போர்கள் 2. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 28 – தொடர்ச்சி)
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 29
15. போர்கள் (தொடர்ச்சி)
சங்கக்காலத் தமிழரசர்கள் அமைதி நோக்கோடு அருள் நோக்கமும் உடையவராவர். இக்காலத்தில் இரு பகைநாடுகள் போரிலீடுபட்டிருக்கும்போது அவ்விரு நாடுகளையும் சாராது, இரு நாட்டுப் படைகளிலும் துன்புறுவோர்க்குச் ‘செஞ்சிலுவைச் சங்கம்’ எனும் அருள்நெறி அமைப்பு அன்போடு சென்று ஆம் உதவிகளைச் செய்கின்றது. இது போன்றே அக்காலத்தில் உதியன் சேரலாதன் எனும் சேரநாட்டுப் பெருமன்னன், பாரதப் போர் நிகழ்ந்த காலத்து, பாண்டவர் கௌரவர் எனும் இருசார் மன்னரின் படைகளுக்கும் பெருஞ்சோறு அளித்து அறச்செயல் ஆற்றியுள்ளான். இச் செயலை முரஞ்சியூர் முடிநாகர் ஆயர் எனும் பெரும் புலவர்,
“ அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” (புறநானூறு -2)
எனப் பாராட்டினார்.
உதியன் சேரல் வழிவந்த இளங்கோ அடிகள் கற்றோர் நெஞ்சைக் கவரும் சிலம்பில்,
“ஓரைவர்ஈரைம்பதின்மர் உடன்றெழுந்த போரிற்
பெருஞ்சோறுபோற்றாது தானளித்த சேரன்”
(சிலம்பு:29,ஊசல்வரி)
எனச் சிறப்பித்துள்ளார்.
உதியன் சேரல் ஆதன், இவ்வாறு பலரும் பாராட்டும் வகையில் ‘பெருஞ்சோறு’ அளித்த காரணத்தால் ‘பெருஞ்சோற்று உதியன்’ என அழைக்கப் பெற்றுள்ளான். வரலாற்றாசிரியர்களிற் சிலர் இப் பெருஞ் சோறளித்த செய்தியைப் புலவரின் கற்பனையால் எழுந்தது என்று புறத்தே தள்ளுவர். ஆனால், பாரதக் கதை உண்மையாக நடந்த வரலாறே என்பர். பாரதக் கதை உண்மையாக நடந்த வரலாறாக இருப்பின் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியும் உண்மை என்று கொள்வதில் தடையென்னை? உண்மை என்று கொண்டால் தமிழர்க்கு உண்டாகும் புகழை நினைந்து உளம் புழுங்கிப் பொய்யென மறுக்க முயல்கின்றனர் போலும் !
அக் காலப் புலவர் பெருமக்களும் சான்றோரும் போர் நிகழாது தடுத்து அமைதியை நிலைநாட்டுவதில் கண்ணுங் கருத்துமா யிருந்துள்ளனர்.
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கு வீற்றிருந்த காலத்து இருவரையும் நோக்கி “ இன்றே போல்கநும் நட்பு” என வாழ்த்திக் கூறியுள்ள அறிவுரை இருவரையும் என்றும் நட்பினராக்கும் ஆற்றல் மிக்கதாகும். “புலிக்கொடியும் மீனக்கொடியும் சேர்ந்தே பறக்கட்டும்” என்று நட்பரசினர் ஒழுகலாற்றைப் புலப்படுத்தும் சீர்மை இன்றும் பாராட்டற்பாலது.
“ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர், இருவீரும்
உடல்நிலை திரியீ ராயின் இமிழ்திரைப்
பௌவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே” (புறநானூறு -58)
என “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” எனும் கொள்கையால் வரும் நன்மையை எடுத்துரைத்து வேண்டியுள்ளமை அக்காலப் புலவரின் அமைதி நிலைநாட்டும் தொண்டை நன்கு அறிவிக்கின்றது.
அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் தொண்டை மானுக்கும் இடையே நிகழவிருந்த போரை ஔவையார் தமது “ இவ்வே பீலி யணிந்து” எனும் அங்கதம் பொருந்திய நயமிக்க பாட்டால் தடுத்து நிறுத்திய செய்தி நாடு அறிந்த ஒன்றாகும்.
சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் போர் நடந்த காலத்து இருவரையும் நோக்கிக் கோவூர்கிழார் எனும் அமைதிப்பெரும் புலவர்,
“இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே,
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே,
ஒருவீர் தோற்பினும் தோற்பதும்உங் குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்
குடிப்பொ ருளன்றுநும் செய்தி; கொடித்தேர்
நும்மோ ரன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும்இவ் விகலே”
(புறநானூறு -45)
எனத் தருக்க முறையில் உண்மை நிலையை விளக்கி அவர்களை ஒன்றுபடுத்திய செயலைத் தமிழுலகம் அறியும். இவ்வாறெல்லாம் புலவர்கள் அமைதிக் கொள்கையைப் பரப்பி வந்தமையால் மக்கள் எல்லோரும்
“இருமுந்நீர்க் குட்டமும், வியன்ஞாலத் தகலமும் வளி
வழங்கு திசையும் வறிது நிலைஇய காயமும்” பற்றி ஆராய்ச்சி நடத்தும் வாழ்வில் ஈடுபட்டனர். அறிவும் ஈரமும் பெருங்கண்ணோட்டமும் பெற்றிருந்தனர். அவர்கள் நாட்டில் “சோறுபடுக்கும் தீயும் செஞ்ஞாயிற்றுத் தெறலும்தான் இருந்தனவேயன்றி, அணுக்குண்டு, வளிக்குண்டு வெப்பங்கள் தோன்றில; வானவில்லைத்தான் அறிவார்களேயன்றிக் கொலைவில்லை யறிந்திலர். அம்புகள் அரண்களில் உறங்கிக்கொண்டிருந்தன. அறம் துஞ்சும் செங்கோல் ஆண்டது. மக்கள் எவ்வித நடுக்கமுமின்றி ஏமக்காப்புடையராய் இனிதே வாழ்ந்தனர். எங்ஙனமாவது போர் நிகழ்ந்தாலும் படைக்கும் படைக்குந்தான் போரே ஒழிய மக்களுக்கும் போருக்கும் நேரிடைத் தொடர்பு இராது. போர் தொடங்குவதற்குமுன் அறிவிப்புச் செய்து போரில் தொடர்பற்ற மக்களையும் மாக்களையும் போர் நிகழும் இடத்துக்கப்பால் இருக்கச் செய்துவிட்டே போர் தொடங்கும் நியதியை ஏற்றுக்கொண்டிருந்தனர். போர்ப்பறை கேட்டதும் மக்கள் தக்க காவல் இடத்தை அடைந்துவிடுவர். அவ்வாறு அடைய முடியாத ஆவும் பிறவும் காணப்படுமேல், அவற்றை படையெடுத்து வருவோரே அப்புறப்படுத்த முயல்வர். இவ்வாறு மக்களுக்குப் பயன்படும் ஆநிரையை அப்புறப்படுத்தலே பின்னர்ப் போர்த் தொடக்கத்தின் முதல் நிகழ்ச்சியாகி விட்டது.
அக் காலத்தில் மரங்களை வளர்த்தலில் எல்லாரும் கருத்து செலுத்தினர். அக் கருத்தை வலியுறுத்துதற்காக ஒவ்வோர் அரசரும் தங்களுக்கு விருப்பமான ஒரு மரத்தை வளர்க்கத் தொடங்கினர். அவ்வாறு அரசரால் வளர்க்கப்பட்ட மரம் சிறப்புறு காவலுக்கு உள்ளாயது. அதனால், அதற்குக் காவல் மரம் எனும் பெயர் உண்டாயது. போர் செய்ய விரும்பும் பகையசர், எந்த நாட்டின்மீது படையெடுக்க விரும்புகின்றாரோ அந் நாட்டு அரசரின் காவல் மரத்தை வெட்ட முயல்வார். பின்னர் இரு படைகளுக்கும் போர் உண்டாகி வெற்றி தோல்வியை அங்கேயே முடிவு செய்துவிடுவர். காவல்மரம் வெட்டப்பட்டுவிட்டால் அம் மரத்துக்குரிய அரசர் தோல்வியுற்றவராகக் கருதப்படுவர். இம் முறையால் படையிழப்பு மிகுதியாக இராது. மக்களுக்கும் தொல்லை இராது.
‘போர்’ எனின் படைகளும் வேண்டுமன்றோ? அக்காலத்தில் நான்கு விதப் படைகள் இருந்தன. அவை,
“கடுஞ்சினத்த கொல்களிறும்
கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும்
நெஞ்சுடைய புகல்மறவரும்” ( புறநானூறு -55)
எனப் பாராட்டிப் போற்றப்பட்டன. போர்க்களத்தில் பயன்படுத்திய கருவிகள் வில், அம்பு, வாள், தோல் (கேடயம்) முதலியன. இவற்றுள் பலவகையுண்டு. இக் கருவிகளைக் கொண்டு நால்வகைப் படைகளுடன் சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி பொருத காட்சியைப் பரணர் என்னும் பெரும் புலவர், வண்ணித்துள்ள பாடல் போர்க்கள நிலையை நம் அகக்கண்முன் அப்படியே கொண்டு வருகின்றது.
“வாள்,வலந்தர மறுப்பட்டன்ன
செவ்வானத்து வனப்புப்போன்றன.
தாள், களங்கொளக் கழல்பறைந்தன
கொல்லேற்றின் மருப்புப் போன்றன.
தோல், துவைத்து அம்பின்துளை தோன்றுவ
நிலைக்கு ஓராஅ இலக்கம் போன்றன.
மாவே, எறிபதத்தான் இடங்காட்டக்
கறுழ்பொருத செவ்வாயான்
எருத்துவவ்விய புலி போன்றன.
களிறு, கதவு எறியாச் சிவந்துஉராஅய்
நுதிமழுங்கிய வெண்கோட்டான்
உயிர்உண்ணும் கூற்றுப் போன்றன.
நீயே, அலங்குஉளை பரீஇஇவுளிப்
பொலந்தேர் மிசைப் பொலிவுதோன்றி
மாக்கடல் நிவந்துஎழுதரும்
செஞ்ஞாயிற்றுக் கவினை மாதோ
அனையை ஆகல்மாறே
தாயில் தூவாக் குழவி போல
ஓவாது கூஉம்நின் உடற்றியோர் நாடே.” (புறநானூறு -4)
இவ்வாறு நம் தமிழகத்துக்குள்ளேயே நிகழ்ந்த போர்களை அவை நிகழ்ந்த இடத்தின் பெயரால், வெண்ணிப்போர், தலையாலங்கானப்போர், கழுமலப்போர், மோகூர்ப்போர், தகடூர்ப்போர், பறம்புப்போர், ஆவூர்ப்போர், கோவலூர்ப்போர், கொடுகூர்ப்போர் என அழைக்கலாம். இவைபற்றிச் சங்க இலக்கியங்களால் ஒருவாறு அறியலாமேயன்றி விரிவாக அறிய இயலாது. இவற்றுள் வெண்ணிப்போரும் தலையாலங்கானப் போரும் பல புலவர்களால் பாடப் பெற்றவை. வெண்ணிப்போர் கரிகாலனுக்கும் ஆலங்கானப்போர் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் வெற்றித்திருவைக் கூட்டிவைத்தன.
தமிழக மூவேந்தர் மரபிலும் இமயம் வரையில் சென்று தத்தம் கொடிகளை இமயமலையில் நாட்டிப்புகழ் நிறுவியவர்களும் உளர். வில்,புலி,மீன் பொறித்த கொடிகள் பனிபடு நெடுவரையில் பறப்பதைக் கண்டு மகிழ்வதில் இன்பங் கண்டனர், அக்காலத் தமிழ்மக்கள்.
இவ்வாறு தம்மவரோடும் அயலவரோடும் போர் புரிந்து வாகை சூடுவதற்கு உதவியாகப் படைகளும் அவற்றை நடத்திச் செல்லும் படைத்தலைவர்களும் அன்று மிக்கிருந்தனர். “போர்எனிற் புகலும் புனைகழல் மறவர்” நாட்டுப் பற்று மிக்கோராய்,
“என்ஐமுன் நில்லன்மின் தெவ்வீர்; பலர்என்ஐ
முன்நின்று கல்நின் றவர்” (குறள்-771)
என மொழிந்து போரிட்டுப் புரந்தார் கண் நீர்மல்கச் சுழலும் இசைவேண்டி உயிரை வேண்டாராய்ப் போர்க்களத்தில் பொருது வீழ்ந்தனர். அவரைக் கல்லில் நட்டுக் கடவுளாய்ப் போற்றினர் நாட்டு மக்கள். வந்த போரை விடாது, வலியப் போர்க்குச் செல்லாது வாழ்ந்தனர் சங்ககாலத் தமிழர்.
Comments
Post a Comment