Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 36

அகரமுதல




(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  35 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர் இயல் 13 தொடர்ச்சி

“விட்டுத் தள்ளுங்கள். கழிசடையாகத் தலையெடுத்திருக்கிறது. எனக்கு இனிமேல் இது புதுக்கவலை” என்று ஏக்கத்தோடு சொன்னாள் அவள். அப்போது முருகானந்தம் மட்டும் தனியாகத் திரும்பி வந்தான். “காசு வைத்துச் சீட்டு ஆடியதற்காகப் பையன்களைப் போலீசு இலாரியில் ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள். நான் போவதற்குள் பையன் கும்பலோடு இலாரியில் ஏறிவிட்டான்” என்று முருகானந்தம் கூறியதும் “அது இருக்கட்டும். காலையில் பையனைக் கவனிக்கலாம். இப்போது வேறு ஒரு காரியத்துக்கு உன் யோசனை தேவை. இந்த அம்மாள் வந்திருக்கிறார்கள் பார்?” என்று முருகானந்தத்தை உட்கார்த்தி வைத்து விவரத்தைக் கூறினான் அரவிந்தன்.


குறிஞ்சி மலர் இயல் 14

“கற்பூரப் பாத்தி கட்டிக் கத்தூரி
எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சி
பொற்பூர உள்ளிதனை விதைத்தாலும்
அதன் குணத்தைப் பொருந்தக்காட்டும்
சொற்பேதையருக்(கு) அறிவு இங் கினிதாக
வருமெனவே சொல்லினாலும்
நற்போதும் வாராது ஆங்கவர்
குணமே மேலாக நடக்குந்தானே”


மதுரை நகரத்து வீதிகளில் தேய்ந்து நள்ளிரவு கொலுவிருக்கும் அந்த நேரத்தில் ஒலிகள் தேயாத ஒரு வீதியில் ஒளிகுன்றா ஓர் அச்சகத்து முன் அறையில் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். திருத்தப் பெற்றவையும், திருத்தப் பெறாதவையுமாக அச்சுப் படிகள் மேசைமேல் தாறுமாறாகக் கிடந்தன. அவை சிதறிக் கிடந்தவிதம் அங்கிருந்தவர்களின் அப்போதைய மனநிலையையே காட்டுவதுபோல் இருந்தது.

அரவிந்தன் கூறிய விவரங்களையெல்லாம் கேட்டுவிட்டு முருகானந்தம் பதில் சொல்லாமல் இருந்தான். அவன் முகக் குறிப்புத் தீவிரமான சிந்தனையைக் காட்டிற்று. எல்லாவற்றையும் இழந்து பறிகொடுத்துவிட்டாற்போல் சோர்ந்து உட்கார்ந்திருந்த மங்களேசுவரி அம்மாள் பூரணியின் முகத்தைப் பார்த்தாள். பூரணி அரவிந்தனைப் பார்த்தாள். அரவிந்தன் முருகானந்தத்தைப் பார்த்தான்.

“முருகானந்தம்! சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன வழி? பூரணியும் இந்த அம்மாளும் நம்மை நம்பிக்கொண்டுதானே வந்திருக்கிறார்கள். ஏதாவது செய்ய வேண்டாமா? உனக்கு இந்த அம்மாளின் மனநிலையைப் புரிந்து கொள்கிற வாய்ப்பு ஏற்பட்டும் இப்படி ஒரு வழியும் சொல்லாமல் இருக்கிறாயே? சிறு பையன் காசு திருடியதையும் சீட்டு விளையாடியதையும் காலிக் கும்பலோடு சேர்ந்து கொண்டு திரிவதையும் இன்று கண்டிக்காமல் இன்னும் ஒரு மாதம் கழித்துக் கண்டித்து வழிக்குக் கொண்டு வந்தாலும், கெட்டுப்போவது ஒன்றுமில்லை. ஆனால் வயது வந்த ஒரு பெண், திருமணமாகாதவள் தனியாக யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து கிளம்பிப் போனதென்பது எத்தனை பெரிய கொடுமை. பெற்ற மனம் என்ன பாடுபடும் முருகானந்தம்?”

