஆழ்ந்திருந்த வேக்காட்டிலிருந்தே வந்தது என்றும் எண்ணினேன். “சரி, இவன் பெயரைச் சொல்” என்றேன்.
“திருவாய்மொழி” என்றான்.
“என் தம்பி பொய்யாமொழி. இவன் திருவாய்மொழியா? நல்ல பெயர்தான்” என்று சொல்லிக்கொண்டே கற்பகத்தின் முகத்தைப் பார்த்தேன். அவள் புன்சிரிப்போடு நின்று கொண்டிருந்தாள்.
“சொந்த மாமா இப்படி எடுத்துப் பழகாவிட்டாலும் இந்த மாமாவையாவது பாரப்பா” என்றாள் கற்பகம்.
“நான் இந்தப் பையனுக்கு மாமாவா?” என்றேன்.
“ஆமாம்” என்று சிரித்தாள் கற்பகம்.
“என்ன மாலா! நான் உனக்குச் சம்பந்தி ஆகிவிட்டேன். இனிமேல் அண்ணன் தம்பி முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றேன்.
“நண்பர்களாக இருந்தால் அதில் ஒரு நன்மை இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் முறையை மாற்றிக் கொள்ளலாம். பெண் இருந்தால் மாமன் மைத்துனன். இல்லாவிட்டால் அண்ணன் தம்பி. உறவாக இருந்தால் இப்படி மாற்றிக் கொள்ளும் உரிமை இல்லையே” என்றான் மாலன்.
“மாமாவுக்கு எப்போது பெண் பிறக்கப்போகிறது என்று பார்க்கிறான்” என்றாள் கற்பகம்.
“இன்னும் நான்கு ஐந்து மாதத்தில்” என்றேன். மாலன் சிரிக்க, நானும் சிரித்தேன்.
“இப்போதே பணம் சேர்த்து வைத்துக்கொள். இல்லையானால் நல்ல மாப்பிள்ளையாகக் கிடைக்க மாட்டான்” என்றான்.
என் தங்கையின் வாழ்க்கை என் நினைவுக்கு வந்தது. உடனே அதைப் பொருட்படுத்தாமல், “இந்தப் பையனுமா அப்படிப் பணம் கேட்பான்?” என்றேன். குழந்தை திருவாய்மொழி அப்போது தன் பொக்கை வாய் திறந்து முழுச் சிரிப்பு சிரித்தான். அந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. எல்லோருமே குழந்தைகளாய் மாறிச் சிரித்தோம்.
மறுநாள் சென்னைக் கடமையை முடித்துக்கொண்டு ஊர்க்குப் புறப்பட்டேன். மாலன் ‘இரயிலடி’க்கு வந்திருந்தான். அவனுக்குத் தேறுதல் சொன்னேன். “இங்கே இருந்தபடியே வேறு நல்ல தொழில் கிடைத்தால் மாறிவிடலாம்” என்றேன்.
“எங்கே கிடைக்கிறது? வர வர வேலையில்லாத் திண்டாட்டம் வளர்கிறது. படிக்காதவர்கள் நன்றாகப் பிழைக்கிறார்கள். பணம் தேட அவர்களுக்கு வழி தெரிகிறது. படித்தவர்களுக்குத் தெரியவில்லை. எங்கள் ஊரில் நெல் ஆலை வைத்த ஒருவர் இன்றைக்குப் பெரிய செல்வராகி விட்டார். என்னோடு உயர்நிலைப் பள்ளியில் எட்டாவது வரையில் படித்தவன் ‘இலாரி’ வைத்துப் பணக்காரனாகி விட்டான். என்னை இந்த நூறு உரூபாய்ச் சம்பளத்துக்கு அழைக்கிறான். பேசாமல் இந்த வேலையை உதறிவிட்டு ஒரு நெல் ஆலையாவது ‘இலாரி’யாவது வைத்து நடத்தலாமா என்று எண்ணுகிறேன். அதைப்பற்றித்தான் இனி முயற்சி செய்ய வேண்டும்” என்றான்.
“அவசரப்படாதே நன்றாக எண்ணிப்பார். நமக்குப் பழக்கம் இல்லாத துறைகள்.”
“படிக்காதவர்கள் செய்யும்போது படித்தவர்கள் செய்யக்கூடாதா?”
“வேண்டா என்றோ கூடாது என்றோ நான் சொல்லவில்லை. எண்ணிப் பார்த்து, ஒரு முறைக்குப் பல முறை எண்ணிப் பார்த்து இறங்கவேண்டும். படித்ததனாலேயே நமக்குத் திறமை இருப்பதாகச் சொல்ல முடியாது. சின்ன பிள்ளைகள் ஒரு நாளில் மிதிவண்டி(‘சைக்கிள்’) விடக் கற்றுக்கொள்கிறார்கள். வளர்ந்த பெரியவர்கள் கற்றுக்கொள்ள ஒரு வாரத்துக்கு மேலும் ஆகிறது.”
என் பேச்சை அவன் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
வீட்டுக்கு வந்த பிறகு கற்பகத்தையும் குழந்தையையும் பார்த்த செய்தியை மனைவியிடம் சொன்னேன். “கற்பகத்தை நான் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு முறை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது” என்றாள்.
ஏழாம் மாதம் வேலூரிலிருந்து அத்தையும் திருமந்திரமும் வந்து சிலநாள் இருந்து மனைவியை அழைத்துச் சென்றார்கள். அப்போதுதான் முதல் முறை பிரிவுத் துன்பத்தை உணர்ந்தேன். மனைவி கண்ணீர் விட்டுக் கலங்கினாள். பக்கத்தில் வேலையாட்கள் இருந்ததையும் மறந்து, நானும் கண்ணீர்விட்டேன். தொடர்வண்டி(இரயில்) நகரும் வரையில் அவள் கலங்கிக்கொண்டே இருந்தாள். அவளுடைய கண்கள் சிவந்திருந்தன. நான் மூச்சுப் பிடித்துக் கொண்டு இருந்தேன். என் உள்ளத்தை அடக்கிக்கொண்டிருந்தது பெரு முயற்சியாக இருந்தது. வீட்டிற்கு வந்து என் அறையில் நுழைந்த பிறகு என் உள்ளத்தை அடக்கு முறையிலிருந்து விட்டேன். நன்றாகக் கண்ணீர் விட்டு அழுதேன். அதன் பிறகு என் செயல் எனக்கே சிறுபிள்ளைத் தன்மையாக இருந்தது.
அடுத்த மாதமே வேலூர்க்குச் சென்று சில நாள் இருந்துவந்தேன். ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையான செய்தி அறிந்தவுடன் மற்றொரு முறை போனேன். அப்போது அம்மாவும் அப்பாவும் அங்கே வந்திருந்தார்கள். குழந்தைக்கு “மாதவி” என்று பெயர் வைத்தார் அப்பா. வந்தவர்களில் சிலர் குழந்தை அப்பனைப்போல் இருப்பதாகச் சொன்னார்கள். சிலர் மூக்கும் விழியும் மட்டும் தாயைப் போல் இருப்பதாகச் சொன்னார்கள். வளர்ந்த பிறகுதான் உண்மை தெரியும் என்று அம்மா தீர்ப்புச் சொல்லிவிட்டார்.
தங்கை தம்பி பாக்கியம் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்று அம்மாவைக் கேட்டேன். அப்போது அவர் சொன்ன ஒரு செய்தி துன்பமாக இருந்தது.
“கற்பகமும் அவளுடைய அப்பாவும் நம் தெருவில்தான் இருக்கிறார்கள். முன் இருந்த அதே வீட்டில் குடியிருக்கிறார்கள். ஊரில் சந்திரனுக்கும் அப்பாவுக்கும் சொத்து வகையில் சச்சரவாம்.”
“அதனால் அவனுடைய அப்பா வந்தது சரி, கற்பகம் ஏன் கணவனை விட்டு வரவேண்டும்.”
“அவன்தான் அனுப்பிவிட்டானாம். சோழசிங்கபுரத்தில் நெல் ஆலை வைக்க வேண்டும் என்று முயற்சியாம். அதற்காக மாமனாரிடம் பணம் கேட்கிறான். நீ போய் உட்கார்ந்து பிடிவாதம் செய்து வாங்கிக் கொண்டுவா என்று அனுப்பிவிட்டான். சந்திரன் மிகக் கெட்டுப் போய்விட்டானாம். கண்டபடி கண்ட பெண்களுக்கும் நோய்க்கும் பணத்தைச் செலவு செய்து சொத்தை அழித்து வருகிறானாம். அவன் இப்படிச் செய்வதைத் தெரிந்துகொண்டு மருமகன் கேட்கிறான். அழியும் சொத்தில் ஒரு பங்கு கொடுத்தால் என்ன என்று மகளும் கேட்கிறாள். ஆனால், மகன் ஒத்து வரவில்லை. வீண் குழப்பம் செய்கிறானாம். அப்பாவால் அந்த ஊரிலேயே இருக்க முடியவில்லையாம். மன அமைதியாவது கிடைக்கும் என்று மகளை அழைத்துக்கொண்டு இங்கே வந்திருக்கிறார். அவர் வேறு என்ன செய்வார்?” என்றார்.
“இருந்தாலும் கற்பகம் வந்திருக்கக் கூடாது” என்றேன்.
Comments
Post a Comment