Skip to main content

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 59

அகரமுதல




(
அகல் விளக்கு – மு.வரதராசனார். 58. தொடர்ச்சி)

“நீ ஒரு பைத்தியம்’டா. அவள் என்ன செய்வாள்? கையோடு அழைத்துக்கொண்டு வந்து விட்டு விட்டான். சொத்தோடு வந்தால் வா, இல்லாவிட்டால் வரவேண்டா என்று சொல்லி விட்டுவிட்டுப் போனால் அந்தப் பெண் என்ன செய்யமுடியும்?”

“மறுபடியும் புறப்பட்டுக் கணவன் வீட்டுக்கே போகவேண்டும்?”

“அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால்? – அவன் அப்படிப்பட்ட முரடனாகத் தெரிகிறதே”

என்னால் நம்பவே முடியவில்லை. “அப்படிச் சொல்லாதே அம்மா! தப்பு, தப்பு” என்றேன்.

“உன் கண்ணுக்கு எல்லாரும் நல்லவர்களாகத் தெரியும். கற்பகத்தின் திருமணத்துக்கு முன் அவனைப் பற்றி உனக்குத் தான் எழுதி கேட்டார்களாம். நீ நல்ல பிள்ளை என்று எழுதியிருந்தாயாம். அந்தப் பெண் அதை என்னிடம் சொல்லிக் கண்ணீர் விடுகிறாள்” என்றார்.

என் உள்ளம் நைந்தது. சென்னைக்குச் சென்று அவர்களின் குடும்பத்தைக் கண்டபோது, அவர்கள் அன்பாக வாழ்ந்திருந்தார்களே என்று எண்ணினேன். அதை அம்மாவிடம் குறிப்பிட்டேன்.

“ஒருநாள் விருந்தாளிபோல் போய்ப் பார்ப்பவர்களுக்கு அந்தக் குடும்பத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அதிலும் கற்பகம் நல்ல பெண். உள்ள துன்பத்தை வெளியே காட்டிக் கொள்வாளா?” என்றார்.

“மாலனா அப்படிச் செய்தான் என்று என்னால் நம்பவே முடியவில்லை அம்மா”

“நீ வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புகிறவன்.”

இவ்வளவும் செய்துவிட்டு மாலன் எனக்கு ஒரு கடிதமும் எழுதாமலிருக்கிறானே என்று எண்ணியபோது அவன் மேல் வெறுப்பும் தோன்றியது.

ஈரோட்டுக்குத் திரும்பிச் சென்றபோது வீட்டில் அவனுடைய கடிதம் வந்திருந்தது கண்டேன். பிரித்துப் படித்தேன்.

“நான் உன்னிடத்தில் நேரில் சொன்னபடி ஊரில் நெல் ஆலை வைப்பதற்கு ஏற்பாடு செய்துவருகிறேன். அதனால் வேலையை விட்டு விட்டேன். நீ என்மேல் வருந்தமாட்டாய் என்று நம்புகிறேன். என் தந்தை கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறார். அது போதவில்லை. மாமனாரிடம் கொஞ்சம் கேட்டு வாங்கிவருமாறு கற்பகத்தை அவளுடைய ஊர்க்கு அனுப்பியிருக்கிறேன்” என்று எழுதி இருந்தான்.

அம்மா சொன்னதற்கும் அவன் எழுதியதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தேன். இன்னும் கற்பகத்தைக் கேட்டால், அவள் சொல்வது எப்படி இருக்குமோ? ஒரே இடத்தில் நடந்த நிகழ்ச்சியை வெவ்வேறு கட்சிச் செய்தித் தாள்கள் வெவ்வேறு வகையாய்த் திரித்து எழுதுவது போல் இருக்கிறதே என்று எண்ணினேன். மாலன் சோதிடம் கேட்டிருப்பான். வியாபாரத்துக்கு வேண்டிய பொருத்தம் இருப்பதாகச் சோதிடர் ஏதாவது சொல்லி இருப்பார். அவனுடைய இலக்கினாதிபதி இப்படிச் செய்து விட்டிருப்பான் என்று வெறுப்படைந்தேன்.