“எல்லாம் புரிகிறது அரவிந்தன். ஆனால் இந்த நேரத்துக்கு மேல் எங்கே போய் என்ன செய்ய முடியும்? நடந்தது வெளியில் தெரியவிடாமல் பெண்ணைக் கண்டுபிடித்து வீடு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். கல்லூரியில் படிக்கிற பெண் என்கிறார்கள். யாரும் ஏமாற்றி அழைத்துக் கொண்டு போயிருக்க முடியாது. விவரம் தெரிந்து வேண்டுமென்று தானாகவே போயிருப்பதுதான் சாத்தியம். அப்படியானால் எந்தக் காரணத்துக்காக யாரோடு போயிருக்கலாமென்று தெரிந்து கொள்ள வேண்டும். தேடிப் பார்க்க கிளம்புவதற்கு முன் காணாமல் போயிருக்கும் பெண்ணின் பழக்க வழக்கங்களைப் பற்றி இந்த அம்மாளிடம் நாம் நிறையக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் ஒன்றையும் விளங்கிக் கொள்ள இயலாது. எனக்குக் கொஞ்சம் சிந்திக்க நேரம் கொடு. மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகப்போகிறது. பெண்ணின் படத்தை வாங்கிக் கொண்டு இவர்களை வீட்டுக்கு அனுப்பு. கவலையில்லாமல் கூடியவரையில் நிம்மதியாக வீட்டுக்குப் போய் இருக்கச் சொல்லு. என்னால் முடியுமானால் இந்த அம்மாளுடைய பெண் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து சேர்த்துவிடுவேன். உதவி செய்ய நான் தயங்கவில்லை. அதை வகையாகச் செய்ய வேண்டும் என்று தான் தயங்குகிறேன். அவசரப்பட்டு எதையாவது செய்து அந்தப் பெண் ஓடிப்போய் விட்டாளாமே என்று ஊரெல்லாம் அவப்பெயர் பரவும்படி ஆகிவிடக் கூடாது” என்று முருகானந்தம் நிதானமாகக் கூறிய விவரங்கள் எல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்கவையாகத்தான் இருந்தன. பூரணி, மங்களேசுவரி அம்மாளிடம் இருந்து வசந்தாவின் புகைப்படத்தை வாங்கி அதன் பின்புறமே தேவையான விவரங்களையும் அடையாளங்களையும் குறித்து அரவிந்தனிடம் கொடுத்தாள். அவன் அதை வாங்கி மேசையின் இழுப்பறையில் பத்திரமாக வைத்தான்.

“அம்மா நீங்களும் என்னோடு திருப்பரங்குன்றம் வந்துவிடுங்கள். உங்கள் மனநிலை சரியில்லை. கவலைகளால் குழம்பியிருக்கிறீர்கள். உங்களை இப்போது வீட்டுக்குத் தனியாக அனுப்ப எனக்குப் பயமாயிருக்கிறது” என்று அந்த அம்மாளையும் தன்னோடு வருமாறு அழைத்தாள் பூரணி. அதற்கு அந்த அம்மாள் இணங்கவில்லை. “காய்ச்சல் உடம்போடு தலைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளுமுன் உன்னை இவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு வந்தது போதாதா? என் தலைவிதி; எனக்குப் பெண்ணாகப் பிறந்தவள் இப்படிப் புத்திக்கெட்டுப் போனால் அதற்கு நீங்களெல்லாம் என்ன செய்வீர்கள்; இன்னும் இது போதாதென்று உன் வீட்டில் வேறு வந்து உன் தலையில் என் கவலையையும் சுமக்க வைக்க வேண்டுமென்கிறாயா? என்னைப் பற்றி உனக்குப் பயமே வேண்டாம் பூரணி! இந்த அசட்டுப் பெண்ணுக்காக இசகு பிசகாக நான் எதுவும் செய்து கொண்டு விடமாட்டேன். அன்றொரு நாள் நீ என்னை முதன்முதலாகச் சந்தித்த போது பெண்கள் மாறுபட்ட சூழ்நிலைகளிலும் பழகி இன்றைய நவீன நாகரிகங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வாதாடினேன். நீ ஒப்புக்கொள்ளவில்லை. அந்தக் கருத்தை கடைசி வரை வன்மையாக மறுத்தாய். அதன் உண்மை இன்று எனக்குப் புரிகிறது பூரணி.”

“பழைய கதையை எல்லாம் எதற்கம்மா இப்போது கிளப்புகிறீர்கள்? நடக்க வேண்டியதைக் கவனிக்கலாம். உங்களுக்கு ஆறுதலாக இருக்குமே என்பதற்காகத்தான் என்னோடு வருமாறு அழைக்கிறேன்.”

