Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 34 – இலக்குவனார் திருவள்ளுவன்

 

அகரமுதல

     



(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 33 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர் அதிகாரம் 13 தொடர்ச்சி

“கொஞ்சம் இரு அப்பா முருகானந்தம். தொல்காப்பியர் மேல் நம்முடைய அச்சுக் கோப்பாளருக்கு ஏதோ கோபம் போலிருக்கிறது. கடுஞ்சினத்தோடும் அந்தப் பேர் வருகிற இடங்களில் எல்லாம் தொல்காப்பியருடைய காலை முடமாக்கியிருக்கிறார். தெல்காப்பியர், தெல்கப்பியர் என்று கால் இல்லாமல் திணறும்படி தொல்காப்பியர் வேதனைப்படுத்தப்பட்டிருக்கிறார்.” சரி செய்து தொல்காப்பியர் கால் இல்லாமல் நின்று திண்டாடிக் கொண்டிருந்த இடங்களில் எல்லாம் கால் போட்டுத் திருத்தினான் அரவிந்தன். முருகானந்தத்துக்கு இதைக்கேட்டுச் சிரிப்புப் பொங்கியது. “காலி புரூஃபில் மட்டும் இவ்வளவு அதிகமாகப் பிழைகள் இருக்கின்றனவே? இதற்கு என்ன காரணம்?” என்று அரவிந்தனைக் கேட்டான் முருகானந்தம்.

“இந்தக் காலி புரூஃப் படிக்கும்போதெல்லாம் நான் நம்முடைய தமிழ்நாட்டுச் சமூக வாழ்வை நினைத்துக் கொள்வேன் முருகானந்தம். காலியில் திருத்தவேண்டிய பிழைகள் அதிகமாயிருக்கும். நம்முடைய சமுதாய வாழ்விலும் இன்றைக்குத் திருத்தம் பெறவேண்டிய தவறுகள் மிகுதி. . .” என்று முருகானந்தத்தின் கேள்விக்கு ஆழமான ஒப்பு நோக்கோடு மறுமொழி சொன்னான் அரவிந்தன்.

உண்மை! ஆனால் இதைப் பேனாவினால் திருத்த முடியாது அரவிந்தன். “ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி” என்று பாரதி பாடினானே அப்படியொரு யுகப்புரட்சி ஏற்பட்டால் தான் விடியும். இன்றைக்குள்ள நம்முடைய சமுதாய வாழ்வில் எந்த அறநூல் மருத்துவராலும் இன்னதென்று கண்டுபிடித்துக் கூறமுடியாத எல்லா நோய்களிலும் சிறிது சிறிதாக இணைந்த ஏதோ ஒரு பெரிய நோய் இருக்கிறது. தீய வழியால் ஆக்கப் பெறுவோரைக் கண்டும் அவர்கள் மேலும் மேலும் வளர்ச்சி பெறுதலைக் கண்டும் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். மனிதர்கள் உணர்ச்சி மரத்துப் போயிருக்கிறார்கள். சூடு சொரணையற்றுப் போயிருக்கிறார்கள். . .” என்று முருகானந்தம் சொற்பொழிவில் இறஙகிவிட்டபோது, அரவிந்தன் குறுக்கிட்டு வேலையை நினைவு படுத்தினான்.

“தம்பி! இந்தக் கனல் கக்கும் கருத்துகளை எல்லாம் இங்கேயே சொல்லித் தீர்த்துவிடாதே. பொன்னகரத்து மேடைகளிலும், பிட்டுத்தோப்புப் பொதுக்கூட்டங்களிலும் பேசுவதற்கு மீதம் வைத்துக் கொள். இங்கே வேலை நடக்க வேண்டும். நேற்று இரவெல்லாம் இரயிலில் பயணம் செய்து வந்த அலுப்பு என்னால் தாங்க முடியவில்லை. பன்னிரண்டு மணிக்காவது நான் படுத்தாக வேண்டும்.”

முருகானந்தம் அடங்கினான், வேலை தொடர்ந்தது. வாயிற்புரம் யாரோ ஒரு பையன் வந்து தயங்கி நிற்பதை முருகானந்தம் பார்த்துவிட்டான்.

“வாசலில் யாரோ பையன் வந்து நிற்கிற மாதிரி இருக்கிறது. இங்கே அச்சகத்தில் வேலைப் பார்க்கிற பையன் எவனையாவது வரச் சொல்லியிருந்தாயா நீ?” என்று முருகானந்தம், அரவிந்தனைக் கேட்டுக் கொண்டிருந்தபோதே, ‘சார்’ என்று குரல் கொடுத்தான் வெளியில் நின்ற பையன்.

“நான் யாரையும் வரச் சொல்லவில்லையே? ஒருவேளை தந்திப் பியூனோ என்னவோ? போய்ப்பார்” என்று அரவிந்தனிடமிருந்து பதில் வந்தது.

முருகானந்தம் வெளியே எழுந்துபோய் நின்று கொண்டிருந்த பையனை விசாரித்துக் கொண்டு வந்தான். “பையன் உன்னைப் பார்க்க வந்ததாகத்தான் கூறுகிறான். நீ போய் என்னவென்று கேள் அரவிந்தா.”

அரவிந்தன் எழுந்து போய் பார்த்தான். பூரணியின் தம்பி திருநாவுக்கரசு அழுக்குச் சட்டையும் வாரப்படாத தலையுமாக நின்றுகொண்டிருந்தான்.

“என்னடா இந்த நேரத்தில் வந்தாய்?”

“ஒன்றுமில்லை, அக்கா உங்களிடமிருந்து ஒரு அஞ்சு ரூபாய் வாங்கிக்கொண்டு வரச்சொன்னாங்க. ..  அவசரம். . .” பையன் வார்த்தைகளைத் தட்டுத்தடுமாறிச் சொன்னான். அவன் விழித்துப் பார்த்த கண்களில் – பார்வையில் ஏதோ பொய்மை மருட்சியைக் கண்டான் அரவிந்தன்.

“ஏண்டா ஐந்து ரூபாய்க்காக இராத்திரிப் பத்து மணிக்குமேல் உன்னை இங்கே துரத்தினாளா உன் அக்கா. நான் காலையில் அங்கே வந்து அக்காவைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேனே. அப்போது அக்கா என்னிடம் பணம் வேண்டுமென்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் கையிலிருந்ததைக் கொடுத்துவிட்டு வந்திருப்பேனே.”

பையன் மேலும் விழித்தான். அவன் நின்ற நிலை, கேட்ட விதம், உருட்டி உருட்டிக் கண்களை விழித்த மாதிரி எல்லாம் அரவிந்தனுக்குச் சந்தேகத்தை உண்டாக்கின. ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் சட்டைப் பையிலிருந்து ஒரு முழு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.

“இந்தா இதைக்கொண்டு போ. காலையில் நான் அக்காவைப் பார்க்க வருவேன்.”

பதில் ஒன்றும் சொல்லாமல் நோட்டை வாங்கிக் கொண்டு நழுவினான் திருநாவுக்கரசு. சிறிது நேரம் அவன் போவதைப் பார்த்துக் கொண்டு வாசலிலேயே நின்ற அரவிந்தன், “முருகானந்தம் கொஞ்சம் இங்கே வா. . .” என்றான். உள்ளிருந்து முருகானந்தம் வந்தான்.

“வேலை இருக்கட்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நான் சொல்லுகிறபடி ஒரு காரியம் செய். இந்தப் பையனைப் பின் தொடர்ந்து போய்க் கண்காணித்துக் கொண்டு வா.”

“யார் இந்தப் பையன்?”

“அதைப்பற்றி இப்போதென்ன? சொல்கிறேன். முதலில் நீ புறப்படு.”