சந்திரன் மிகக் கெட்டுவிட்டான் என்றும், சொத்தை அழித்து வருகிறான் என்றும் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. இனிச் சந்திரனை யாரும் திருத்த முடியாது; அவன் சொத்தை அழிக்கத் தொடங்கிய பிறகு அந்தச் சொத்தில் ஒரு பகுதியைக் கற்பகத்துக்கு எழுதி வைத்தால் நல்லதுதானே! ஏன் அவனுடைய தந்தை அப்படிச் செய்யத் தயங்குகிறார்? அப்படிச் செய்துவிட்டால் மாலன் எப்படியாவது வியாபாரமோ தொழிலோ செய்து முன்னேறுவானே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

உண்மை எதுவும் தெளிவாகத் தெரியாததால், மாலனுக்கு மறுமொழி எழுதாமலிருந்தேன். அடுத்த கடிதம் வரும் என்று எதிர்பார்த்தேன். ஒன்றும் வரவில்லை. எனக்கு வேலை மிகுதியாக இருந்தது. புதிய பொறுப்புகள் சில வந்து சேரவே, அவற்றில் சிந்தனை செலுத்தி இருந்தேன்.

மனைவியைக் குழந்தை மாதவியுடன் மூன்றாம் மாதத்தில் போய் அழைத்து வரலாமா என்று ஊருக்கு எழுதிக் கேட்டிருந்தேன். மூன்றாம் மாதத்தில் அம்மா போய் வாலாசாவுக்கு அழைத்து வருவதாகவும், ஐந்தாம் மாதத்தில் ஈரோட்டுக்கு அனுப்புவதாகவும் எழுதியிருந்தார்கள்.

இடையில் நான்கு நாள் சேர்ந்தாற்போல் விடுமுறை வர, ஈரோட்டில் இருக்க மனம் கொள்ளாமல், ஊருக்குப் புறப்பட்டேன். ஊருக்குச் சென்று வீட்டில் நுழைந்ததும் நான் முதலில் கண்ட காட்சி, கற்பகம் ஒரு சிறுமிக்குத் திண்ணையில் கணக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த காட்சிதான். கற்பகம் என்னைக் கண்டதும், “வாங்க அண்ணா; இப்போதுதான் வருகிறீர்களா?” என்றாள்.

“இது என்ன?” என்று அந்தச் சிறுமியை காட்டிக் கேட்டேன்.

“பாக்கியம் அக்காவிடத்தில் படிக்கும் பெண். கடைசி வீட்டுப் பெண். நானும் இப்போது அக்காவின் தொழிலைச் செய்யக் கற்றுக்கொள்கிறேன். என்ன செய்வது?” என்று வேதனையோடு கலந்த புன்சிரிப்பை மேற்கொண்டாள்.

“இருக்கட்டும். அப்பாவும் இருக்கிறாரா?” என்று வருந்தியவாறே கேட்டேன்.

“அதே வீட்டில்தான் இருக்கிறோம். அங்கே இருக்கிறார்” என்றாள்.

உள்ளே நுழைந்ததும் காக்கி உடை உடுத்தி ஒரு சிறு பையன் குறுக்கே நிற்பதைக் கண்டு வியந்தேன். “அடே யாரடா சிப்பாய்?” என்றேன்.

கற்பகம் என்பின் வந்தவள் “திருவாய்மொழி” என்றாள்.

உடனே, “என் மருமகனா? அடடே” என்று அவனைத் தூக்கித் தோள்மேல் வைத்துக் கொண்டேன்.

என் குரலைக் கேட்டதும் கயற்கண்ணி பால் குடிக்கும் குழந்தையுடன் எட்டிப் பார்த்தாள்.

“மாதவி என்ன செய்கிறாள்?” என்றேன்.

“அப்பா எங்கே என்று கேட்கிறாள்” என்றாள் கற்பகம்.

“இல்லை இல்லை. அப்பா வந்தால்தான் பேசுவேன் என்று அடம்பிடிக்கிறாள்” என்றாள் என் மனைவி.

“நீ ஒன்றும் அடம்பிடிக்காமல் இருந்தால் போதும்” என்றேன்.

அம்மா ஆர்வத்தோடு வந்து பார்த்து, “கடிதமும் எழுதாமல் வந்து விட்டாயே. உன் மகள் மேல் ஏக்கம் வந்து விட்டதா?” என்கிறார்.

“பாட்டி ஆச்சு, பேர்த்தி ஆச்சு. உன் பேர்த்தியைப் பற்றி எனக்கு என்ன அம்மா ஏக்கம்?” என்று சிரித்தேன்.

சிறிது நேரம் வீடு முழுவதும் ஆரவாரமாக இருந்தது. எல்லாருடைய முகங்களும் மலர்ந்திருந்தன. கற்பகத்தின் மகன் திருவாய்மொழியும் சிரித்து ஆடிக்கொண்டிருந்தான். மாதவியும் தன் விரலைச் சுவைத்துக் கொண்டே ஆ ஊ என்று ஒலித்துக் கொண்டிருந்தாள். கற்பகத்தின் முகத்தில் மட்டும் துன்பத்தின் சாயல் வந்து வந்து கவிந்துகொண்டிருந்தது. தானும் மற்றவர்களோடு கலந்து மகிழ வேண்டும் என்று அவள் எவ்வளவு முயன்றபோதிலும் முழு வெற்றி பெறமுடியவில்லை.