“அப்படிச் செய்வதற்கில்லை பூரணி! செல்லத்தை வீட்டில் தனியாக விட்டிருக்கிறேன். சமையற்காரி துணைக்குப் படுத்துக் கொண்டாளோ இல்லையோ? நேரமானாலும் பரவாயில்லை. உன்னை வீட்டில் கொண்டுபோய் விட்ட பின் நான் திரும்பி விடுகிறேன்” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள் மங்களேசுவரி அம்மாள். தங்கை மங்கையர்க்கரசியையும், தம்பி சம்பந்தனையும், கமலாவின் தாயிடம் சொல்லி, அவர்கள் வீட்டில் படுக்கச் செய்துவிட்டுத் தன் வீட்டைப் பூட்டிக் கொண்டு வந்திருந்தாள் பூரணி. இனி இந்நேரத்துக்கு மேல் திருப்பரங்குன்றம் போனால் கமலாவின் வீட்டுக்குப் போய்க் குழந்தைகளை எழுப்பித் தன் வீட்டுக்கு அழைத்துப் போக முடியாது. இரண்டுங்கெட்ட நேரத்தில் அவர்கள் வீட்டில் போய்க் கதவைத் தட்டித் தூக்கத்தைக் கெடுப்பது நன்றாக இராது. அவள் மட்டும் தனியாக வீட்டில் போய்ப் படுத்துக் கொள்வதும் இயலாது. அந்த அம்மாளைத் திருப்பரங்குன்றத்துக்கு அழைப்பதற்குப் பதிலாகத் தானே அந்த அம்மாளோடு மதுரையில் தங்கிவிட்டால் என்ன என்று நினைத்துத் தயங்கியது பூரணியின் உள்ளம்.

“என்னைக் கொண்டு போய்விடுகிற சிரமம் உங்களுக்கு வேண்டாம் அம்மா. இவ்வளவு நாழிகைக்கு மேல் நான் அங்கே போய் என்ன செய்யப்போகிறேன்? உங்களோடு உங்கள் வீட்டிலேயே இருந்துவிடுகிறேன்” என்று பூரணி தன் விருப்பத்தை வெளியிட்டபோது மங்களேசுவரி அம்மாள் இரட்டை மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டாள். அவர்கள் காரில் ஏறிக்கொண்டனர். வழியனுப்புவதற்காக நிற்பது போல் அரவிந்தனும் முருகானந்தமும் அச்சகத்து வாயிற்படிக்குக் கீழே நடைபாதை மேடையில் கார் அருகே நின்றனர். கார் புறப்பட இருந்தபோது முருகானந்தம் மிக அருகில் நெருங்கி “பூரணியக்கா நாளைக்குக் காலையில் நானும் அரவிந்தனும் இந்த அம்மா வீட்டுக்கு வருகிறோம். மேலும் சில விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பதற்றமடையாமல் இருக்கச் சொல்லுங்கள். எங்களால் ஆனதைச் செய்கிறோம். அநேகமாக நாளைக் காலையில் நாங்கள் வரும்போதே உங்கள் தம்பியையும் தேடிப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து விடுவோமென்று நினைக்கிறேன். வருத்தப்படாதீர்கள். தைரியமாக இருங்கள்” என்றான். அவன் கூறியதைக் கேட்ட மங்களேசுவரி அம்மாள், “இதென்ன பூரணி? உன் தம்பியைப் பற்றி இவர் என்னவோ சொல்லுகிறாரே, அவன் எங்கே போய்விட்டான்?” என்று திகைப்போடு வியந்து வினவினாள். அந்த அம்மாள் அகாலத்தில் தன்னைத் தேடிக் கொண்டு திருப்பரங்குன்றம் வந்து வசந்தா காணாமற் போய் விட்ட செய்தியைத் தெரிவித்தபோது தன் தம்பி திருநாவுக்கரசு பற்றிச் சொல்வதற்குத் தோன்றவேயில்லை பூரணிக்கு. பெரிய துன்பத்தோடு பரபரப்படைந்து ஓடி வந்திருக்கிறவர்களிடம் சிறிய துன்பத்தைச் சொல்லி தன் வருத்தத்தில் அவர்களும் பங்கு கொள்ளச் செய்ய வேண்டாமே என்றுதான் அவள் சொல்லாமல் இருந்து விட்டாள்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்