அகல் விளக்கு – மு.வரதராசனார்: 29
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 28. தொடர்ச்சி)
அகல் விளக்கு
அத்தியாயம் 12(தொடர்ச்சி)
நானும் மாலனும் கூட்டத்தின் பின் மெல்லச் சென்று சாலைப்பக்கம் சேர்ந்தோம். அப்போது ஒருவன் சந்திரனைக் கைப்பிடித்து ஊர்வலத்தின் முன்னணிக்கு இழுத்துச் சென்றதைக் கண்டேன். ஒரு துறையில் முன்நின்ற மாணவனை மற்றத் துறையில் பின்தங்கும்படி இளைஞர்கள் விடுவதில்லை. ஆகையால், சந்திரன் கூட்டத்தின் இடையே ஒதுங்கியிருந்தும், மற்றவர்களின் கண்ணில் பட்டபிறகு அவ்வாறு இருக்க முடியவில்லை.
திடீரென்று ஒரு பேருந்து நிறைய இரும்புத் தொப்பி அணிந்த காவலர்(போலீசார்) கைத்தடியும் துப்பாக்கியுமாக வந்து இறங்கினார்கள். தடிகளை இங்கும் அங்கும் சுழற்றினார்கள். சீழ்க்கை ஊதப்பட்டது, தடிகளைச் சுற்றுவதோடு நிற்காமல் மாணவர்களைத் தாக்கவும் தொடங்கினார்கள். “விடுதிக்கு போய்விடுவோம் வந்துவிடு” என்றான் மாலன். “இப்போது ஓடிப்போகக்கூடாது. இருந்து பார்த்துவிட்டுப் போவோம்” என்று மாலனுடைய கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன். கூட்டத்திலிருந்து சில மாணவர்கள் மட்டும் பரபரப்பாக நடந்து தொலைவில் போய்விட்டனர். மற்றவர்கள் இங்கும் அங்கும் போவதுபோல் நகர்ந்துகொண்டிருந்தார்களே தவிர கலையவில்லை.
“வந்தே மாதரம்! வந்தே மாதரம்!” என்ற குரல்கள் வானளாவின. மற்றுமொரு சீழ்க்கை ஊதப்பட்டது. கண்ணீர்ப்புகை விடப்பட்டது. அப்போதுதான் கூட்டம் சிதறத் தொடங்கியது. நானும் மாலனும் விடுதியை நோக்கிச் சென்றோம். கண்ணீர்ப்புகையும் அதற்குள் எங்கள் கண்களைத் தாக்கியது. கண்ணீர் வழிய நகர்ந்து கொண்டிருந்த எங்கள் மேல் தடிகள் பட்டன. மாலனுடைய முழங்காலிலும் அடிப்பட்டது; என்னுடைய இடது தோளிலும் பட்டது. மாலன், “அப்பாடா” என்று அடிப்பட்ட என் தோளைப் பற்றினான். “அய்யோ நோகுது! இந்தத் தோளைப் பற்றிக்கொள்” என்று இப்பக்கமாக வந்து வலது தோளைக் கொடுத்தேன். ஆனால் நன்றாக நடக்கமுடியவில்லை. நொண்டிக்கொண்டே வந்தான். விரைவில் கல்லூரி எல்லைக்குள் நாங்கள் வந்துவிட்டோம். திரும்பிப் பார்த்தோம்.
சந்திரன் நெற்றியில் பலமான அடிபட்டு இரத்தம் கசிய வந்துகொண்டிருந்தான். அவனிடம் சென்று “என்ன செய்தி” என்று கேட்டேன். கண்ணீர்ப் புகை விட்டபோது, இடர்ப்பட்டு விழுந்து விட்டதாகவும் காவலருடைய(போசுகாரனுடைய) தடி பட்டதாகவும் கூறினான். அவன் கையில் இருந்த கைக்குட்டை முழுவதும் இரத்தத்தால் நனைந்திருந்தது. உடனே என் கைக்குட்டையை எடுத்து வழிந்த இரத்தத்தை ஒற்றினேன். அவனைப் பற்றினேன். “பிடிக்க வேண்டா; கை காலில் ஒன்றும் அடி இல்லை. நன்றாக நடந்து வருவேன்” என்றான்.
சிறிது நேரத்திற்குள் ஆளுக்கு ஒரு வழியாக மாணவர்கள் விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களில் கண்ணீர்ப் புகைக்கு ஆளானவர் சிலர்; அடிப்பட்டவர் சிலர்; ஒன்றும் இல்லாமலே தப்பி வந்துவிட்டவர் பலர். ஊர்வலம் நடத்தித் தீரவேண்டும் என்று வீர முழக்கம் செய்தவன் முன்னே சென்ற காரணத்தால் போலீசாரிடத்தில் அகப்பட்டு கொண்டிருப்பான் என எண்ணினேன். ஆனால் அவன் சிலரோடு பேசிச் சிரித்தபடியே எங்கள் அறைப்பக்கம் போவதைக் கண்டேன். “காவலர்(போலிசு) வண்டி வந்ததோ இல்லையோ, அவர்களை ஏமாற்றிவிட்டுக் கல்லூரி எல்லைக்குள் கால்வைத்துவிட்டேன்” என்று அவன் பெருமையடித்துக் கொண்டான். “எனக்கு அந்தப் பயல்களையும் ஏமாற்றத் தெரியும், அவர்களின் பாட்டனையும் ஏமாற்றத் தெரியும்” என்று சொல்லிக்கொண்டான்.
பிற்பகல் மாற்றுடை அணிந்து கொண்டு காவலர்(போலீசார்) சிலர் துப்பறிவதாகக் கேள்விப்பட்டோம். விடுதிக்குள் புதியவர்களாக யார் நுழைந்தாலும், துப்பறியும் காவலர் என்று ஐயுற்றோம். தங்கள் மகனையோ தம்பியையோ பார்க்க வந்தவர்களையும் அவ்வாறு ஐயுற்றுத் தொடர்ந்து சென்று, நாங்கள் அவர்களைத் துப்பறியத் தொடங்கினோம். விடுதியின் வாழ்வில் ஒருவகைச் சுறுசுறுப்பும் பரபரப்பும் எங்கும் காணப்பட்டன. ஆடலும் பாடலும் திரைப்படமும் விருந்தும் விழாவும் இல்லாமலே விடுதி உணர்ச்சிமிக்க சூழ்நிலை பெற்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு விடுதி எதிரே காவலர் வண்டி ஒன்று வந்து நின்றது. நாங்கள் எல்லாரும் பரபரப்பு அடைந்தோம். நேராக ஒரு குறிப்பிட்ட அறையை நோக்கி வருவது போல் காவலர் வந்தனர். பின்தொடராதபடி எங்களைத் தடுத்துவிட்டு, ஓர் அறைக்குள் நுழைந்தனர். ஒரு மாணவனைப் பற்றிக்கொண்டுவந்தனர். நேரே வண்டியில் ஏற்றிச் சென்றனர். பிறகு மாணவர் சிலர் மிக்க பரபரப்பு அடைந்து, காவல் நிலையத்துக்குச் சென்று பார்த்தனர். அந்த மாணவன் சிறையில் வைக்கப்பட்டதாகச் செய்தி அறிந்து வந்தனர். அந்த மாணவன் வேறு யாரும் இல்லை; காலையில் கூட்டத்தின்போது ஆசிரியர்களையும் மற்றவர்களையும் இகழாமல் காந்தியடிகளின் கொள்கையை உணர்ந்து அன்பாக அமைதியாக நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லி ஊர்வலத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லாமல் விடுதிக்குச் சென்ற அதே மாணவன் தான். அவன் ஒரு குற்றமும் செய்யக் கூடியவனாகவோ, தீவிரமான நடவடிக்கையில் கலந்து கொள்ளக் கூடியவனாகவோ, இல்லை. அவனைக் காவலர் பிடித்தது தவறு என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.
மாலன் வந்த போது என்ன காரணம் என்று கேட்டேன். காவலர் துப்பறிய வந்தபோது யாரோ அவனைப் பற்றிச் சொல்லி, அவன்தான் கூட்டத்தில் பேசியதாகவும் எல்லாவற்றிற்கும் காரணமாக இருந்ததாகவும் சொல்லிவிட்டார்களாம். அதனால் அவனைச் சிறைப் படுத்தியிருப்பதாகச் சொன்னான். சிறிது நேரத்தில் வேறொருவன் வாயிலாக ஒரு செய்தி வந்தது. காலையில் இரண்டாவதாகப் பேசி வீர முழக்கம் செய்து ஊர்வலம் வேண்டும் என்று தூண்டிய அந்த மாணவன் தான், காவலரிடம் அவனை அப்படிக் காட்டிக் கொடுத்து விட்டதாகச் செய்தி தெரிந்தது.
எனக்கு வியப்பாக இருந்தது. அப்படி வீர முழக்கம் செய்தவன் தான் காவலரை ஏமாற்றிவிட்டதாகப் பெருமையடித்துக் கொண்டதோடு, இப்படி அடாதபொய் சொல்லி நல்லவனைக் காட்டிக் கொடுத்துச் சிறைப்படுத்திவிட்டானே என்று வருந்தினேன். அந்த மாணவன் வீர முழக்கம் செய்தபோது செடி முழுதும் மணம் கமழும் துளசிபோல் விரும்பத்தக்கவனாகத் தோன்றினான். காவவரை ஏய்த்துவிட்டு ஓடி வந்ததாகப் பெருமையடித்துக்கொண்டபோது, பூ மட்டும் மணம் கமழும் அரளிபோல் இருந்தான்; இப்படிக் காட்டிக் கொடுத்து நல்லவனுக்குத் தீமை செய்தான் என்று செய்தி கேட்டபோது, மணம் இல்லாத மலர்களைத் தாங்கும் குரோட்டன் செடியே நினைவுக்கு வந்தது.
இந்தச் செய்தி பரவிய பிறகு, மாணவர் ஒருவரை ஒருவர் கண்டாலும் ஐயுறத்தொடங்கினர். பேசினாலும் பிறர் கண்ணில் படாமல், பிறர் செவியிலும் கேளாமல் மெல்லப் பேசினர். மாலனும் பயந்து, “நாம் இருவர் அடிக்கடி பழகிப் பேசினாலும் வம்பு செய்துவிடுவார்கள். இன்னும் நான்கு நாள் தனித்தனியே இருந்து விடுவோம்” என்று சொல்லித் தன் அறைக்குப் போய்விட்டான்.
விடுதியில் முன்நாள் இருந்த உணர்ச்சியும் எழுச்சியும் மறுநாள் இல்லை. ஏதோ பேய் உலாவும் இடம் என்று சொல்லத்தக்கவாறு இருந்தது. எந்நேரமும் எக்களிப்பும் எள்ளி நகையாடலும் நிறைந்திருந்த உணவுக் கூடத்திலும் அமைதியும் அடக்கமுமே இருந்தன. எல்லாரும் நேரத்தோடு கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு வழக்கம் போல் இருந்துவிட்டு வந்தோம். அன்று மாலையும் விடுதி வெறிச்சென்றிருந்தது.
அடுத்தநாள் முதல் மெல்ல மெல்ல விடுதிக்கு உயிர் வந்தது எனலாம். எல்லோரும் கலகல என்று பேசும் குரல் கேட்டது. சீழ்க்கை அடித்தலும் படப் பாட்டுப் பாடலும் மெல்லமெல்லத் தொடங்கின. படிக்கும் பழக்கமும் ஏற்பட்டது. அந்த நல்ல மாணவன் மூன்று நாள் சிறையில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டான். என்ன நடந்தது என்று விரிவாகச் செய்தி வந்தது. கூட்டம் கூட்டியதாகவும் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்ததாகவும், பேசித் தூண்டியதாகவும் காவலர் குற்றம் சாட்டினார்களாம். முன் சொன்ன இரண்டிற்கும் தன் தொடர்பு இல்லை என்றும், பேசியது மட்டும் உண்மை என்றும், அந்தப் பேச்சிலும் எந்தச் செயலுக்கும் மாணவரைத் தூண்டியதில்லை என்றும் சொன்னானாம். கல்லூரித் தலைவரின் நற்சான்று கேட்டறிந்து பிறகு விடுதலை செய்து விட்டார்களாம். ஆனால் அந்த நல்லவனைக் காட்டி கொடுத்த குற்றவாளியைப் பற்றிய பேச்சே இல்லை. அவனை எல்லோரும் மறந்துவிட்டார்கள் காவலரை ஏய்த்துவிட்டது போலவே அவன் விடுதியில் உள்ளவர்களையும் ஏய்த்துவிட்டுக் கவலை இல்லாமல் இருந்தான்.
அடுத்த வாரத்தில் குறிப்பிடத் தகுந்த ஒரு நிகழ்ச்சி நடந்தது. சிறுநீர் அறைக்குப் பக்கத்தில் ஆரவாரம் கேட்டு உடனே அறையை பூட்டிவிட்டு அங்குச் சென்றேன். அதற்குள் அங்கே ஐம்பது அறுபது மாணவர்கள் கூடிவிட்டிருந்தார்கள். சந்திரன் குரல் உரக்கக் கேட்டது. அவனுடைய குரலில் ஆத்திரமும் இருந்தது. அதனால் உடனே கூட்டத்தின் உள்ளே நுழைந்து சென்றேன். சந்திரனுக்கு எதிரே அந்த நல்லவன் – சிறை சென்ற மாணவன் – அமைதியாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டேன். விடுதிச் செயலாளரும் வளர்ந்த மாணவர்கள் சிலரும் குழப்பத்தில் தலையிட்டு, “இங்கே வேண்டா, போகவர இடையூறாகவும் இருக்கிறது. தயவு செய்து படிப்பகத்துக்கு வாருங்கள். குழப்பம் இல்லாமல் அமைதியாக அங்கே பேசி ஒரு முடிவுக்கு வருவோம். நமக்குள் இப்படிப் போரிட்டுக்கொண்டால் நல்லதா? விடுதியில் இருப்பவர்கள் ஒரு குடும்பம்போல் வாழ வேண்டாவா?” என்றார்கள்.
சந்திரன் “சரி” என்று அவர்களுக்கு இணங்கினான். அவனுக்கு ஒரு துணை உண்டு என்று காட்டுவதுபோல் நான் அவன் பக்கம்போய் நின்றேன்.
ஆனால் மற்றவன் வரமறுத்தான். “இதோடு விட்டுவிடுங்கள். வேண்டுமானால், நான் சொன்னது தப்பு என்று ஒப்புக்கொள்கிறேன். இனிமேல் அப்படி யாருக்கும் நல்லதும் சொல்வதில்லை. விட்டுவிடுங்கள்” என்றான்.
வளர்ந்த மற்ற மாணவர்கள் அவனை நோக்கி, “அப்படி அல்ல. இந்த அளவில் விட்டுவிட்டால், உங்கள் இருவர்க்கும் மனக்கசப்பு இருந்துவரும், ஒருவரை ஒருவர் பார்க்கும்போது நன்றாக இருக்காது. ஆகையால் தயவு செய்து நாங்கள் சொல்வதைக்கேட்டு, எங்களுக்காக, விடுதியின் நன்மைக்காக எங்களோடு வரவேண்டும்” என்றார்கள்.
அதன் பிறகுதான் அந்த மாணவன் வந்தான். அவன் தூய வெள்ளைக் கதர் உடுத்து, அமைதி பொலியும் முகத்தோடு விளங்கினான். அவனிடத்தில் குற்றம் ஒன்றும் இருக்கமுடியாதே என்று எண்ணினேன். ஆனாலும் என்னோடு உடன் படித்த காரணத்தாலும், எங்கள் ஊர்ப்பக்கத்திலிருந்து வந்தவன் ஆகையாலும், சந்திரன் சார்பாகவே இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆகவே, சந்திரனுக்குப் பக்கத்தில் அவனுடைய வலக்கைபோல் பெருமித உணர்ச்சியோடு நடந்து சென்றேன். மாணவர்களும் கூட்டமாக வந்தார்கள்.
படிப்பகத்தில் உட்கார்ந்தவுடன், செயலாளர் சந்திரனைப் பார்த்து, “ஆத்திரம் இல்லாமல், கோபம் இல்லாமல், நடந்ததைச் சொல்லுங்கள்” என்றார். அந்தக் கதர் மாணவனைப் பார்த்து, “அதுவரையில் நீங்கள் கேட்டிருங்கள். ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் பிறகு சொல்லுங்கள்” என்றார்.
உடனே, கதர் மாணவன், “சொல்லாமலே இருக்க முடியும்” என்றான்.
சந்திரன் சொல்லத் தொடங்கியதும் நான் ஆவலுடன் கேட்டேன். “நான் சிறுநீர் அறைக்குப் போயிருந்தேன். சிறுநீர் கழித்துவிட்டு வெளியே வந்தேன். இந்த ஆள் உள்ளே நுழைந்தார். உடனே வெளியே வந்து என்னைக் கூப்பிட்டார். ‘ஒன்றுக்குப்போனீர்களே, தண்ணீர் பிடித்துக் கொட்டினீர்களா?’ என்று என்னைக் கேட்டார். “நான் இல்லை என்றேன்” இவ்வாறு அவன் சொன்னதும் கதர் மாணவன் குறுக்கிட்டு “அல்ல, அப்படிச் சொல்லவில்லை. அது என் கடமை அல்ல என்று கோபத்தோடு கூறினார்” என்றார்.
உடனே செயலாளர், “நீங்கள் கடைசி வரையில் பொறுத்திருந்து பிறகு பேசுவதாக ஒப்புக்கொண்டு, இப்போது குறுக்கிட்டீர்களே” என்றார்.
“பிறகு மறந்துவிடுவேனோ என்று இப்போதே சொன்னேன்” என்றான் கதர் மாணவன்.
மாணவர்கள் மேலும் பலர் வந்து சேர்ந்து வழியெல்லாம் நெருங்கி நின்றனர்.
(தொடரும்)
முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு
Comments
Post a Comment