Skip to main content

தமிழர் பொழுதுபோக்கு – சி.இலக்குவனார்

 அகரமுதல


 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  22 –  தொடர்ச்சி)

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  23

12. பொழுதுபோக்கு



திட்டமிட்ட பொழுதுபோக்கும் ஒரு நாட்டு மக்களின் நாகரிகத்தை வெளிப்படுத்துவனவாகும். 

உழைப்போர்க்கு ஓய்வு இன்றியமையாதது.  ஓய்வு, ஒன்றும் செய்யாது மடிந்திருப்பதனால் மிகு பயன் தாராது.  எப்படியாவது பொழுதைக் கழிக்க வேண்டும் என்பதற்காக எதிலும் ஈடுபடுதலும் நற் பொழுதுபோக்கு ஆகாது. பொழுதுபோக்கால் உள்ளத்திற்கு இன்பம், உடலுக்குப் பயிற்சி ஏற்பட்டு மீண்டும் தம் கடமையிலீடுபடப் புத்துணர்ச்சியும் புதுமலர்ச்சியும் பெறுதல் வேண்டும். தாமே தனியாகப் பொழுதுபோக்கில் ஈடுபடுவதினும் பிறருடன் கூடிப்பொழுதுபோக்கலே நற்பயன் தருவதாகும்.

சங்கக்காலத்தில் சிறுவர் முதல் பெரியோர் வரை ஆடவரும் பெண்டிரும் ஏதேனும் ஒரு பொழுதுபோக்கில் இன்பம் கண்டுள்ளனர்.  விளையாட்டும், ஆடலும் பாடலும், இன்ப உரையாட்டும் எல்லாருடைய உள்ளங்களையும் கவர்ந்துள்ளன.

பூங்காக்களுக்குச் சென்றும், நகரைவிட்டு வெளியிடங்களை அடைந்தும் அன்றும் பொழுது போக்கியுள்ளனர்.

கடற்கரையில் அலவனாட்டுதல், வண்டல் விளையாடுதல், பாவையை வைத்துக்கொண்டு விளையாடுதல், விளையாட்டுக் குதிரை, தேர்  முதலியவற்றை இழுத்து விளையாடல், ஒருவரோடு ஒருவர் கைகோத்து ஆடல், பந்தாடல், நீர்நிலைகளிற் சென்று முழுகி விளையாடல், கிளி வளர்த்தல், திருவிழாக்களுக்குச் செல்லல், ஆடவர் பெண்டிர் இருசாரார்க்கும் உரிய அக்காலப் பொழுது போக்குகளாகும்.

       ஆடவர் மற்போர் புரிதலையும் கோழிப் போர், யானைப் போர் காண்டலையும், வேட்டையாடுதலையும் தமக்குரியனவாகக் கொண்டுள்ளனர். ஆடவரில் முதுமையுற்றோர் ஓரிடத்தில் அமர்ந்து வல்லாட்டம் (சூதாட்டம்) ஆடிப் பொழுதுபோக்கியுள்ளனர்.  சூதாடுவதற்கெனத் தனி அகங்கள் இருந்துள்ளன (புறநானூறு-52).  வல்லாட்டத்திற்குரிய பலகை, காய் முதலியனபற்றித் தொல்காப்பியத்தில் கூறப்படுவதனால் கி.மு.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் வல்லாட்டம் பொழுதுபோக்காக அமைந்துள்ளது என்று அறியலாம்.

கெடவரல், பண்ணை, ஓரை முதலியன விளையாட்டின் பெயர்களாகும்.

‘ஓரை ’ என்பது மகளிர்க்குரிய விளையாட்டு என்பதும் அதில் ஆடவரும் சேர்ந்து விளையாடுவர் என்பதும் “ஒள்ளிழை மகளிரொடு ஓரையும் ஆடாய்” ( நற்றிணை-155) என்பதிலிருந்து அறியக்கிடக்கின்றது.