மாலனைப் பற்றிக் கேட்பதற்கு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். சிற்றுண்டி முடிந்ததும், கற்பகத்தைப் பார்த்தேன். அவள் அங்கே இல்லை. சிறிது நேரத்தில் வந்தாள். “உன் கணவர் கடிதம் எழுதினாரா?” என்று கேட்டேன்.

“இல்லை. உங்களுக்கு எழுதினாரா?” என்றாள்.

“எழுதினார். நான் எழுதவில்லை.”

“நடந்ததெல்லாம் தெரியும் அல்லவா?”

“தெரியும். அம்மா சொல்லித் தெரிந்து கொண்டேன்?”

“உங்களுக்கு எல்லாவற்றையும் எழுதினாரா?”

“எழுதினார். சுருக்கமாக, அந்த நெல் ஆலை ஏற்படுத்தி ஆயிற்றா?”

“நடக்கிறது என்று கேள்விப்பட்டேன். அங்கிருந்து வந்தவர்கள் சொன்னார்கள்.”

அவளுடைய கழுத்தையும் கைகளையும் பார்த்தேன். நகைகள் காணப்படவில்லை. கேட்கலாமா என்று வாயெடுத்தேன். இப்போது கேட்டு அவளுடைய துயரத்தைக் கிளற வேண்டா என்று அமைதியானேன்.

“உன்னிடத்தில் உண்மை தெரிந்து கொண்டு கடிதம் எழுத எண்ணியிருக்கிறேன்” என்றேன்.

“எழுதியும் பயன்படாது. அவர் மனத்தை மாற்ற முடியாது. அவரே உணரும் காலம் வந்தால்தான் திருந்துவார்.”

“வேறே ஒன்றும் கெட்ட பழக்கம் இல்லையே.”

“நீங்கள்தான் திருமணத்துக்கு முன்னமே கெட்ட பழக்கம் ஒன்றும் இல்லை என்று எழுதியிருந்தீர்களே. அப்படியேதான் இருக்கிறார்.”

“பிறகு எப்படி இந்த முரட்டுக் குணம் வந்தது.”

“யார் சொன்னது முரட்டுக் குணம் என்று. அப்படி ஒன்றும் இல்லையே.”

வேண்டும் என்றே மறுக்கிறாளோ என்று அவளுடைய முகத்தைப் பார்த்தேன். அவள் பார்வை கூரையைப் பார்த்தப்படி இருந்தது. முகக் குறிப்பு ஒன்றும் தெரியவில்லை.

பக்கத்து அறையிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி, “கற்பகம் வாய் திறந்து சொல்லமாட்டாள். இதோ நான் வந்து சொல்வேன். கொஞ்சம் இருங்கள்” என்றாள்.

கற்பகம் கண்ணைத் துடைத்துக்கொண்டே தோட்டத்தின் பக்கம் நடந்தாள்.

நான் என் மனைவி இருந்த அறைக்குள் நுழைந்து “நகைகள் காணோமே எங்கே?” என்றேன்.

“நகைகள் எல்லாவற்றையும் கழற்றிக் கொடுத்து விட்டுத்தான் இங்கே வந்தாள்” என்றாள் மனைவி.

“இவளே கழற்றிக் கொடுத்துவிட்டாளா? அவனே வற்புறுத்தினானா?”

“இவளே கொடுக்க, இவளுக்குப் பைத்தியமா? அவர் வற்புறுத்தினார் கொடுத்தாள். கடன் கடன் என்று கேட்டாராம் கொடுத்து விட்டாள். அப்படியாவது அவருடைய கவலை தீருமா, அன்பாக நடத்துவாரா என்று எதிர் பார்த்தாள். அவர் ஒன்றும் மனம் மாறவில்லை.”

பெருமூச்சு விட்டேன். “சிக்கனமானவன். கடன்படக் காரணம் இல்லையே” என்றேன்.

“அது பெரிய கதை. பாக்கிய அம்மாவைக் கேட்டுப் பாருங்கள். அவருக்குத்தான் முழு உண்மையும் தெரியும்.”

திகைத்தேன். “அவனே பெருங்காஞ்சிக்கு வந்து விட்டு விட்டானா” என்று கேட்டேன்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue