Skip to main content

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 28

 

அகரமுதல




(அகல் விளக்கு – மு.வரதராசனார். 27. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 12

நாடகம் சிறப்பாக நடைபெற்றது. சந்திரனுடைய நடிப்பு எல்லோரும் போற்றத்தக்க வகையில் இருந்தது. கதைத் தலைவியாகிய சிவகாமி ஆண் உடை உடுத்துவெளியே செல்லவேண்டி நேர்ந்தது. பெண் உடையில் பெண்ணாக நடித்த சந்திரன், அந்த ஆண் உடையிலும் அருமையாக நடித்தான். வெளிக் கல்லூரி மாணவரும் மாணவியரும் பலர் வந்திருந்தார்கள். அவர்கள் சந்திரனுடைய நடிப்பை மிகப் போற்றினார்கள்.

சந்திரனுடைய நடிப்பு முடிந்து ஒவ்வொரு காட்சியிலும் திரை விடப்பட்டபோதெல்லாம், கைத்தட்டு அரங்கு அதிரும்படியாக இருந்தது. நாடகத்தில் சிறந்த நடிகரைத் தேர்ந்தெடுப்பதற்கு மூவர் நடுவணராக இருந்தனர். அவர்கள் மூவரும் ஒரு முகமாகச் சந்திரனையே முதற் பரிசுக்கு உரியவனாகத் தேர்ந்தெடுத்தனர். பரிசு வழங்கிய தலைவர் சந்திரனை மிகப் பாராட்டி, அவன் கலையுலகத்துத் திங்களாக விளங்க வேண்டும் என்று வாழ்த்திப் பரிசு வழங்கினார். பரிசு வழங்கிய போதும் சந்திரனுக்காகவே, கைத்தட்டு அளவு கடந்திருந்தது.

விழா முடிந்தவுடன் கூட்டம் கலைந்து சென்றது. எல்லோரும் போகட்டும் என்று நான் பின் தங்கினேன். மாலன் என்பின் வந்து தோள்மேல் கைவைத்து, “என்ன வேலு! போகலாமே, இன்னும் என்ன?” என்றான்.

“பரிசு பெற்ற சந்திரன் எனக்கு வேண்டியவன். அவனைப் பார்த்து என் மகிழ்ச்சியைத் தெரிவிக்காமல் போவது நல்லதா?” என்றேன்.

“அவன் வெளியே வர இன்னும் சிறிது நேரம் ஆகுமே” என்றான்.

“ஆகாது, வந்துவிடுவான்” என்று நாடக அரங்கிலிருந்து வரும் வழியில் காத்துக்கொண்டிருந்தோம்.

அங்கே எங்களுக்கு வலப்புறத்தில் நாலைந்து பெண்கள் வெளிக் கல்லூரி மாணவியர் காத்திருக்கக் கண்டேன். அவர்களும், “நேரம் ஆகுமோ என்னவோ” என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் சந்திரன் விரைந்து வந்தான். வழியில் நின்ற என்னைப் பார்த்தான். ஆனால் அவனுடைய கண்கள் யாரையோ தேடின. என்னைக் கடந்து அந்தப் பெண்கள் இருந்த இடத்திற்குச் சென்று, “மிகவும் நன்றி! எவ்வளவு நேரம் இருந்தீர்கள்” என்றான். அவர்களுள் ஒருத்தி “மிக மிக நன்றாக இருந்தது உங்கள் நடிப்பு; பெரிய வெற்றி. எங்களுடைய பாராட்டுக்கள். அடுத்த வாரத்தில் எங்கள் நாடகத்திற்கு நீங்கள் தவறாமல் வரவேண்டும்” என்றாள். மற்றப்பெண்களின் முகத்திலும் புன்முறுவல் இருந்தது. அவர்கள் புறப்பட்டார்கள். சந்திரனும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.

“இன்னும் இருக்கவேண்டுமா?” என்று மாலன் கேட்டான்.

“சரி, போகலாம்” என்று ஒரு பெருமூச்சு விட்டு நகர்ந்தேன்.

“இதுதான் காதல்” என்றான் மாலன்.

என் மனம் அதை வேடிக்கையாகக் கொள்ளவில்லை. பெருங்காஞ்சி சாமண்ணா சொன்ன சொல் நினைவுக்கு வந்தது. நம் சந்திரனா இப்படி ஆனான்? என்னைப் பார்த்தும் பேசாமல் அந்தப் பெண்களின் பின் ஓடினானே என்று எண்ணிக் கொண்டே வந்தேன்.

உணவுக் கூடத்திற்குச் சென்று உண்ட பிறகு சந்திரனுடைய அறைப்பக்கம் சென்று எட்டிப் பார்த்தேன். சந்திரன் இருந்தான். பலர் அவனைச் சூழ்ந்து நின்று பாராட்டிக்கொண்டும் சிரித்து ஆரவாரம் செய்துகொண்டும் இருந்தார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து அவனெதிரில் நின்று புன்முறுவலால் பாராட்டிவிட்டுத் திரும்பினேன்.

நாடகம் முடிந்த பிறகு நாள்தோறும் சந்திரன் இரவில் உட்கார்ந்து படிக்கத் தொடங்கினான். ஆனால் அவனுடைய அறையில் யாரேனும் போய்ப் பேசிக்கொண்டிருந்ததையே பெரும்பாலும் கண்டேன். பகலில் சந்திரனை அவனுடைய அறையில் காண்பது அரிதாயிற்று. மாலையில் நானும் மாலனும் எறிபந்து, உதைபந்து முதலிய ஆட்டங்களில் ஈடுபட்டோம். சந்திரன் அங்கும் வருவதில்லை. இடையிடையே காண நேர்ந்தபோது, என்றேனும் ஒருநாள், “என்ன செய்தி? நன்றாகப் படிக்கிறாயா?” என்று கேட்பான். நானும், “உன் படிப்பு எப்படி இருக்கிறது?” என்று கேட்பேன். அந்த அளவில் எங்கள் உறவு நின்றது. நானாக வலிய அவனுடைய அறைக்குச் சென்றாலும் என்ன பேசுவது என்று தெரியாமல் சும்மா இருந்துவிட்டு வந்தேன். ஏதாவது தொடங்கிப் பேசினாலும், பேச்சில் அவன் அவ்வளவாக ஈடுபடாமல், புறக்கணித்தாற்போல் இருந்தான். இவ்வாறு எங்கள் உள்ளங்களுக்கு இடையே ஏதோ ஒரு திரை இருந்து வந்தது.

ஒரு நாள் காலையில் நான் படுக்கையை விட்டு எழுந்தவுடன் வெளியே மாணவர்கள் இங்கும் அங்கும் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்ததைக் கண்டேன். என் அறைப்பக்கம் ஒருவன் தலைநீட்டி “இன்று கல்லூரிக்கு யாரும் போகக்கூடாது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்” என்று சொல்லிவிட்டு விரைந்து பக்கத்து அறைக்குச் சென்று அங்கும் அவ்வாறே சொல்லிவிட்டு விரைந்தான். என் மனம் அமைதி இழந்தது. “எவ்வளவு துன்பம்! காலம் எல்லாம் இப்படிச் சிறைக்குப் போய்க்கொண்டே இருந்தால், அவருடைய வாழ்க்கை என்ன ஆவது?” என்று அவருடைய வாழ்வுக்காக இரக்கப்படுவது போல் கலங்கினேன். என்னுடைய அனுபவமும் காந்தியடிகளைப் பற்றி அறிந்த அறிவும் அந்தக் காலத்தில் அவ்வளவுதான் இருந்தது. அடுத்த ஆண்டில் திரு.வி.க. எழுதிய “காந்தியடிகளும் மனிதவாழ்க்கையும்” என்ற புத்தகத்தைப் படித்த பிறகுதான், அவருடைய உண்மையான பெருமையையும் உயரிய குறிக்கோளையும் உணர்ந்தேன்.

அறையைப் பூட்டிவிட்டு வெளியே சுற்றி வந்து பார்த்தேன். சில மாணவர்கள் கண்கலங்கி உட்கார்ந்திருந்தார்கள். வேறு சிலர், “படிப்பும் வேண்டா, மண்ணாங்கட்டியும் வேண்டா. ஆங்கிலேயனைத் தொலைத்து விட்டுத்தான் மறுவேலை” என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னும் சில மாணவர்கள், “இன்றைக்கு ஒரு விடுமுறை; நம்பாடு கொண்டாட்டம் தான். நல்ல படத்திற்கு(சினிமாவுக்கு)ப் போகலாம்” என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். மற்றும் சிலர், “நம் தலைமுறையில் ஒரு பெரிய உத்தமரைப் பெற்றிருக்கிறோம். திருவள்ளுவர், புத்தர், ஏசு, திருநாவுக்கரசர் காலத்தில் நாம் இருந்திருந்தால் அவருடைய அடியாராகி அவர் வழியில் நடக்கமாட்டோமா? காந்தியடிகள் காலத்தில் நாம் பிறந்து வாழ்ந்தும், இப்படிப் பயன் இல்லாத கல்லூரிப் பட்டத்துக்காக நல்ல வாய்ப்பை நெகிழவிடலாமா?” என்று வருந்திக் கொண்டிருந்தார்கள். மாணவர் இருவர், பெட்டி படுக்கை எல்லாம் சுருட்டிக்கொண்டு ஊர்க்குச் செல்ல ஆயத்தம் ஆனார்கள்.

“எங்கள் ஊருக்குப் போய் அங்கே சத்தியாக்கிரக இயக்கத்தில் சேர்ந்து சிறைக்குப் போகப்போகிறோம்” என்று சொன்னார்கள். ஒரு மாணவன் புத்தகம் முதலியவற்றைத் தன் நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு, சென்னையில் உள்ள சத்தியாக்கிரகக் குழுவை நாடிப் போய்விட்டதாகக் கேள்விப்பட்டேன். அந்த நிலையில் மாலன் வந்து என்னோடு கலந்து கொண்டான். அவனிடம் நான் சில செய்தி சொல்லுமுன்பே அவன் பல செய்திகளைச் சொல்லத் தொடங்கினான். “பெரும்பாலும், தேர்வுக்கு நன்றாகப் படிக்காத மாணவர்கள் தான் இதில் மிகுதியாக ஈடுபடுவார்கள். நீ பார். தேர்வுக்குப் போய்த் தவறிவிட்டுப் பெற்றோரிடம் கெட்ட பெயர் வாங்குவதைவிட இப்படி இயக்கத்தில் ஈடுபட்டுப் பத்திரிகையில் நல்லபெயர் வாங்கலாம் என்பது அவர்களுடைய திட்டம்” என்றான். நான் உடனே மறுத்தேன். அவன் ஆணித்தரமாகப் பேசினான். “பொய்,பொய்” என்று உறுதியாக மறுத்தேன்.

ஒன்பது மணிக்குள் விடுதி மாணவர்கள் கல்லூரியின் எதிரே திரண்டுவிட்டார்கள். இன்று கல்லூரிக்குள் யாரும் நுழையக்கூடாது என்று வெளியே இருந்து மாணவர்களுக்குச் சொல்லித் தடுத்தார்கள். என் வகுப்பில் கற்கும் மாணவர் சிலர் என்னிடம் வந்து, “என்ன செய்வது?” என்று கேட்டார்கள். “நம் நாட்டுப் பெரியவர் இப்படி அடக்குமுறை செய்து அவரைத் தண்டித்தபோது, நாம் வகுப்புக்குப் போய் இருப்பது நல்லது அல்ல. இன்று ஒரு நாளாவது நம்முடைய வருத்தத்தை தெரிவிக்கவேண்டும்” என்றேன்.

ஆனால் மாணவர் பலரிடையே வருத்தம் இருந்ததாகத் தெரியவில்லை. மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். தம் வேண்டுகோளை மீறிக் கல்லூரிக்குள் சென்றவர்களைப் பார்த்து, “கருங்காலிகள்” என்று கூச்சலிட்டு அவர்கள் திரும்பிப் பார்க்காதவாறு செய்தனர். பலர் முகத்தில் புன்முறுவல் இருந்தது. எள்ளி நகையாடும் மனநிலை அவர்களிடம் இருந்ததை உணர்ந்தேன். காந்தியடிகளுக்காகச் செய்வதைவிட, தங்கள் வாழ்க்கையில் ஒரு மாறுதல் காணவேண்டும் என்று செய்ததாகத் தெரிந்தது. அந்த மாறுதலைக் கட்டுப்பாடாக எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்றும், கட்டுப்பாட்டை மீறுகின்றவர்களை இகழ்ந்து பேசவேண்டும் என்றும் அவர்கள் கருதினார்கள். உண்மையான துயரத்தோடு காந்தியடிகள் துன்பத்தில் பங்கு கொண்டவர்கள் போல் முகம் வாடிச் சோர்ந்து நின்றவர்களும் சிலர் இருந்தார்கள்.

முதல் வகுப்புக்கு உரிய மணி அடித்தது. மாணவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வகுப்புக்குப் போவது தம் கடமை என்று ஆசிரியர்கள் சென்று உட்கார்ந்திருந்தார்கள். ஊர்வலம் போல் கூட்டமாகக் கல்லூரியைச் சுற்றிவர வேண்டும் என்று சிலர் விரும்பினார்கள். அவ்வாறே எல்லாரும் உடன்பட்டுக் கூடினார்கள். சுற்றி வந்தபோது வகுப்பறைகளில் சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் கண்டபோது கூட்டத்தில் பலர் ஆரவாரம் செய்தார்கள். குறும்புப் பெயர்களிட்டுக் கூவினார்கள். “கருங்காலிகள் ஒழிக” என்றார்கள். வெள்ளைக்காரர்களின் வால்கள் ஒழிக” என்றார்கள். “ஆங்கிலேயர்களின் அடிமைகள் ஒழிக” என்றார்கள். கூட்டம் சுற்றி வந்து ஒரு மரத்தடியில் நின்றது. உயரமான ஒரு மாணவன் – கதர் அணிந்தவன் – “காந்தியடிகள் வாழ்க” என்று மும்முறை முழங்கினான். “மாணவ நண்பர்களே!” என்று விளித்தான். கூட்டம் அமைதியடைந்தது.

“இன்று எந்தப் பெரியவருக்காக – உத்தமருக்காக – தலைவர்க்காக – நாம் வருத்தம் தெரிவிக்கக் கூடியிருக்கிறோமோ, அவருடைய கொள்கைகளை உணராமல் வீண் ஆரவாரம் செய்கிறோம். ஆசிரியர்களையும் சில மாணவர்களையும் எள்ளி நகையாடுகிறோம். ஏதோ மகிழ்ச்சிக் கொண்டாட்டம் போல் முகம் மலர்ந்து முழங்குகிறோம். வெள்ளைக்காரர் அழியவேண்டும் என்று காந்தியடிகள் விரும்பவில்லை. ஆனால் நம்முடைய ஆசிரியர்களும் நம்முடன் படிக்கும் மாணவர்களும் அழியவேண்டும் என்று ஆரவாரம் செய்கிறோம். இந்த ஒரு நாளாவது அவருடைய தூய கொள்கைகளை உணர்ந்து, அமைதியாக இருந்து நம்முடைய வருத்தத்தைத் தெரிவிக்கும் படியாகக் கேட்டுக்கொள்கிறேன்” என்றான்.

சிறிது நேரம் அமைதி நிலவியது. பிறகு மற்றொரு மாணவன் தன் கைகளை உயர்த்தி, “காந்தியடிகள் வாழ்க” என்று சிலமுறை முழங்கியபிறகு, வீரமாகப் பேசினான். முடிவில், “இந்தக் கூட்டம் இப்படியே கடற்கரை வரைக்கும் ஊர்வலமாகச் செல்லவேண்டும்” என்று வற்புறுத்திக் கூறினான். “ஆமாம்”, “இப்பொழுதே புறப்படுவோம்” “தயார் தயார்” என்று பல குரல்கள் எழுந்தன.

கூட்டம் கல்லூரி எல்லையைக் கடந்து வெளியே செல்லப் புறப்பட்டது. சில மாணவர்கள் அதில் கலந்து கொள்ளாமல் விடுதியை நோக்கி வந்தனர். முதலில் பேசிய அந்த உயரமான மாணவரும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல், வாடிய முகத்துடன் விடுதியை நோக்கி நடந்தார். மாலன் என்னைப் பார்த்து, “இதோ பார்த்தாயா? காந்தி பக்தர் போல் பேசினார். ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் விடுதிக்குப் போகிறார் இப்படித்தான் எல்லாம்” என்றான்.

“அதில் தவறு என்ன? அவர் ஊர்வலம் போகவேண்டும் என்று சொன்னாரா? பிறகு அதன்படி நடக்கவில்லையா? அவருக்கு ஊர்வலம் விருப்பம் இல்லை. அதனால் கலந்து கொள்ளவில்லை” என்றேன்.

“நீ ஊர்வலத்தில் கலந்துகொள்ளப் போகிறாயா, இல்லையா?”

“இல்லை?”

“அப்படியா? நான் கலந்துகொள்ளலாம் என்று எண்ணினேன்.”

“அப்படியானால் நீ மட்டும் போய்வா”

“இல்லை, நீ வராததால் நான் மட்டும் ஏன் போகவேண்டும்? நானும் விடுதிக்கு வருவேன்.”

“வேண்டுமானால், சிறிதுநேரம் சாலையிலிருந்து ஊர்வலத்தைப் பார்த்துவிட்டு வரலாம். அதற்கு வேண்டுமானால் வருவேன்.”

இவ்வாறு நான் சொன்னதும், “சரி, அதுதான் வேண்டும். சும்மா பார்த்து வருவதற்குத்தான் போகலாம் என்று இருந்தேன். இல்லையானால், நாம் போவதால் நாட்டுக்கு விடுதலை வந்துவிடப்போகிறதா?” என்றான்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்