ஊஞ்சல் ஆடுதல் மகளிர்க்கே உரிய விளையாட்டு,  ‘தெற்றி’ என்பதும் மகளிர்க்கே உரிய  விளையாட்டாகும் (புறநானூறு -53).  அது இன்ன விளையாட்டு என அறிய முடியவில்லை.  “கழங்கு ஆடுதல்” என்பதும் (அகநானூறு-334) மகளிர்க்குரிய ஒன்றாகும்.

கடற்கரையில் நண்டுகள் ஓடி ஓடி மறைதலைக் காண்பது வியத்தகு காட்சியாகும்.  அதனைக் கண்டு பொழுதுபோக்கலைச் சிறு விளையாடலாகக் கருதினர் என்பது “செம்பேர் ஈரளை அலவற் பார்க்கும் சிறு விளை யாடல்” (நற்றிணை-123) என்று கூறுவதனால் அறியலாம்.

காவிரிப்பூம்பட்டினத்து மக்கள் எவ்வாறு பொழுது போக்கில் ஈடுபட்டு மகிழ்ந்தனர் என்பது பட்டினப்பாலையில் கற்போர் உள்ளம் கவருமாறு கவினுறக் கூறப்பட்டுள்ளது ( வரிகள் 62-117)

தொழிலாளர்கள் கடற்கரைக்குச் சென்று கடல் இறா மீனைச் சுட்டுத் தின்பர்; வயலாமையைப் புழுக்கி உண்பர்; அடும்பு மலரையும் ஆம்பல் மலரையும் அழகுறச் சூடிக் கொள்வர்.  ஆடவர்கள் பலர் கூடிக் கையாலும் கருவிகளாலும் போர் செய்வர்.  ஒருவரை ஒருவர் சுற்றிச் சுற்றிப் பொருது கொள்வது நாள்மீன்கள் (நட்சத்திரங்கள்) கோள்மீனைச் (கிரகம்) சுற்றிவருவது போல் இருக்கும்.  கவண் வீசுவர்; ஆட்டுச் சண்டை, கோழிச் சண்டை, கவுதாரிச் சண்டை முதலியன கண்டு களிப்பர்; பெண்கள் சுறாமீன் கோடு நட்டு வணங்கி வாழ்த்துவர்.  பரதவர் உவா நாளில் மீன்வேட்டைக்குச் செல்லாது வீட்டிலிருந்து பெண்களுடன் உண்டு ஆடி மகிழ்வர்;  கடலில் குளிப்பர்; பின்னர் நன்னீர்க் குளத்தில் முழுகி மகிழ்வர்; அலவனாட்டியும், அலைகளில் நடந்தும் பதுமைகளைப் புனைந்தும் ஐம்பொறிகளால் நுகரும் பொருள்களை நுகர்ந்து மயங்குவர்; பகலில் இவ்வாறு விளையாடிய பின்னர்க் காதலனும் காதலியும் பட்டாடையை நீக்கிப் பருத்தியாடையை அணிவர்; மட்டு நீக்கி மது மகிழ்வர்.  மைந்தர் கண்ணியை மகளிர் சூடுவர்; மகளிர் கோதையை மைந்தர் மலைவர்; பாடலோர்ப்பர்; நாடகம் நயப்பர்.  வெண்ணிலாவில் வீற்றிருந்து மகிழ்வர்.  பின்னர் அங்குள்ள மணல்மேடுகளில் துயின்று இரவைக் கழிப்பர்.

இவ்வாறெல்லாம் அக்கால மக்கள் பொழுதுபோக்கி மகிழ்ந்தனர்.

எளிய மக்களும் இனிய முறையில் பொழுது போக்கினர் என்பதைப் பின்வரும் புறநானூற்றுப் பாடலால் அறியலாம்.

நெல்லரியும் இருந்தொழுவர்

 செஞ்ஞாயிற்று வெயில்முனையின்

 தெண்கடல்திரை மிசைப்பாயுந்து

 திண்திமில் வன்பரதவர்

 வெப்புடைய மட்டுண்டு

 தண்குரவைச் சீர்தூங்குந்து

 தூவற் கலித்த தேம்பாய் புன்னை

 மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்

 எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து

 வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்

 முண்டகக் கோதை ஒண்தொடி மகளிர்

 இரும்பனையின் குரும்பைநீரும்

 பூங்கரும்பின் தீம்சாறும்

 ஓங்குமணல் குவவுத்தாழைத்

 தீநீரோடு உடன் விராஅய்

 முந்நீருண்டு முந்நீர்ப் பாயுந்”      (புறநானூறு -24)

கடலில் குளித்தலும் கள்ளுண்டலும் குரவையாடலும் மாலைகளைச் சூடி விளையாடலும், மகளிருடன் நடனமாடுதலும் மூன்று வகை நீரும் கலந்த கலவை நீரையுண்டு மகிழ்ந்து கடலில் பாய்ந்து விளையாடலும் இன்றைய மேனாட்டார் பொழுதுபோக்கோடு ஒத்திருக்கின்றனவன்றோ?

மற்போர்பற்றி ஆமூர் மல்லனைச் சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி வென்ற நிலை வண்ணிக்கப்பட்டுள்ளது.  அக்கால மற்போர் இக்கால மற்போர் போலவே நடந்துள்ளது.  சாத்தந்தையார் எனும் புலவர் அம்மற்போரை நேரிற் கண்டு பின்வருமாறு கூறியுள்ளார்:

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்

 மைந்துடை மல்லன் மதவலி முருக்கி

 ஒருகால் மார்பு ஒதுங்கின்றேஒருகால்

 வருதார் தாங்கிப் பின்ஓதுங் கின்றே;

 நல்கினும் நல்கா னாயினும் வெல்போர்ப்

 பொரல்அருந் தித்தன் காண்கதில் அம்ம

 பசித்துப்பணை முயலும் யானை போல

 இருதலை ஓசிய எற்றிக்

 களம்புகும் மல்லன் கடந்தடு நிலையே

(புறநானூறு -80)

மற்போரைக் கண்டவர் ஆர்ப்பரவம் ஏழ்கடல் ஒலியினும் மிகுதியாய் இருந்தது என்று அப் புலவரே  கூறியுள்ளமையால் (புறநானூறு -81) மற்போரைக் கண்டு போதுபோக்கியோர் கூட்டம் இக்காலம் நடைபெறும் மற்போர், விளையாட்டுப் பந்தயங்கள் முதலியவற்றைக் கண்டு களித்துப் பொழுதுபோக்கும் பெருங்கூட்டத்தைப் போன்று இருந்திருக்கும் என்று உய்த்துணரலாம்.

மற்போரைக் கண்டு மகிழ்ந்தது போன்றே யானைப் போரைக் கண்டும் மகிழ்ந்தனர் என்பது,

குன்றேறி யானைப்போர் கண்டற்றால்  தன்கைத்துஒன்று 

 உண்டாகச் செய்வான் வினை”   (குறள்-758)

எனும் திருக்குறளால் தெளியலாம்.

நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து

 வல்லா ராயினும் புறம்மறைத்துச் சென்றோரைச்

 சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி

 நல்லிதின் இயக்கும்அவன் சுற்றத் தொழுக்கமும்

என்னும் மலைபடுகடாம் அடிகளால் (77-80) இயற்

றமிழும்,

குழலினிது யாழினிது என்ப” எனும் திருக்குறளால் இசையும்,

கூத்தாட் டவைக்குழாத் தற்றே” எனும் திருக்குறளால் நாடகமும், அக்கால மக்களின் பெரும் பொழுதுபோக்காய் அமைந்திருந்தன என்று அறிய இயலும்.  பாடும் புலவரும் பாணரும் ஆடும் விறலியும் பொருநரும் அக்காலத்து நன்கு மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டனர் என்பதனாலும் இவை மக்களுக்குப் பயன் விளைக்கும் பொழுதுபோக்காய் அமைந்திருந்தன என்றும் தெரியலாம்.  சங்கக்காலத் தமிழ்மக்கள் பொழுதுபோக்கு முறையிலும் மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்தனர் என்பதில் ஐயமின்று.

(தொடரும்)

சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்