முருகானந்தம் புறப்பட்டான். அவனை அனுப்பிவிட்டு உள்ளே திரும்பி தானாகவே அச்சுப் படிகளைத் திருத்தத் தொடங்கினான் அரவிந்தன். பூரணியின் தம்பியைப் பற்றிய சந்தேகத்தினால் கலவரமுற்றிருந்த அவன் மனம் அழகியசிற்றம்பலம் தத்துவச் செறிவோடு ஆராய்ந்து எழுதியிருந்த கருத்துகள் சில்வற்றை அச்சுப்படியில் கண்டு அவற்றில் இலயித்தது. பண்பாடுமிக்க அவ்வுயரிய கருத்துகளில் அவன் மூழ்கிவிட்டான் என்றே சொல்லலாம். “வாழ்க்கையில் இறுதி நாள் ஒன்றைத்தான் சாவு என்று உலக வழக்குப்படி கூறுகிறோம். ஆனால் மனித ஆயுளின் நிறைவான காலத்துக்குள் ஒவ்வொரு பருவத்தின் முடிவும் ஒரு சாவு. ஒவ்வொரு பருவத்தின் ஆரம்பமும் ஒரு புதுப்பிறவி. குழந்தைப் பருவம் அழிந்தால் பிள்ளைப் பருவம் பிறக்கிறது. பிள்ளைப் பருவம் அழிந்தால், வாலிபப் பருவம் பிறக்கிறது. வாலிபப் பருவம் இறந்தால் முதுமை பிறக்கிறது. இப்படி ஒரு பருவம் அழிந்து அடுத்த பருவம் பிறக்கும் காலம் மனிதனுடைய பழக்கங்களும் அனுபவங்களும் மாறுகிற காலம். இந்த மாற்றத்தினால் அழிவது மரணம். புதிதாகச் சேர்வது பிறவி. ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்து அழித்தவை மரணம்தான். ஆனால் அதற்காக நாம் அழுவதில்லை. அது நமக்குப் புரியாத தத்துவம்” என்று எழுதி குண்டலகேசியிலிருந்து ஒரு செய்யுள் எடுத்து உதாரணம் காட்டியிருந்தார் பேராசிரியர். உடனே அந்தச் செய்யுளையும் அந்த வாக்கியங்களையும் தனது நாட்குறிப்பேட்டில் குறித்துக் கொண்டு விட வேண்டுமென்ற ஆர்வம் அரவிந்தனுக்கு உண்டாயிற்று. பேராசிரியர் அழகிய சிறம்பலம் மட்டும் உயிரோடு இருந்து தமிழ்நாட்டின் சார்பில் மேற்கு நாடுகளில் பயணம் செய்திருந்தால் மேலைநாட்டார் மறுபடியும் ஒரு விவேகானந்தரைப் பார்த்திருப்பார்கள். “அவருடைய ஆங்கில அறிவிற்கும், தமிழ் அறிவுக்கும், தத்துவ ஞானத்துக்கும் நாடு அவரை மிகவும் குறைவாகப் பயன்படுத்திக் கொண்டு விட்டு விட்டதே” என்று ஓர் ஏக்கம் அரவிந்தன் மனத்தில் அப்போது படர்ந்தது. அவன் நெட்டுயிர்த்தான். பழகத் தொடங்கிய புதிதில் ஒருநாள், “உங்கள் தந்தையார் விட்டுச் சென்ற பணிகளில் பெரும் பகுதி உங்களால் நிறைவேற வேண்டும். அதற்குரிய தகுதி உங்களிடம் இருக்கிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் குறைவின்றிக் கற்றிருக்கிறீர்கள். வாய்ப்பு வரும்போது உலகத்து வீதிகளில் தமிழ் மணம் பரப்பி முழக்கமிட உங்கள் குரல் தயாராயிருக்க வேண்டும்” என்று பூரணியிடம் சொல்லியிருந்தான் அவன். அப்போது அவள் சிரித்துக் கொண்டே “நீங்கள் என்னைப் பற்றி மிகப்பெரிய கனவுகள் காண்கிறீர்கள்” என்று தன்னடக்கமாகப் பதில் சொல்லிவிட்டாள்.

“அப்படிச் சொல்லக்கூடாது. உங்களால் அது முடியுமென்று எனக்குத் தோன்றுகிறது” என்று அப்போது தான் வற்புறுத்திச் சொன்னதை மீண்டும் நினைத்துக் கொண்டான் அரவிந்தன். அதன் பின் தங்களுடைய பழக்கம் அன்பும் நெருக்கமும் பெற்று இத்தகைய உறவாக மாறியதையும் நினைத்தான். தொடக்கத்தில் பூரணியின் உறவு இந்த விதத்தில் இப்படித் தன்னோடு நெருங்குமென அவன் எண்ணியதே இல்லை. அவனைப் பெருமை கொள்ள வைத்த உறவு இது. இத்தகைய சிந்தனையோடு பேராசிரியரின் அந்த வாக்கியங்களைத் தனது ஏட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்த அவன் அச்சகத்தின் பின்புறமிருந்து ஏதோ ஓசை கேட்கவே திகைப்புடன் எழுதுவதை நிறுத்திவிட்டுக் காதுகொடுத்துக் கேட்கலானான். யாரோ சுவரில் கால் வைத்து ஏறுகிற மாதிரி ‘சர சர’வென்று ஓசைகேட்டது.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue